Monday, August 13, 2012

35 ஆயிரம் கோடி மாமூல் வாங்கியோர் சி.டி.!


அடையாளப்படுத்தும் முக்கிய அம்சமாக இருப்பது கனிமக் கொள்ளைதான் போலும்! ஆந்திராவில் நடந்தது மாபெரும் கொள்ளை. கர்நாடகாவில் ஆட்சியையும் முதலமைச்சர் களையுமே ஆட்டுவிப்பதும் இதுதான். வடகிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் பசுமை வேட்டைக்குத் தூண்டுதலாய் அமைந்ததும் கனிம வளங்கள்தான். அரசாங்கத்தின் சொத்தை தனியார் கொள்ளை அடித்துப் பதுக்கிக்கொள்வது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. தமிழகத்தில் இப்போதுதான் முதன்முதலாக இந்த முதலைகள் சிக்க ஆரம்பித்து உள்ளனர்! 
கனிம வளங்கள் குவிந்துகிடக்கும் நிலப் பகுதி மலையாக, காடாக, மூன்று போகம் விளையும் நிலமாக இருந்தாலும் அவை உடனடியாக தேசியச் சொத்தாக மாற்றப்படும். அதன் பின் அவை அடிமாட்டு விலைக்கு தனியார் முதலாளிகளுக்குக் குத்தகை என்ற பெயரில் தாரைவார்க்கப்படும். இப்படித்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. இதற்கு ஆப்பு

வைப்பதுபோல் ஒரு முடிவு எடுத்து கனிமக் கொள்ளையர்களைக் கதிகலங்க வைத்துள்ளது ஜார்கண்ட் மாநில அரசு.
ஜார்கண்ட் மாநிலத்தின் காத்குரி மற்றும் மேற்கு சிங்பும் பகுதிகள் இரும்புத் தாது நிரம்பிய மாவட்டங்கள். இங்கு இரும்புத் தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப்போகிறோம் என்று கூறி ஆறு தனியார் நிறுவனங்கள் மாநில அரசிடம் அனுமதி பெற்றன. பிறகுதான் அவை அனைத் துமே, இரும்புத் தாதுக்களை வெட்டி எடுக்கும் நிறுவனங்கள் என்பது தெரியவந்தது. உடனே அவர் களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ஜார்கண்ட் அரசு ரத்து செய்தது. ஜார்கண்ட் அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்த்து, தனியார் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா, ஹெச்.எல்.கோகலே ஆகியோர், 'கனிம வளங்கள் தேசிய சொத்து. தேசிய சொத்தைக் குத்தகைக்கு விடுவது, விடப்பட்ட குத்தகையை ரத்துசெய்வது போன்ற நடவடிக்கைகள் சுரங்கம் மற்றும் கனிம சட்டங்களுக்கு உட்பட்டது. இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. கனிம வளங்கள் உள்ள நிலம் தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தாலும், அவர்கள் அதை குத்தகைக்குப் பெற்றிருந்தாலும் நிலத்தில் கிடைக்கும் கனிமங்கள் அரசுக்குச் சொந்தமானவைதான். கனிம வளங்களை அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் கூட்டு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மற்றபடி வேறு யாரும் அதற்கு உரிமை கோர முடியாது’ என்று கூறி தனியார் நிறுவனங்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டனர். ஜார்கண்ட் அரசின் நடவடிக்கையையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்தில்கொண்டால், மதுரை கிரானைட் குவாரிகளுக்கும் இந்தத் தீர்ப்பு அப்படியே பொருந்தும்.
இந்த நிலையில், ''கிரானைட் குவாரி மோசடி வழக்கில் சிலதனியார் முதலாளிகள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்'' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதி உள்ளது தமிழ்நாடு கனிம வள நிறுவன ஊழியர் சங்கம். அதன் செயலாளர் விஜயனைச் சந்தித்தோம்.  
''அதிகாரிகளின் தில்லுமுல்லுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், டாமின் நிறுவனம் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தை 1979-ம் ஆண்டு, அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். இதன் பிரதான நோக்கம், கிராமப்புறவேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதும், மண்ணுக்கு அடியில் வீணாகப் புதைந்துகிடக்கும் கனிமங்களைக் கண்டுபிடித்து, அவற்றை வெட்டி எடுப்பதன் மூலம் நாட்டின் வருவாயை உயர்த்துவதும்தான். டாமின் தொடங்கப்பட்டபோது, அதன் முதலீடு 100 கோடி ரூபாய். கனிம வளங்களைக் கண்டுபிடிப்பதும், அவற்றை வெட்டி எடுத்து விற்பனை செய்வதும் முழுக்க முழுக்க டாமின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதேபோல், கனிம வளங்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்தாலும், தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் இருந்தாலும், அவை அரசுக்குத்தான் சொந்தம் என்ற நிலை இருந்தது.
10 ஆண்டுகளுக்கு முன்பு டாமின் நிறுவனத்தின் கொள்கையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, அரசுக்குச் சொந்தமான குவாரிகளில் உள்ள கனிமங்களை வெட்டி எடுக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், தனியார் பட்டா நிலங்களில் உள்ள கனிமங்களை நிலத்தின் சொந்தக்காரர்களே வெட்டி எடுத்து விற்பனையும் செய்யலாம் என்று விதிமுறைகள் மாற்றப்பட்டன. இவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை மட்டும் டாமின் அதிகாரிகள் தங்கள் வசம் வைத்திருந்தனர். இதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருந்ததைப்போல், தனியார் முதலாளிகள் தங்கள் தகிடுதத்தங்களை அரங்கேற்ற ஆரம்பித்தனர்.
டாமின் நிறுவனத்தில் கனிமங்கள் வெட்டி எடுக்கும் தனியார் நிறுவனங்கள், அதற்கு அருகிலேயே ஒரு பட்டா இடத்தை வாங்குவார்கள். அங்கு கிரானைட் கிடைக்கிறதோ இல்லையோ... அங்கும் கற்கள் வெட்டும் பணி நடைபெறும். அரசு குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் அனைத்தும் தனியார் குவாரிக்குக் கடத்தப்படும். பின், அந்தக் கற்கள் தனியார் குவாரியிலேயே வெட்டி எடுக்கப் பட்டதாகக் கணக்கு காண்பிக்கப்படும். இதை கண்காணித்துப் பதிவுசெய்ய வேண்டிய உதவி இயக்குனர் (சுரங்கம்), வருவாய்த் துறை கோட்ட மேலாளர் போன்றவர்களை தனியார் முதலாளிகள்  கவனித்துவிடுவார்கள். இதனால் அரசுக்கு வர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் தனியார் முதலாளிகளுக்குப் போய்ச்சேரும். உதாரணமாக மதுரையில் உள்ள அரசு டாமின் குவாரிக்கு 30 அடி தூரத்தில், அரசியல் செல்வாக்குள்ள மனிதரின் மகனுக்குச் சொந்தமான  கிரானைட் குவாரி உள்ளது. அரசு குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் எல்லாம், இந்தக் குவாரியில் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கணக்கு காண்பிக்கப் பட்டு உள்ளது.
இதேபோல், வேலூர் மாவட்டம் மகிமண்டலம் என்ற ஊரில் வெட்டி எடுக்கப்பட்ட 45 கன மீட்டர் அளவுள்ள கற்களை 3 க.மீ அளவுள்ள கற்கள் என்று போலியாகக் கணக்கு காட்டி உள்ளனர். ஒரு க.மீ. கறுப்பு கிரானைட் கல்லின் விலை 70 ஆயிரம் ரூபாய். அப்படியானால் அரசுக்கு எவ்வளவு இழப்பு என்று கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். அதேபோல், மேலூரில் பி.ஆர்.பி. நிறுவனம் 100 அடி ஆழத்துக்குக் கற்களை வெட்டி எடுத்துள்ளது. இதைப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.
இந்தத் தொழிலில், தனியார் நிறுவனங்கள் லாபம் மட்டும் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும்போது, தமிழக அரசின் கனிம வள நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளாக 100 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே லாபம் ஈட்டியுள்ளது. தனியார் முதலாளிகளின் கைக்கூலிகளாக அவர்கள் செயல் பட்ட காரணத்தால்தான், இத்தனை முறைகேடுகளும் நடந்தன. தற்போது, விதிமுறைகளை மீறி கொள்ளை லாபம் சம்பாதித்த சில தனியார் முதலாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அந்த முதலாளிகளின் கூட்டுக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். அதோடு முழுக்க முழுக்க கனிம வளத்தைத் தோண்டி எடுக்கும் பணிகளை முன்பு போல் அரசே செய்ய வேண்டும்'' என்றார் விரிவாக.
''மதுரை கலெக்டராக இருந்த சகாயம் ஒரு கணக்குப் போட்டு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார். ஆனால் மதுரை வட்டாரத்தில் இருக்கும் கனிம வளங்களைக் கணக்கிட்டு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் முறைகேடு நடந்துள்ளதாக முடிவுக்கு வந்துள்ளோம்'' என்று இப்போது சொல்லும் சில உயர் அதிகாரிகள், ''வருவாய்த் துறை, கனிமவளத் துறை, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு இதுவரை இந்த நிறுவனங்கள் எவ்வளவு செலவு செய்துள்ளன என்பதற்கான பட்டியலை சி.டி.யாக தயாரித்து வைத்துள்ளார்கள். டைரியில் எழுதியும் வைத்துள்ளார்கள். அதன் விவரங்கள் எங்களுக்குக் கிடைத்துவிட்டன. கடந்த 15 ஆண்டுகளாக இப்படி மாமூல் வாங்கிய மந்திரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் பட்டியல் பெரியது!'' என்கிறார்கள். இதனைத் தெரிந்துகொண்ட குவாரி அதிபர் ஒருவர், ஆட்சியை மிரட்டும் தொனியில் அதிகாரி ஒருவருக்கு போன் செய்து பேசியதாகவும் அவர் அதனை டேப் செய்து கோட்டைப் பிரமுகர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது அரசு நடவடிக்கையின் வேகத்தை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளது.
அதிரடி தொடரட்டும்!

No comments:

Post a Comment