Wednesday, August 8, 2012

இது ஆறாவது வெடிகுண்டு! திகிலில் மதுரை


டந்த இரண்டு ஆண்டுகளில், ஆறாவது முறையாக வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு இருப்பதால் அலறுகிறது மதுரை. 
30.4.11 அன்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு குண்டு வெடித்தது. 30.9.11 அன்று மதுரை புதூர் பஸ் டெப்போவுக்கு வந்த பேருந்தின் பின் ஸீட்டில் இரண்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. 23.10.11 அன்று அத்வானியைக் குறிவைத்து ஆலம்பட்டி பாலத்துக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டுகள் சிக்கின. 7.12.11 அன்று மேலூரில் இருந்து மதுரை வந்த நகரப் பேருந்தில் இருந்து டம்மி டைம் பாம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அடுத்து கடந்த மே மாதம் பி.ஜே.பி. மாநாடு நடக்க இருந்த நிலையில் ஒன்றாம் தேதி மதுரை கிழக்கு அண்ணாநகரில் ராமர் கோயில் அருகே டைம் பாம் வெடித்தது.
இந்த நிலையில், அகில உலக சௌராஷ்டிரா மாநாட்டுக்கு கடந்த 4-ம் தேதி குஜராத் முதல்வர்நரேந்திர மோடி வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது (முன் கூட்டியே அவரது வருகை ரத்தாகி விட்டது). அன்றைய தினம் மதுரை தெற்குமாசி வீதி கிருஷ்ணன் கோயில் தெருவில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தும் உமர் ஃபாருக் என்பவருக்கு, பார்சல் ஒன்றை கொடுத்து விட்டுச் சென்றார் மர்மநபர் ஒருவர். அதைப் பிரித்துப் பார்த்தால்... டம்மி வெடிகுண்டு. மேலூர் அரசுப் பேருந்தில் சிக்கிய டைம் பாமுக்கும், உமர் ஃபாருக்குக்கு வந்திருக்கும் வெடிகுண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் போலீஸார்.
இதுகுறித்துப் பேசிய பெயர் கூற விரும்பாத இஸ்லாம் பிரமுகர் ஒருவர், ''எங்கே குண்டு கிடைத்தாலும், முஸ்லிம் இயக்கத்துடன் தொடர்புபடுத்தியே விசாரணையைத் தொடங்குகிறார்கள். அத்வானி, மோடி போன்றவர்களுக்கு முஸ்லிம்களால் அச்சுறுத்தல் இருப்பதுபோன்ற அனுதாபத்தை ஏற்படுத்த இந்து அமைப்புகளே குண்டு வைத்திருக்க வாய்ப்புஇருக்கிறது. அதனால், சந்தேகத்துக்கு உரிய இந்து அமைப்புகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்'' என்றார்.
பி.ஜே.பி-யின் மாநில பிரசார அணியின் பொதுச் செயலாளர் சசிராமனிடம் கேட்டபோது, ''இது வரையிலுமான ஆறு சம்பவங்களிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததற்குக் காரணம், போலீஸாரின் திறமை இன்மையும், ஆளும் கட்சிகளின் ஓட்டு அரசியலும்தான். தீவிரவாதிகளின் நெட்வொர்க்கில் ஊடுருவித் தகவல் சேகரிக்கும் அளவுக்குத் திறமையான கீழ்நிலை ஊழியர்கள் உளவுத்துறையில் இல்லை. இத்தனை முறை அபாய மணியடித்தும் காவல் துறை தூங்குவதால், மதுரையில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு நிகழும் அபாயம் இருக்கிறது. இந்து அமைப்புகளே குண்டு வைக்கின்றன என்று சொல்வது மிகக் கேவலமான குற்றச்சாட்டு. அப்படிக் கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை'' என்றார் காட்டமாக.
மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசுவிடம் கேட்ட போது, 'இது தொடர்பாக தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகிறோம். வெடிகுண்டு பார்சலை கொடுத்துச் சென்ற இளைஞரின் படத்தை கம்ப்யூட்டர் உதவியுடன் வரைந்து இருக்கிறோம். விரைவில் பிடித்துடுவோம்'' என்றார்.  
சீக்கிரம்!

No comments:

Post a Comment