Wednesday, August 8, 2012

மணல் கொள்ளைக்கும் வருகிறது ஆப்பு! அதிரவைத்த நீதிமன்றக் காட்சிகள்


ணல் கொள்ளைக்கு ஒரு முற்றுப்​புள்ளி விழும்போல் தெரிகிறது. தாமிரபரணி மணலைக் காப்பாற்ற நல்ல​கண்ணு முயற்சித்தது போல, மேற்கு மண்டல ஆற்று மணலைக் காப்​பாற்ற சுடலைக் கண்ணு என்பவர் முயற்சித்​ததுதான் நல்ல முடிவை நோக்கி நகர்கிறது!   
தஞ்சையில் 5, திருச்சியில் 9, கரூரில் 7, நாகையில் 11 என மொத்தம் 32 குவாரிகள் அந்த நான்கு மாவட்டங்களில் செயல்படுகின்றன. இந்தக் குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி பல கிலோ மீட்டர் தூரம் மணலை வழித்து விட்டனர். இதுபோதாது என்று புதிதாக சில குவாரிகள் தொடங்கும் ஏற்பாடுகளும் நடக்கின்றன. இந்தக் குவாரிகளைத் தடை செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை  கிளையில் சுடலைக்கண்ணு என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அந்தப் பிரதான வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு மேலும் ஆறு பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
கரூர் மாவட்ட பி.ஜே.பி. தலைவர் சிவசாமி அதில் ஒருவர். 'மண் அள்ளுவதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று முதலில் கூறியிருந்த அரசு, பின்னர் மண் அள்ள ஆட்கள் கிடைப்பது இல்லை என்று காரணம் கூறி, மண் அள்ள ஒன்று, லாரியில் ஏற்ற ஒன்று என இரண்டுபொக்லைன்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றது. ஆனால், பத்துப் பதினைந்து பொக்லைன்கள் எந்த நேரமும் மணல் அள்ளியபடி இருக்கிறது. பொதுப்பணித் துறைதான் குவாரியை நடத்த வேண்டும். ஆனால், இங்கே பொதுப்பணித் துறை சார்பில் ஒரு நபர்கூட பணியில் இல்லை. கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் தினமும் ஆயிரக்கணக்கார லாரிகளில் கோவை வழியாக கேரளாவுக்கு மணல் கடத்தப்படுகிறது. ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது' என்று கொதிக்கிறார்.
டாரஸும், விபத்துக்களும்!
கொள்ளிடம் ஆற்றுப் பாதுகாப்பு சங்கத் தலைவர் சுப்பிரமணியன், '12 டயர்கள் கொண்ட பிரமாண்டமான டாரஸ் வண்டிகளில் மணலை ஏற்றிச் செல்கிறார்கள். நெடுஞ்சாலைகளில் மட்டுமே போக வேண்டிய அந்த வாகனங்கள், கிராமத்துச் சாலைகளில் செல்வதால் சாலைகள் எல்லாம் பாழாகின்றன. குறித்த நேரத்துக்குள் மணல் அள்ள வேண்டும் என்பதற்காக மின்னல் வேகத்தில் வாகனங்களை ஓட்டுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. சாலை விபத்தில் மட்டும் எங்கள் பகுதியில் சுமார் 25 பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு எஃப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யாதபடி, பணத்தை வாரி இறைக்கிறார்கள்' என்றார் வேதனையுடன்.
'தொடர் மணல் கொள்ளையால், காவிரி, கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் உள்ள அத்தனை குடிநீர்த் திட்டங்களும் பாதிக்கப்பட்டு விட்டன. தண்ணீரின் சுவையும் மாறிவிட்டது. இதேநிலை நீடித்தால், ராமநாதபுரம், மதுரை மாவட்டங்​களுக்காக நிறைவேற்றப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வராது' என்கிறார் பாவேந்தர் மக்கள் மன்ற அமைப்பாளர் பனகை அரங்கன்.
'காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு வசதியாக தண்ணீரின் போக்கைத் திருப்பி​விடுவது, சட்டவிரோதமாக மணலால் அணை கட்டுவது, உள்ளே லாரிகள் வந்து செல்ல வசதியாக கிராவல்களைப் போட்டு நிரந்தரச் சாலைகள் அமைப்பது என்று நிறைய விதிமீறல்கள் நடக்கின்றன. திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் இருந்து அன்பில் கிராமம் வரை ஆற்றுக்கு உள்ளேயே சுமார் 22 கி.மீ. தூரத்துக்கு நிரந்தரச் சாலை அமைத்திருக்கிறார்கள். இவற்றை அகற்றாவிட்டால், வெள்ளக் காலங்களில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் கரை உடைந்து ஊரும், வயலும் அழிந்துவிடும்'' என்று எச்சரிக்கிறார் சண்முகம்.
அரசுடைமை ஆன குவாரிகள்!
''தமிழ்நாட்டில் தனியார் குத் தகைக்கு எடுத்து மணல் குவாரிகள் நடத்தியபோது, அவர்கள் நடத்திய அத்துமீறல்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கலானது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சம்பத், நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டார். ஏழு பேர் கொண்ட அந்த நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி, 1.10.2003 முதல் அரசே மணல் குவாரியை ஏற்று நடத்தத் தொடங்கியது.
அரசுடைமை ஆன பிறகும், அத்துமீறல் நிற்கவில்லை. தாமிர பரணியில் விதிக்குப் புறம்பாக மணல்குவாரி நடத்தியதால், அந்தப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து சுடலைக்கண்ணு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பானுமதி, தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள ஐந்து ஆண்டு களுக்குத்  தடைவிதித்தார். கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தத் தீர்ப்பு வந்தது. 'ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரைத் தலைவராகக் கொண்ட மாநில கமிட்டி அமைக்க வேண்டும்'' என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப் பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி இ.பத்மநாதன் கமிட்டித் தலை வராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு அலுவலகம் உள்ளிட்ட அடிப்படை வசதி கூட செய்யவில்லை. வெறுத்துப் போன நீதிபதி பத்மநாதன் ராஜினாமா செய்து விட்டார். மூன்று மாதங்களாகக் குவாரி,குவாரி யாகச் சென்று அங்கு நடக்கும் அத்துமீறல்களை புகைப்பட, வீடியோ ஆதாரங்களாக்கி கோர்ட்டில் சமர்ப்பித்தோம். இப்போது இந்த வழக்கில் வெற்றி கிடைத்ததற்கு எங்களிடம் இருந்த வலுவான ஆதாரங்களே காரணம்'' என்கிறார் இந்த வழக்கில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் வழக்கறிஞர் நந்தகுமார்.
அரசுத் தரப்பு சொதப்பல்!
இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 27-ம் தேதி நடந்தது. 'கொள்ளிடம் ஆறு, பாசன ஆறே கிடையாது. காவிரி யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, தண்ணீரைத் திருப்பிவிடப் பயன்படும் வடிகால்தான். மணல் குவாரிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஆற்றுப்படுகை மேடாகிவிட்டதால், அதனைத் தூர் வாரித்தர வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டதால்தான், குவாரியே அமைத்தோம். தங்களுக்குக் குவாரி கிடைக்காத அதிருப்தியில் சிலர், இதுபோன்ற மனுக்களைத் தாக்கல் செய்ய வைத்துள்ளனர்' என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்பர் அலி, பானுமதி ஆகியோர் கடந்த 3-ம் தேதி தீர்ப்பு வழங்கினர். 'திருச்சி, தஞ்சை, கருர், நாகை மாவட்டங்களில் ஐந்து வருடங்களுக்கு மேல் செயல்படும் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும்’ என்று உத்தரவு போட்டனர். இதன்படி, நாகையில் 3, தஞ்சையில் 2, திருச்சியில் 4, கருரில் 7 என மொத்தம் 16 குவாரிகள் உடனடியாக மூடப்படுகின்றன. எஞ்சியுள்ள 16 குவாரிகளில் 6 குவாரிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. மற்ற 10 குவாரிகளும் தொடர்ந்து செயல்பட அனுமதித்துள்ள நீதிமன்றம், மூன்று மாதத்துக்குள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் கீழ் செயல்படும் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெற்றாக வேண்டும் என்று கூறியிருக்கிறது. ''திருச்சி மாவட்டத்தில் எந்த அனுமதியும் இல்லாமல் செயல்படும் சிறுகமணி குவாரி பற்றிய வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கிலும் விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்'' என்கிறார் சுடலைக்கண்ணுவின் வக்கீல் அசோக்.
இந்த தகவல்களை வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தில் ஆற்று மணலுக்கு விடுதலை கிடைக்கும் போலத் தெரிகிறது!

ஒரு லோடு மணல் விலை 945 ரூபாய்?
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டாக விலை ஏறாத ஒரே பொருள் மணல்தான், அதிகாரப்பூர்வமாக!  கடந்த 2003-ம் ஆண்டு குவாரிகளை அரசே ஏற்று நடத்தத் தொடங்கியதில் இருந்து இன்று வரை, மணல் விலை உயர்த்தப்படவில்லை. ஒரு யூனிட் 315 ரூபாய் வீதம், ஒரு லோடு (3 யூனிட்) மணலுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை 945 ரூபாய் (வரி உட்பட) மட்டுமே! ஆனால், கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக விலை கொடுத்தால்தான் மணலைக் கண்ணில் காட்டுகிறார்கள். மதுரையில் ஒரு லோடு மணல் ரூ. 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை விற்கிறது. நெல்லை போன்ற இடங்களில் 15 ஆயிரம்! அரசே குவாரி நடத்துகிறது, அரசே நேரடியாக விற்பனை செய்கிறது அப்புறம் எப்படி இந்த விலையேற்றம்?
'மணல் குவாரிகளை அரசு நடத்தினாலும், மணலை அள்ளி லாரிகளில் ஏற்றும் 'லோடிங் கான்ட்ராக்டை’ தனியாரிடம் கொடுத்தனர். அங்கே ஆரம்பித்தது வினை. பொதுப்பணித் துறை அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு, இந்த 'லோடிங் கான்ட்ராக்டர்கள்’ தாங்களே குவாரிகளை நடத்த ஆரம்பிக்க, கோடிகோடியாய் லாபம் கொட்டியது.
ஆரம்ப காலத்தில், கே.சி.பழனிச்சாமி, கிரி ஆகிய இரண்டு பேர் மட்டும்தான் இந்தத் தொழிலில் ஈடுபட்டனர். கொழிக்கும் தொழில் என்பதால் லோடிங் கான்ட்ராக்ட் கேட்டு, பலர் பெட்டிகளுடன் போய் மேலிடத்தைப் பார்க்க ஆரம்பித்தனர். கடந்த 2006 தி.மு.க. ஆட்சியில், திருச்சி பகுதி கே.சி.பழனிச்சாமிக்கும், தென் மாவட்டங்கள் படிக்காசு என்பவருக்கும், வடமாவட்டங்கள் ஆறுமுகசாமிக்கும் கொடுக்கப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாடு முழுவதையும் ஆறுமுகசாமி கைப்பற்றி விட்டார்' என்கிறார் தொட்டியம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன்.
ஆக, அரசு நிர்ணயித்த விலையில் மக்களுக்கு மணல் கிடைக்க வேண்டும் என்று புதிய மனு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. என்ன செய்வது, எதையும் நீதிமன்றம் மூலம்தானே பெறவேண்டி இருக்கிறது.

No comments:

Post a Comment