Thursday, August 2, 2012

தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் மனதை மாற்றுகிறேனா?'' கட்டம் கட்டப்பட்ட சங்கீதா சீனிவாசன்



விஜயகாந்த்துக்குப் பெரும் குடைச்சலாக வர்ணிக்கப்படுகிறார் சங்கீதா சீனிவாசன். தே.மு.தி.க-வில் பெண்கள் வரிசையில் பிரேம லதாவுக்கு அடுத்த பெரும்புள்ளியாகச் சொல்லப்பட்ட சங்கீதா திடீரெனக் கட்சியைவிட்டே கட்டம் கட்டப்பட்டுவிட்டதுதான் அதிர்ச்சி. 
அதுபற்றி அவரிடமே விசாரிக்கலாம் என்று அவரது வீட்டுக்குச் சென்றோம். அவர் வீட்டில் இன் னமும் கம்பீரமாகப் பறக்கிறது தே.மு.தி.க. கொடி! கேட்டால், 'இத்தனை நாள் பறந்துச்சு. இன்னும் சில நாள் பறக்கட்டுமே. யார் என்ன செஞ்சிடுவாங்க?’ - கணீர்க் குரலில் பதில் வருகிறது. அதுதான் சங்கீதா சீனிவாசன். திருவள்ளூர் மாவட்ட தே.மு.தி.க. மகளிர் அணித் தலைவியாக இருந்த சங்கீதாவை, திருவள்ளூர் ஈக்காடு கிராமத்தில் சந்தித்தோம்...
''உங்கள் மீது விஜயகாந்த்துக்கு அப்படி என்ன கோபம்?''
''இதை நீங்க அவங்ககிட்டதான் கேட்கணும். சத்தியமா, அது எனக்குத் தெரி​யாது. அந்தக் கட்சியில் ஜனநாயகம் இல்லை. பண​நாயகம்தான் இருக்கு. செயற்குழுவும் கிடையாது. பொதுக்குழுவும் கிடையாது. கேப்டன்தான் கட்சி, கட்சிதான் கேப்டன்னு நடந்துக்கிறவங்ககிட்ட போய் என்னத்தைக் கேட்கிறது? என் மேல ஏதாவது தப்புன்னா என்னைக் கூப்பிட்டு விளக்கம் கேட்டுட்டு, அதுக்கு அப்புறம் நடவடிக்கை எடுத்து இருக்கணும். அதானே ஒரு பொறுப்பான தலைவருக்கு அழகு. அவரைச் சுத்தி உள்ளவங்க தப்புத் தப்பா சொன்னதைக் கேட்டு நடவடிக்கை எடுக் கிறார். இனி, கேப்டனே வலிய வந்து கூப் பிட்டாலும், அந்தக் கட்சிக்குப் போக மாட் டேன். 'ஆறு போவதே போக்கு. அரசன் சொல்வதே தீர்ப்பு’னு கட்சி நடத்துறாங்க. இப்படி கட்சி நடத்தினா, கடைசியில் ஒருத்தர்கூட மிஞ்ச மாட்டாங்க. ' தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியம் கைதுக்கு சந்தோஷப்பட்டு கிடா விருந்து வெச்சேன்’, 'அடுத்த கட்சிக்கு ஆள் பிடிச்சேன்’னு யார் யாரோ இஷ்டம் போல கதை கட்டிவிட்டாங்க. அது எதுவும் உண்மை இல்லை!''
''ஓ.பன்னீர்​செல்​வத்​துடன் உங்களுக்கு நல்ல அறிமுகம் உண்டு என்றும், தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் சிலரை அ.தி.​மு.க​-வுக்கு இழுக்கும் ஒரு மெகா திட்டத்தை அவர் உங்களிடம் கொடுத்து இருந்த​தாகவும் சொல்கிறார்​களே?''
''அமைச்சர் ஓ.பி.எஸ்-ஸை இதுவரை நான் பார்த்ததும் இல்​லை, பேசியதும் இல்லை. அந்த மாதிரி வேலை பார்ப்பது என் குண​மும் கிடையாது. இருக்கும் இடத்துக்கு விசு​வாசமா இருப்பேன். மாவட்டச் செய​லா ளருக்கு இணையா எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செஞ்​சேன். இது தப்பா? ஆரோக்​கியமான போட்​டியைப் பிடிக்காத சிலர்தான் என்னை ஒழிச்சுக்கட்டுறதுக்காக சதி பண்ணி கட்சியை​ விட்டுத் தூக்கிட்டாங்க.''
''விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா​வுக்கு உறவினர் என்று சொல்லி கட்சியில் அதிகாரம் செய்ததாகச் சொல்​கிறார்​களே?''
''என் உறவினர்தான் அவங்க! வேலூர் மாவட்டம் தோட்டாலம் கிராமம்தான் என் சொந்த ஊர். எங்க அப்பாவோட மாமா பொண்ணு அவங்க. ஆனா, சொந் தம்​கிறதுக்காக மட்டும் எனக்குப் பதவி கொடுக்கலை. நானா உழைச்சுத்தான் முன்னுக்கு வந்தேன். சின்ன வயசுல இருந்தே நான் கேப்டன் ரசிகை. 2004-ல் மன்றத்துக்காக எங்க ஊர்ல உறுப்பினர்கள் சேர்க்கச் சொல்லி வீட்டுக்கு லெட்டர் வந்தது. உடன​டியா 25 கிளைகள் ஆரம்பிச்சேன். என்னோட ஆர்வத்தையும் சுறுசுறுப்பையும் பார்த்துட்டு உடனடியா, மன்றத்தின் மகளிர் அணித் தலைவி பதவியைக் கொடுத்தாங்க. அடுத்த ரெண்டே வருஷத்துல திருவள்ளூர் மாவட்டத்துல 1,600 கிளைகள் ஆரம்பிச்சுக் கொடுத்தேன். பிரேமலதா எத்தனை நாள் பிரசாரம் போனாலும்... அவங்க கூடவே இருப்பேன். இதுவரை கட்சிக்காக ஒரு கோடிக்கு மேல் என் சொந்தப் பணத்தை செலவு செய்து இருக்கேன். 2008-ல் புதுவீடு கட்டி, 'பிரேமலதா இல்லம்’னு பேர் வைச்சேன். கிரகப்பிரவேசத்துக்கு குடும்பத்தோட வந்த கேப்டன், 'நீதாம்மா உண்மையான விசுவாசி. உன்னை மாதிரி மாவட்டத்துக்கு ஒரு ஆள் இருந்தா, நாம நிச்சயம் ஆட்சியைப் பிடிச்சுடுவோம். நீ நல்லபடியா வருவ!’னு வாழ்த்தினார். இப்போ என்னோட நீக்கத்தைப் பார்த்துட்டு பிரேமலதா பேசு​வார்னு எதிர்பார்த்தேன். ம்ஹூம்... ஆனா, அவங்​களும் என்னைக் கண்டுக்கவே இல்லை.''
''விரைவில் உங்கள் ஆதரவாளர்​களுடன் அ.தி.மு.க-வில் இணையப்​போ​வ​​தாக செய்திகள் வருகின்றன. அடுத்த கட்டத் திட்டம் என்ன?''
''அடுத்து எந்தக் கட்சியில் சேரலாம்கிற நினைப்பு இதுவரை எனக்கு வரலை. எந்தக் கட்சிக்காக குடும்பம், குழந்தைங்களை விட்டுட்டு ராப்பகலா உழைச்சேனோ... அந்தக்கட்சி ஒரு சின்ன விளக்கம்கூடக் கேட்காம என்னைத் தூக்கிடுச்சேங்கிற வேதனையில இருக்கேன். கூடிய சீக்கிரம் என் நலம் விரும்பிகள்கிட்ட ஆலோசனை நடத்தி, ஒரு நல்ல முடிவு எடுக்கலாம்னு இருக்கேன். பதவி நீக்கம்னு செய்தி வந்த உடனே என் ஆதரவாளர்கள் எல்லாம் கொதிச்சுப்போய், ஆர்ப்பாட்டம் நடத்துவோம்னு சொன்னாங்க. பொறுமையா இருங்கன்னு நான்தான் எல்லாரையும் சமாதானப்படுத்தி வச்சிருக்கேன். ஆனா, இது புயலுக்கு முந்தைய அமைதி!''
நல்லாவே பேசுகிறார் சங்கீதா!

No comments:

Post a Comment