Wednesday, August 22, 2012

கார்டனுக்கு அல்வா பார்சல்...! இஃப்தார் கலகலப்பு


ண்டு தோறும் ரமலான் மாதத்தில் நோன்பு துறக்கும் இஃப்தார் நிகழ்ச்​சியை நடத்தி வருகிறார் ஜெயலலிதா ('சொந்த செலவில் நடத்தும் தலைவியே' என்று யாருக்கோ உள்குத்து வைத்து இந்த வருடம் அ.தி.மு.க-வினர் போஸ்டர் ஒட்டி இருந்தது தனிடிராக்!). 'கடந்த 17-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், சுவா​ரஸ்யத்துக்கும் அரசியலுக்கும் பஞ்சம் இல்லை! 
ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் ஹோட்​டலில்தான் தொடர்ந்து 15 ஆண்டுகளாக இஃப்தார் நிகழ்ச்சியை அ.தி.மு.க. நடத்தியது. கடந்த ஆண்டு நட்சத்திர ஹோட்டலான லீ ராயல் மெரிடியனில் நடந்தது. இந்த ஆண்டு மேலும் புரமோஷன் பெற்று நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் பிரமாண்டமாக அரங்​கேறியது. முஸ்லிம்களைக் குளிர்விக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இட மாற்றமாம். மேடைக்குக் கீழே முன்வரிசையில் அ.தி.மு.க-வை ஆதரிக்கும் டாக்டர் சேதுராமன், திண்டிவனம் ராமமூர்த்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் அமர்ந்து இருந்தனர். புது வரவாக முஸ்லிம் லீக் கட்சியின் ஃபாத்திமா முசாபரும் அழைக்கப்பட்டு இருந்தார். கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி ஏனோ மிஸ்ஸிங்!
மேடையில், ஜெயலலிதாவோடு தா.பாண்​டியன், சரத்குமார், இந்தியக் குடியரசு கட்சியின் செ.கு.தமிழரசன், ஆற்காடு இளவரசர் ஆகியோருக்கு ஸீட். மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலிக்கு என இரண்டு இருக்கைகள் மேடையில் இருந்தன. ஜெயலலிதா வருவதற்கு சில நிமிடங்கள் முன் அந்த இரண்டு இருக்கைகளையும் பெயர்ப் பலகையையும் திடீரென்று அப்புறப்படுத்தினர். மற்ற தலைவர்கள் வந்துவிட்ட நிலையில் ம.ம.க-வைச் சேர்ந்தவர்கள் ஆப்சென்ட் ஆனதால், இருக்​கைகள் எடுக்கப்பட்டனவாம்.
தா.பாண்டியன், சரத்குமார் போன்றவர்கள் ஜெயலலிதாவின் வருகைக்காக போர்ட்டி​கோவில்  பல நிமிடங்கள் காத்துக் கிடந்தனர். கடந்த ஆண்டுகளில், மேடைக்கு வரும்போது​தான் ஜெயலலிதாவைக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்பது வழக்கம். ஆனால், இப்போது வாசலுக்கே சென்று வரவேற்கும் அளவுக்கு பயபக்தியான முன்னேற்றம்.
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவும் அமைச்சர் முஹமது ஜானும் பேசி முடிக்க... ஜெயலலிதா தனது இருக்கை முன் இருந்த மைக்கில் பேசினார். ''மதத்தின் மீது பற்று வைத்தல், குர்ஆன் ஓதுதல், நோன்பு இருத்தல், தர்மம் செய்தல், புனித யாத்திரை மேற்கொள்ளுதல் ஆகிய ஐந்து கடமைகளை இஸ்லாமியர்கள் கடைபிடிக்கிறார்கள்'' என்று சொன்னார் ஜெயலலிதா. தொழுகையைத்தான் குர் ஆன் ஓதுதல் என்று மாற்றிக் குறிப்பிட்டார். இஃப்தார் நிகழ்ச்சிகளின்போது எப்போதும் தலையில் ஸ்கார்ஃப் அணியும் ஜெயலலிதா, இம்முறை ஏனோ அணியவில்லை.
இஃப்தார் விருந்தில் உணவு அயிட்டங்களும் தடபுடலாகத்தான் இருந்தன. லீ ராயல் மெரிடியனில் இருந்து உணவு வகைகள் வந்திருந்தன. மேடையில் இருந்தவர்களுக்கு ஹோட்டல் ஊழியர்களே பரிமாறினர். பேரிச்சம் பழங்களை முதலில் சாப்பிட்ட ஜெயலலிதா, ஒரே ஒரு ஸ்பூன் வெஜிடபிள் கஞ்சி மட்டும் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு தட்டில் இருந்த ஸ்வீட்டை சாப்பிட்டார். முதல்வர் முகத்தில் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்ததை உணர முடிந்தது. திடீரென்று பின்னால் திரும்பி தனது பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமியிடம் ஏதோ சொன்னார். உடனே, ஓட்டல் தலைமை ஊழியர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் ஜெயலலிதா ஆர்வமாக ஏதோ கேட்டுக் கொண்டு இருந்தார். பின்னர்தான் அந்த ஸ்வீட்டைப் பற்றி கேட்டுக் கொண்டார் என்பதை அறிய முடிந்தது.  அந்தளவுக்கு ஸ்வீட் பிடித்து விட்டதாம். அந்த ஸ்வீட்டின் பெயர் 'மூங்க் தால் அல்வா’.  
செய்முறைகளைப் பற்றி ஆர்வமாகக் கேள்விகள் கேட்டவர், 'ஆர்டர் தருகி​றேன்... கார்டனுக்குக் கொண்டு வாருங்கள்’ என்றும் சொன்​னாராம். அந்த ஓட்டல் ஊழியருக்கு மனம் கொள்ளாத மகிழ்ச்சி!
இஃப்தார் விருந்தை மனித​நேய மக்கள் கட்சி புறக்​கணிக்க என்ன காரணம் என்று ஜவாஹிருல்லாவிடம் கேட்டோம். ''எங்கள் கட்சியில் எடுக்கப்பட்ட முடிவால், அ.தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்​பட்டிருந்த இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கெடுக்க முடியாத சூழல். சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்ட​ணியில் இருந்தோம். அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தலில் கடைசி வரையில் பேச்சுவார்த்தை நடத்தி​னார்களே தவிர, எத்தனை இடங்கள் என்பதை அறிவிக்கவில்லை. வேறுவழி இல்லாமல் தனித்துப் போட்டி இட்டோம். 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அடை​பட்டுக் கிடக்கும் முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறவில்லை. அந்தக் காரணங்களால்தான் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை'' என்றார் ஜவாஹிருல்லா.
ஆக, இந்த வருட இஃப்தார் நிகழ்ச்சி கூட்டணிக்குள் லேசான முறிவை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. அ.தி.மு.க.வுடன் மறுபடி இணக்கம் காட்ட அதிக நாட்களாக முயற்சித்துவந்த தா.பாண்டியனின் வருகை மூலமாக ஒரு பலமும் கிடைத்துள்ளது!  

No comments:

Post a Comment