Wednesday, August 8, 2012

அதிருது பெங்களூரு. டெரர் டெல்லி டீம். ஜெயலலிதா அதிர்ச்சி.


ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எழுதப்போகும் நீதிபதி யார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கான பதிலுக்காகப் பலரும் காத் திருக்கிறார்கள். அடுத்த நீதிபதி நியமனம் என்பது 100 சதவிகிதம் நீதித்துறையைச் சார்ந்தது என்றாலும், அதிரடியாக நடக்கிறது மூவ் லாபி! 
தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி, கர்நாடகத்தில் அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான பாரதிய ஜன தாவின் ஆட்சி, மத்தியில் கருணாநிதியின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சி என்ற மும்முனைப் போராட்டத்தில்தான், 'நீதிபதி’ நியமனம் சூடாகத் தகிக்கிறது.
'விடைபெறும் நீதிபதி... ஜெயலலிதா நிம்மதி..!’ என்று, கடந்த ஜூ.வி-யில் எழுதியபோது, 'ஸ்பெஷல் கோர்ட் நீதிபதிக்கு ஓய்வா? நோ... நெவர்!’ என்று எட்டுத் திக்கில் இருந்தும் எகிறின அலைபேசிகள். 
நான்முக சிங்கம்!
கடந்த 4-ம் தேதி, எப்போதும்போலவே சிரித்த முகத்துடன் சரியாக காலை 11 மணிக்கு கோர்ட் சேம்பருக்குள் நுழைந்தார் நீதிபதி மல்லி கார்ஜுனைய்யா. அன்று அவருக்குப் பிறந்த நாள் என்பதால், ஸ்பெஷல் கோர்ட்டில் அவருடன் பணியாற்றிய ஏழு பணியாளர்களும் வரி சையாக‌ நின்று வாழ்த்து தெரிவித்தன‌ர். அதன்பிறகு, பிரியாவிடை உபசரிப்பு நடந்தது. அந்த நிகழ்வில் பங்கேற்றவரிடம் பேசினோம்.
''பொதுவாக நீதிபதிகள் ஓய்வுபெறும் நேரத்தில் இறுகிய முகத்துடன் இருப்பார்கள். ஆனால், மல்லிகார்ஜுனைய்யா மகிழ்ச்சியாகவே இருந்தார். அன்று காலை 11.35 மணிக்கு நாங்கள்அனைவரும் சேர்ந்து டீ பார்ட்டி கொடுத்தோம். அதன்பிறகு, நீதிபதிக்கு மிகவும் பிடித்த நான்முகச் சிங்கத்தையும் (அசோகா பில்லர்), சட்டமேதை அம்பேத்கர் படத்தையும் பரிசாகக் கொடுத்தோம். அங்கேயே அன்பளிப்பைப் பிரித்துப் பார்த்தவர், 'எதுக்காக பணத்தை இப்படிச் செலவு பண்றீங்க?’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டார். அதன்பிறகு, ஒவ்வொருவரிடமும் சிறிது நேரம் மனம்விட்டுப் பேசினார். 
அதன்பிறகு, 'பிரியா விடையின் போது இயேசு கிறிஸ்து கடைசி இரவு விருந்து கொடுத்ததைப் போன்று உங்களுக்கு, மதிய விருந்து தரப்போகிறேன்’ என்று, எங்களுக்குப் பிடித்தமான உணவை ஹோட்டலில் இருந்து வரவழைத்து, எங்களோடு சேர்ந்து சாப்பிட்டார். அப்போதுவரை நீதிபதி ஸ்தானத்தில் இருப்பதால், மறந்தும்கூட புகைப்படம் எடுக்க அனுமதி கொடுக்கவில்லை. மூன்று ஆண்டுகள் அவரோடு பழகி இருக்கிறேன். பி.எம்.மல்லிகார்ஜுனைய்யா ரியலி ஹானஸ்ட் ஜென்டில்மேன்!'' என்று கரகர‌த்தார் அந்த ஊழியர்.
மல்லிகார்ஜுனைய்யா ஓய்வுபெற்று விட்டாலும், இம்மாத இறுதியில் தான் அதற்கான உத்தரவைக் கொடுக்க இருக்கிறார் கர்நாடக   உயர் நீதிமன்றப் பதிவாளர்!
பதவியை விரும்பாதவர்!
புதிய நீதிபதியை நியமிக்கலாமா அல்லது மல்லிகார்ஜுனையாவின் பதவிக் காலத்தை நீட்டிக்கலாமா? என்று தீவிர ஆலோசனையில் இருக்கிறதாம், கர்நாடக உயர் நீதிமன்றம். ஏனென்றால், '15 ஆண்டுகாலமாக நீண்டுகொண்டேபோகும் வழக்கை விரைந்து முடியுங்கள்’ என்று சுப்ரீம் கோர்ட் அடிக்கடி வலியுறுத்துகிறது. மேலும், புதிய நீதிபதியை நியமித்து, அவர் வழக்கை முழுவதுமாகப் படித்து அதன் தன்மையை அறிந்து, விசாரணையை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவதற்கு நிச்சயம் நீண்ட கால அவகாசம் தேவை. அதனால், புதிதாக தயார் செய்து இருக்கும் ஐந்து நீதிபதிகள்கொண்ட பட்டியலில் மல்லிகார்ஜுனைய்யாவின் பெயரும் இருக்கிறதாம். 'மல்லிகார்ஜுனையாவுக்குப் பதவி நீட்டிப்பு கொடுத்தால் ஏற்பாரா?’ என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டோம்.
'பதவிநீட்டிப்பு பெற அவருக்கு விருப்பம் இல்லை. ஒரு மகனாக,‌ கணவராக, தகப்ப னாக, குடும்பத்தோடு மீதிக்காலத்தை ஓட்டவே விரும்புகிறார். அத‌னால்தான், இதற்குப் பிறகு நுகர்வோர் நீதிமன்றத்துக்கு நீதிபதியாகும் வாய்ப்பு கிடைத்தபோதும், மறுத்துவிட்டார். இதுகுறித்து கடந்த மாதமே கருத்து கேட்கப்பட்டதாகவும், அப்போதே அவர் மறுத்து விட்டதாகவும்தான் சொல்கிறார்கள். ஒருவேளை சுப்ரீம் கோர்ட் கேட்டுக்கொண்டால் மட்டும் பதவியில் தொடர வாய்ப்பு இருக்கிறது'' என்றார்கள்.
பெங்களூரு வந்த டெல்லி மனிதர்கள்‍!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்குப் பதில் சொன்னதில் இருந்தே, ஜெயலலிதாவின் வழக்கை டெல்லி காங்கிரஸ்  மேலிடம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அரசுத்தரப்பு வக்கீல் ஆச்சார்யாவின் அட் வகேட் ஜெனரல் பதவி ராஜினாமா, நீதிபதி மல்லிகார்ஜுனையாவின் நியமனம் குறித்த மனு என ஒவ்வொன்றையும் தெளிவாக ஆராய்ந்து வந்தனர். இப்போது, நீதிபதி ஓய்வு பெறுவதால், அடுத்த கட்ட நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக, டெல்லியில் இருந்து மூன்று அதிகாரிகளை ரகசியமாக அனுப்பி இருக்கிறார்கள். அவர்கள் ஸ்பெஷல் கோர்ட் டிலும், உயர் நீதிமன்றத்திலும் நிலைமைகளைத் தீவிரமாக ஆராய்ந்து, அடுத்த வாரம் டெல்லி மேலிடத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறார்கள். இதுகுறித்து மேலும் தகவல்களை அறிய‌ ஸ்பெஷல் கோர்ட் வட்டாரத்தில் விசாரித்தோம்.
''டெல்லியில் இருந்து சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் மூன்று பேர் குழு வந்தது. அந்தக் குழு, கடந்த வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களும், வழக்கின் குற்றப்பத்திரிகையில் தொடங்கி, சாட்சிகளின் வாக்குமூலம், ஜெயலலிதா மற்றும் சசிகலா அளித்த‌ விளக்கங்கள், வ‌ழக்கின் தன்மை, பயணிக்கப்‌ போகும் திசை என அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டனர். மேலும், இது சென்சிட்டிவ்வான வழக்கு என்பதால் அடுத்து நியமிக்கப்போகும் நீதிபதிகளின் பட்டியலையும், அவர்களின் பின்புலங்களையும் விசாரித்துச் சென்றிருக்கிறார்கள். மேலும் அவர்கள் இப்போதைய நீதிபதி மல்லிகார்ஜுனையா பற்றி ஸ்பெஷல் ரிப்போர்ட் ஒன்றும் தயாரித்து உள்ளார்கள். இவர்கள் வந்து சென்றதைப் பார்க்கும்போது டெல்லி இந்த வழக்கை எவ்வளவு சீரியஸாகப் பார்க்கிறது என்று புரிகிறது'' என்றார்கள்.
என்ன சொன்னார் ஆச்சார்யா?
இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிந்துகொள்ள தி.மு.க-வும் அதீத ஆர்வமாக இருக்கிறது. அதனால், ஒரு வாரத்துக்கு முன்பே தி.மு.க-வின் வக்கீல்கள் அணி பெங்களூருவில் டேரா போட்டுவிட்டது. இதற்குத் தலைமை தாங்கி வழிநடத்தியது முன்னாள் தி.மு.க. அமைச்சர்  ஒருவர் என்கிறார்கள். இந்தத் தி.மு.க. படை, பெங்களூருவில் அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யாவைச் சந்தித்துக் கருத்துக் கேட்டதாம்.
அப்போது ஆச்சார்யா, ''மல்லிகார்ஜுனையா கொஞ்சம் ஸ்லோதான். ஆனால் ஹான்ஸ்ட். அவரை விட்டால் இந்த வழக்கை நேர்மையாகவும் விரைவாகவும் முடிக்க வேறு ஆள் யாருமே இல்லை''என்று ஒரே போடாகப் போட்டாராம். மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும், கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் மல்லிகார்ஜுனையாவுக்குப் பதவி நீட்டிப்பு கோரும் ரிட் மனு போடுவது பற்றி சில லீகல் டிப்ஸ்களையும் கொடுத்து அனுப்பினராம். ஆச்சார்யாவிடம் ஆலோசனை பெற்ற தி.மு.க. வக்கீல் அணி, இப்போது டெல்லியில் மையம் கொண்டுள்ளது. டெல்லி சட்டத் துறை மேலிடத்திட‌ம் தி.மு.க. சார்பில், 'மல்லிகார்ஜுனை யாவை மீண்டும் நீதிபதியாக நீட்டிக்க வேண்டும்’ என்று அழுத்தமான கோரிக்கை வைக்கப் பட்டு உள்ளதாம். வரும் வாரத்தில் இதற்காக சுப்ரீம் கோர்ட்டில் மனு போடவும் தயாராக இருக்கிறார்களாம்!
பெங்களூருவுக்கு விரைந்த ஜெ. படை!
பெங்களூருவிலும் டெல்லியிலும் தி.மு.க. செய்து வரும் 'லாபி’ நடவடிக்கைகளை, தமிழக உளவுத் துறை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. அதனால், அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா உஷார் ஆகி உள்ளதாகக் கூறப்படுகிறது.  உளவுத் துறையைச் சேர்ந்த சில நம்பிக்கையான அதிகாரிகளை பெங்களூருவுக்கு அனுப்பி இருக்கிறாராம். வக்கீல் அணியையும், தன்னுடைய சட்ட விவகாரங்களுக்கு ஆலோசனை வழங்கும் சட்டப் புள்ளியையும், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரையும் அனுப்பி இருக்கிறாராம். இந்த உளவுத் துறை அதிகாரிகள், கர்நாடக அரசை அணுகி இருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும், டெல்லி நடவடிக்கைகளைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள்.
ஆக, விறுவிறுவென நடக்கிறது, 'நீதிமன்ற நியமன’ அரசியல்!

No comments:

Post a Comment