Tuesday, August 28, 2012

இந்த நிகழ்ச்சி கட்டப்பஞ்சாயத்து இல்லீங்க...- நிர்மலா பெரியசாமி


சின்னத்திரையில் கதைத் தொடர்கள்தான் வெற்றி பெறும் என்பதில்லை. மக்கள் பிரச்னைகளைக் கையிலெடுக்கும் நிகழ்ச்சிகளும் வெற்றிபெறும் என்பதற்கு சாட்சியாக விளங்கும் நிகழ்ச்சி ஜி தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "சொல்வதெல்லாம் உண்மை'.

அதைத் திறம்பட நடத்திவருகிறார் முன்னாள் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி. மூன்று பேரைக் கொன்று வீட்டிலேயே புதைத்துவிட்டு நாடகமாடிய கொலை வழக்குச் சம்பவத்துக்கு இந்நிகழ்ச்சியின் மூலம் துப்புதுலங்கியதால் நாடு முழுவதும் பேசப்பட்ட நிகழ்ச்சி "சொல்வதெல்லாம் உண்மை'.

"சொல்வதெல்லாம்' உண்மை' நிகழ்ச்சி உருவான விதம்.. அதில் நீங்கள் பங்கெடுத்தது பற்றி?

இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு மொழிகளில் ஜி'டிவியில் முன்பே வந்துகொண்டுதான் இருந்தது. தமிழிலும் எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். அப்போது யாரை இந்த நிகழ்ச்சியை நடத்த வைக்கலாம் என்று அவர்கள் யோசித்த போது அந்த நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த என் தோழி, "நிர்மலாவைப் போடலாம்' என்று சொல்லியிருக்கிறாள். அப்படித்தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தேன்.

இதே போல ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியிலும் வந்ததே.. அதற்கும் இதற்கும் வேறுபாடு என்ன?

அதை நான் சொல்ல முடியாது. மக்கள்தான் சொல்லணும். விஜய் டிவியில் வந்த கதையல்ல நிஜம் என்ற அந்த நிகழ்ச்சியை நான் பார்த்தே இல்லை. எல்லோரும் ஓஹோன்னு சொல்வார்கள். ஆனால் எனக்கு அதுபோன்ற சோகமான நிகழ்ச்சிகளைப் பார்க்கவே பிடிக்காது.

"சொல்வதெல்லாம்' உண்மை' நிகழ்ச்சியைப் பொருத்தவரைக்கும் பிரச்னையோடு வருகிறவர்களை அக்கறையாக, அன்பாக அணுகுகிறேன். என் வீட்டிற்கு யாராவது உதவி கேட்டு வந்தால் நான் எப்படி நடந்துகொள்வேனோ அதுபோலத்தான் இந்த நிகழ்ச்சியை ஆர்த்தமார்த்தமாக செய்கிறேன்.

"சொல்வதெல்லாம் உண்மை'யில் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கிறதா?

நிச்சயமாக நூறு சதவிகிதம் உண்மையாகத்தான் இருக்கிறது. சில சமயம் சில பேர் பொய் சொல்வார்கள். அவர்களைப் பார்த்தவுடனேயே நான் கண்டுபிடித்துவிடுவேன். அவர்கள் பேசுவது பொய் என்பதை அவர்களுடைய கண்களே காட்டிக்கொடுத்துவிடும். ரொம்ப கெட்டவர்கள்கூட இங்கே வந்தவுடன் அடங்கித்தான் போகிறார்கள்.

நீங்கள் இப்படி தொலைக்காட்சியில் ஆளாளுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்கிறீர்களே.. அப்புறம் சட்டம், நீதிமன்றமெல்லாம் எதற்கு?

இது ரொம்ப பெரிய வார்த்தைங்க. இங்கே வருகிறவர்களிடம் சட்டப்படி நடக்கவேண்டும் என்றுதான் நானும் சொல்கிறேன். இந்த நிகழ்ச்சி ஒரு கவுன்ஸிங் மாதிரிதான். ஒரு மன ஆறுதலுக்கான விஷயம். குறைந்தபட்ச தீர்வுக்கான அல்லது பிரச்னையை முளையிலேயே கிள்ளியெறிவதற்கானது. இதை கட்டப்பஞ்சாயத்து என்று சொன்னால் எப்படி?

சரி.. பிரச்னைக்குரிய ஆட்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

நிறைய பேர் போன் பண்ணுவார்கள். சிலர் நேரடியாக நிறுவனத்துக்கே வந்து பிரச்னையைச் சொல்லுவார்கள். அதுமட்டுமில்லாமல் இதற்கென்று ஒரு பெரிய குழுவே இருக்கிறது. அவர்கள் பிரச்னையின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து நிகழ்ச்சிக்கு கொண்டு வருவார்கள். ஆனால் எனக்கு நிகழ்ச்சியில் உட்காரும் வரை இதுதான் பிரச்னை என்றோ.. இவர்தான் பிரச்னைக்குரியவர் என்றோ எதுவுமே தெரியாது.

எந்த மாதிரி பிரச்னைகள் நிறைய வருகிறது? நீங்கள் எந்த மாதிரி பிரச்னைகளை அணுகுகிறீர்கள்?

குடும்பப் பிரச்னைகள்தான் அதிகம் வரும். குறிப்பாக கணவன் - மனைவி பிரச்னை. அவர்களுக்குள் ஏற்படும் முக்கிய பிரச்னை என்னவென்றால், குடிதான். ஐம்பது ரூபாய்கூட தராத கணவன்களால் ஏற்படும் பிரச்னை. தினம் குடிப்பதால் தன்னம்பிக்கை இழந்து மனைவியை அடிப்பது.

அடுத்தகட்டமாக சந்தேகப்படுவது இது போன்ற பிரச்னைகள் இருக்கும். அடுத்த பிரச்னை, மனைவிக்குத் தெரியாமல் கணவன் வேறு பெண்ணுடன் பழகுவது, மனைவி கணவனை ஏமாற்றிவிட்டு இன்னொரு ஆணுடன் பழகுவது என்று இருக்கும். முன்பு ஆண்கள்தான் கட்டிய மனைவியை ஏமாற்றுவது அதிகம் இருந்தது. இப்போது பெண்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். இதுபோக கொஞ்சம் சோசியல் இஷ்யூûஸயும் எடுத்து செய்திருக்கிறேன். சொத்துப் பிரச்னையை நான் தொடுவதில்லை.

இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு எப்படியிருக்கு?

ரொம்ப நல்லா இருக்குங்க. "நியூஸ் வாசிச்சு நீங்க பேர் வாங்கியதைவிட இது உங்களுக்கு அருமையாக இருக்கு' என்று என்னைப் பார்ப்பவர்கள் சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியால டிஆர்பி ரேட்டிங் ஏறியிருக்கிறது. பார்க்கிற இடத்தில் எல்லாம் என்னை ரொம்ப பெரிய மனுஷியாக மக்கள் பேசுகிறார்கள். மற்ற டிவி நிகழ்ச்சிகளைவிட இது மாறுபட்டதாக இருக்கிறது.

ங்க வர்றவங்களோட பிரச்னையை தீர்க்கிறீங்களா? இல்லை பெரிதாக்கிவிடுகிறீர்களா?

கண்டிப்பாக அவர்களோட பிரச்னை தீர்க்கப்படுது. அவர்கள் எங்கள் தொடர்பில் இருக்கிறார்கள். அடிக்கடி போன் செய்கிறாரக்ள். பிரச்னை பண்ணியவர்கள் அடங்கியிருக்கிறார்கள். இதுவரை இருநூறு நபர்களின் பிரச்னையை அணுகியிருக்கிறேன். அதில் ஒன்றிரண்டு நபர்கள்தான் எங்களிடமிருந்து விலகிப்போய் இருக்கிறார்கள்.

உங்கள் நிகழ்ச்சியின் மூலம் ஒரு கொலை கேஸில் துப்பு துலங்கியதே?

பார்கவி அவ பேரு. ரொம்ப நல்ல பொண்ணு. +2வில் 1124 மார்க் வாங்கியிருந்தாள். காதலிச்ச பையனோடு சென்னை வந்துவிட்டாள். மைனர் பொண்ணு. என்னைப் பார்த்து "பாதுகாப்பு கொடுங்க மேடம்.. எங்கப்பா எங்களை கொன்னுடுவார்'னு அழுதாள். சரி அவங்க பெற்றோரை கூப்பிட்டு பேசுவோமே என்று பார்த்தாள் அந்த பொண்ணு "எங்களை அவர் கொன்னுவார்' சொல்லிக்கிட்டே இருந்தாள்.

"ஏம்மா யாராவது இதுக்கெல்லாம் கொலை பண்ற அளவுக்குப் போவாங்களா?' என்ற போது, "ஏற்கெனவே கொன்னுருக்காரே' என்றபோதுதான் விஷயத்தில் உள்ள சீரியஸ்னஸ் புரிந்தது. அப்புறம் எங்க ரிப்போட்டர்ஸ் இரண்டு பேர் அந்த ஊருக்குப்போய் விசாரிச்சப்ப அந்த ஊர் ஸ்டேஷன்ல மூன்று மிஸ்ஸிங் கேஸ் பதிவாகியிருந்தது. அப்புறம்தான் இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பாயிருச்சு.

நீங்க ஏதாவது பிரச்னையில் மாட்டியிருக்கீங்களா?

இதுவரைக்கும் இல்லை. பார்க்கிறவங்களும் "இதுமாதிரியெல்லாம் பண்றீங்களே "பயமா இல்லையா?' என்பார்கள். அவர்களும் மனிதர்கள்தானே.. அவர்களை அன்பாகவும், அரவணைப்பாகவும் அணுகினால் போதும் என்று நினைக்கிறேன். இதுவரை அப்படித்தான் செய்து வருகிறேன்.

மறுபடியும் செய்தி வாசிப்பீங்களா?

இந்த நிகழ்ச்சி பண்றதால எனக்கு எந்த சிக்கலும் இல்லை. நான் ப்ரிலேன்ஸர்தான். ஆனால் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை செய்த பிறகு செய்தி வாசிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை.

இந்த நிகழ்ச்சியால் ஏற்பட்ட மனதிருப்தி.. சாதனை?

நிறைய இருக்கிறது. சாதனை என்பதைவிட மக்களை அணுகுகிறோம். பிரச்னைக்குரிய மனிதர்களை அணுகி அவர்களுக்குத் தீர்வு தருகிறோம் என்பது எவ்வளவு பெரிய பணி? இது எனக்கு மிகப் பெரிய மனதிருப்தியைத் தருகிறது. பிரிந்த குடும்பங்களைச் சேர்த்து வைக்கும் போது அவர்கள் காட்டும் நன்றிக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது.

சமூக விஷயங்களைப் பொறுத்தவரை, கீழக்கரை, கோவில்பட்டி போன்ற இடங்களில் குப்பைகொட்டும் பிரச்னை பெரிதாக இருந்தது. அதை நாங்கள் பெரிய விஷயமாக எடுத்து செய்தோம். இப்போது ஊர் சுத்தமாக இருக்கிறது என்று செய்திகளில் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் பேட்டியின் வாயிலாக நீங்கள் சொல்ல விரும்புவது?

மக்கள் பிரச்னையைக் கையிலெடுக்கும் சமூக நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நிறைய வரவேண்டும். மக்களும் தொடர்களை விட்டு வெளியே வந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தரவேண்டும். ஏனென்றால் இதுதான் உண்மையான மக்கள் நிகழ்ச்சி

No comments:

Post a Comment