Thursday, August 30, 2012

காந்தி,நேரு வழியில் சென்றால் நாம் அரசியலுக்கு லாயக்கில்லை என்று அர்த்தம். இளங்கோவன்


திரும் புதிருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ஜெயந்தி நடராஜனும் ஒரே மேடையில் கைகோக்​கிறார்கள் என்ற பரபரப்பைக் கிளப்பியது, கடந்த 25-ம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா. 
காமராஜர் பிறந்த நாள் விழாவில் பேசிய முன்​னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ''பெரிய பதவியில் இருந்த நேரத்தில்கூட, தொண்டர்களை சந்தித்தார் காமராஜர். ஜி.கே.வாசன், ப.சிதம்பரம்கூட பிஸி​யான சமயத்திலும் தொண்டர்களை சந்திக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் இருந்து சென்ற இன்னொரு மத்திய அமைச்சர் (ஜெயந்தி நடராஜன்) தொண்டர்களைச் சந்திப்பதே இல்லை. கட்சி வளர்ச்சியிலும் அக்கறை காட்டுவது இல்லை'' என்று பரபரப்பைக் கிளப்பி இருந்தார். அந்தப் பேச்சில் ப.சிதம்பரத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. இதுபற்றி காங்கிரஸ் மேலிடத்தில் ஜெயந்தி புகார் சொல்லவே, ஒழுங்கு நடவடிக்கை கமிட்டிச் செயலாளர் மோதிலால் வோரா, விளக்கம் கேட்டு இளங்கோவனுக்கு நோட்டீஸ் அனுப்பினார். 'தொண்டர்களைச் சந்திக்காமல் வணிகர்களை மட்டுமே சந்திக்கும் ஜெயந்தி மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று அந்த நோட்டீஸுக்கு விளக்கம் அளித்து மேலும் சூட்டைக் கிளப்பினார் இளங்கோவன்.  
இந்தச் சூழலில்தான் காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு தலைவர் வசந்தகுமார் எழுதிய 'வெற்றிப் படிக்கட்டுகள்’ நூல் வெளியீட்டு விழா நடந்தது. ஜி.கே.வாசன், வைரமுத்து, சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், குமரிஅனந்தன், யசோதா, நாமக்கல் ஜெயக்குமார் போன்ற பலரும் மேடையில் அமர்ந்து, விழா தொடங்கிய பிறகுதான் ஜெயந்தி நடராஜன் மேடை ஏறினார்.
முதலில் பேசிய குமரி அனந்தன், ''எனது தம்பியை வி.ஜி.பன்னீர்தாஸிடம் 500 ரூபாய் அட்வான்ஸ் கட்டி வேலைக்குச் சேர்த்தேன். இன்று இந்த அளவுக்கு வசந்தகுமார் வளர்ந்திருக்கிறார்'' என்று பெருமிதப்பட்டார்.
''சொந்தமாக வீடு கட்டுவது, பிள்ளைகளுக்குத் தந்தை ஆவது, புத்தகம் எழுதுவது இந்த மூன்று விஷயங்கள்​தான் மனிதன் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள். மூன்றையும் நிறைவு செய்திருக்கிறார் வசந்தகுமார். தொழிலோடு மட்டுமல்ல தமிழோடும் வாழ்ந்திருக்கிறார்'' என்று கலகலப்​பைத் தொடங்கி வைத்தார் வைரமுத்து.
அடுத்துப் பேசிய பீட்டர் அல்போன்ஸ், ''500 ரூபாய் அட்வான்ஸ் கட்டி வேலைக்குச் சேர்ந்த வசந்தகுமார், இப்போது 1,000 கோடி சொத்து சேர்த்திருக்​கிறார்'' என்று சொல்லி மலைக்க​வைத்தார்.
அழைப்பிதழில் பெயர் இருந்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகனும் இளங்கோவனும் அதுவரை விழாவுக்கு வரவில்லை. இறுதியாகப் பேசுவதாக இருந்த ஜெயந்தி நடராஜன் திடீரென மைக் பிடித்து, வசந்தகுமாரை அவசரமாகப் பாராட்டிவிட்டுக் கிளம்பிச் சென்றார். அதன் பிறகே, சொல்லி வைத்தது போல், இளங்கோவனும் ஞானதேசிகனும் மே​டைக்கு வந்தனர்.
மைக் பிடித்த இளங்கோவன், ''நிலக்கரி விவகாரத்தில் காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி என்பதுபோல் ஒரு மாயத் தோற்றத்தை பி.ஜே.பி. உருவாக்கி வருகிறது. அதை அவர்கள் வெற்றிகரமாகச் செய்வதற்குக் காரணமே, நாம் திருப்பி அடிக்காமல் போனதுதான். இப்படித்தான் கூட்டணியில் இருந்த ஒரே காரணத்துக்காக அவர்கள் செய்த (தி.மு.க. ஸ்பெக்ட்ரம்) தவறை நாம் சுமந்துகொண்டு இருந்தோம். பி.ஜே.பி. ஆளும் மாநில அரசுகள் எடுத்த முடிவுப்படிதான் நிலக்கரியை ஏலம் விடவில்லை என்று எடுத்த எடுப்பிலேயே உரிய பதிலைச் சொல்லி நாம் திருப்பி அடித்திருந்தால், அவர்கள் காணாமல் போயிருப்பார்கள். ஆனால் நாம் பெருந்தன்மையுடன், விவாதம் நடத்தலாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் நூறு பொய்களைச் சொன்னால் நாம் ஒரு பொய்யாவது சொல்ல வேண்டாமா? பொய் சொல்லாமல் அர சியல் நடத்த முடியுமா? காந்தி நேரு வழியில் வந்தவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் சாமியார் ஆக வேண்டியதுதான். அவன் அயோக்கியன் என்றால் நாமும் அந்த அளவுக்கு மாறினால்தான் உறைக்கும். மயிலே மயிலே இறகு போடு என்றால் அரசியலுக்கு லாயக்கில்லை என்று நம்மை ஒதுக்கி விடுவார்கள்...'' என்று சொந்தக் கட்சியையும் தி.மு.க-வையும் உரசிப் பார்த்த இளங்கோவன் விழா விவகாரத்துக்கு வந்தார்.
''தான் செய்யும் தொழிலில் கூட காம​ராஜர், சோனியா படத்தைப் போடும் துணிச்சல் வசந்தகுமாருக்கு இருக்கிறது. ஆனால், அவருக்கு உரிய மரியாதை கட்சியில் கிடைக்கிறதா என்பது வேறு. காங்கிரஸ் என்றால் இப்படித்தான் இருக்கும். இப்படிப் பேசுவதற்கு காங்கிரஸில் சுதந்திரம் இருக்கிறது என்றாலும், அதற்கும் சில (ஜெயந்தி) நேரங்களில் இடையூறு வந்துவிடுகிறது. காங்கிரஸ் ஒரு கடல். ஒன்றும் இல்லாதவர்கள் எல்லாம் ஓடத்தில் இருப்பார்கள். கட்சிக்காக உழைத்தவர்கள்கூட கரை ஒதுங்கிக் கிடப்​பார்கள். காங்கிரஸை விட்டால் இந்த மக்களுக்கு வேறு வழியும் இல்லை. காரணம் மக்களுக்காகப் பாடுபடும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. மற்ற கட்சிகள் தங்கள் குடும்பத்துக்காகப் பாடுபட்டுக்கொண்டு இருக்கின்றன. அவர்கள் சரியில்லை என்று வேறு ஒருவரைக் கொண்டு வந் தால்... குடும்பம் இல்லாதவர்கள்கூட அதைவிட மோசமாக நடக்கிறார்கள். காலில் மண் படக்கூடாது என்பதற்காக மலை மேல் உட்கார்ந்து கொள்​கிறார்கள்'' என்று ஆளும் கட்சியையும் ஒரு கடி கடித்தார்.
ஜெயந்தியும் இளங்கோவனும் முட்டி மோதுவார்கள் என்று ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க வந்தவர்கள், 'நல்லாத்தான் பேசுறார். ஆனா, ஜெயந்திம்மா இருக்கிறப்ப வராம பயந்துபோய் பம்மிட்டாரே...’ என்று புலம்பியபடி கிளம்பினார்கள்.

No comments:

Post a Comment