Wednesday, August 8, 2012

நடுரோட்டில் உதைத்து... ஜாக்கெட்டைக் கிழித்து! இது செஞ்சிக் கொடுமை


டுரோட்டில் இளம்பெண் ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்ட விவகாரம் அஸ்ஸாமில் வீடியோவாக வெளியாக, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதற்கு கொஞ்சமும் குறையாத ஓர் அதிர்ச்சி சம்பவம் தமிழகத்திலும் அரங்கேறி இருக்கிறது.
 செஞ்சியில் ஒரு பெண்ணை பேருந்து நிறுத்தத்தில்வைத்து அடித்து உதைத்து ஜாக்கெட்டைக் கிழித்து அசிங்கப்படுத்திக் கோர தாண்டவம் ஆடியிருக்கிறார் கோழிப் பண்ணை அதிபர் ஒருவர்.
தாக்குதலுக்கு உள்ளான அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்துவிட, 'அடிப்பதற்கு முன்பே அந்தப் பெண்ணுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது’ என்று பகீர் புகாரும் கிளம்பி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ளது ஒட்டம்பட்டு கிராமம். இங்கே செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் கோழிப் பண்ணை ஒன்றை நடத்துகிறார் கிருஷ்ணராஜ். ஆறு மாதங்களுக்கு முன்னர் கோழிப் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்தார், அதே பகுதியைச் சேர்ந்த அனிதா. அவர்தான் கடந்த மாதம் 23-ம் தேதி அப்பம்பட்டு பேருந்து நிறுத்தத்தில் கிருஷ்ண​ராஜால் அவமானப்படுத்தப்பட்டு, 28-ம் தேதி இறந்து​போனார்.
அனிதாவின் உடலை சாலையில்வைத்து, சாலை மறியலும், உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தி மக்கள் ஆத்திரம் காட்டியுள்ளார்கள். போராட்டம் நடத்தியவர்களிடம் பேசினோம். ''பார்த்திபன் என்பவரோடு 12 வருடங்களுக்கு முன்பே அனிதாவுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. ஆறு மாதங்களுக்கு முன்பு, அவர்கள் இருவரும் சேர்ந்துதான் கிருஷ்ணராஜின் கோழிப் பண்ணையில வேலைக்குச் சேர்ந்தாங்க. அங்கே கிருஷ்ணராஜ் விரிச்ச வலையில் அனிதா எப்படியோ விழுந்துட்டா. அதனால் விஷயம் தெரிஞ்சு புருஷன் பொண்டாட்டிக்கு இடையில சண்டை வந்து பிரிஞ்சுட்டாங்க. அதன் பிறகு ஏனோ கிருஷ்ணராஜைவிட்டும் அனிதா விலகினா. சென்னையில இருக்கும் அவளோட அக்கா வீட்டுக்குப் போயிடலாம்னு முடிவெடுத்தா. இதில்தான் ஏதோ சிக்கல் நடந்திருக்கிறது. அதனால் ஆத்திரப்பட்ட கிருஷ்ணராஜ், அவளுக்கு விஷம் கொடுத்து அடிச்சு உதைச்சுக் கொடுமைப்படுத்திக் கொலையும் செஞ்சுட்டார்'' என்றார்கள்
அனிதாவின் அம்மா விமலா, ''சம்பவம் நடந்த அன்று, சென்னையில் இருக்கும் என் மூத்த பொண்ணு வீட்டுக்குப் போறதுக்காகக் கிளம்பினா. ஆனா, சாயந்திரமா அலங்கோலமாத் தள்ளாடிக்கிட்டே வீட்டுக்கு வந்தா. என்னம்மானு கேட்டதுக்கு, 'கிருஷ்ணராஜ் என்னை பஸ்ல இருந்து இறக்கிக் கட்டாயப்படுத்தி ஜூஸ் கொடுத்தான். அதைக் குடிச்சதும் எனக்கு மயக்கம் வந்திடுச்சு. என்னை அடிஅடின்னு அடிச்சு, என் துணியையும் கழட்டி ரோட்லவைச்சு அசிங்கப்படுத்திட்டான். நான் புருஷனைவிட்டு வந்தது தப்பும்மா... என்னை எப்படியாவது காப்பாத்தும்மானு கதறினா'' என்றவர் அதற்கு மேல் பேச முடியாமல் அழுதார்.
சற்று நேரம் கழித்து, ''ராத்திரி 7.30 மணி அளவில் முண்டியம்பாக்கம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். கிருஷ்ணராஜ் அங்கேயும் வந்துட்டான். அவன் என்கிட்ட, 'உண்மையை யார்கிட்டேயாவது சொன்னா... உன் புருஷனுக்கும் விஷம் கொடுத்துடு​வேன்’னு மிரட்டினான். டாக்டருங்க விஷம் சாப்பிட்டதாலதான் பொண்ணுக்கு இந்த நிலைமைனு சொன்னாங்க. என்ன செஞ்சும் காப்பாத்த முடியாம என் மக செத்துப்போயிட்டா...'' என்றார் வழியும் கண்ணீருடன்.
சம்பவத்தை நேரில் பார்த்த சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். ''சாயங்காலம் மூன்றரை மணி இருக்கும். அந்தப் பொண்ணு செஞ்சி போற பஸ்ல இருந்துச்சு. அப்போ வந்த கிருஷ்ணராஜ், அந்தப் பொண்ணை வலுக்கட்டாயமா கீழே இறக்கி, கட்டாயப்படுத்தி ஜூஸ் குடிக்கச் சொன்னான். குடிச்சதும், அவளை அடிச்சு, துணிகளை எல்லாம் அவுத்து... சுவத்துல தள்ளினான். அப்போ இந்த வழியா ஆடு மேய்ச்சிட்டு வந்த ஒருத்தர் தட்டிக்கேட்டார். பக்கத்துல இருந்த ஒரு கடைக்காரரும் தட்டிக்கேட்டார். 'இவ என்னோட பொண்டாட்டி. நான் ஒரு வக்கீல். யாரும் என்னை ஒண்ணும் செய்ய முடியாது. உன் வேலையைப் பாத்துக்கிட்டு போ’னு மிரட்டினான். கொஞ்ச நேரத்துல அந்தப் பொண்ணு மயக்கம் போட்டுக் கீழே விழுந்திடுச்சு. அப்புறமா எந்திரிச்சுப் போயிடுச்சு'' என்றனர் பதற்றத்துடன்.
சாலை மறியல், உண்ணாவிரதத்தை முன் நின்று நடத்திய செஞ்சி பா.ம.க. ஒன்றியச் செயலாளர் அய்யனார், ''கிருஷ்ணராஜ் வக்கீலுக்குப் படித்தவர் என்றாலும் கோர்ட்டுக்குப் போவது இல்லை. கிருஷ்ணராஜ் அந்தப் பொண்ணுக்கு ஜூஸ்ல விஷம் கலந்து கொடுத்துக் கொலை செஞ்சு இருக்கான். ஆனா, போலீஸ்காரங்க அந்தப் பொண்ணே விஷம் குடிச்சிட்டதா வழக்குப் பதிவு செஞ்சு இருக்காங்க. முதல்ல தற்கொலைனு வழக்குப் பதிவு செய்த போலீஸார், சாலை மறியலுக்குப் பிறகு, தற்கொலைக்குத் தூண்டிய பிரிவில் வழக்குப் போட்டு இருக்காங்க. ஆனா, இது கொலை வழக்கு. இந்த வழக்கில் மகளிர் ஆணையம் தலையிட்டு, அந்தக் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவதற்கும், சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் சிபாரிசு செய்யணும்'' என்று வேண்டுகோள் வைத்தார்.
அனந்தபுரம் சிறப்பு எஸ்.ஐ. சேக​ரிடம் பேசினோம். ''விசாரணை நடந்து​வருகிறது. தற்கொலைக்குத் தூண்டுதல் பிரிவில் கிருஷ்ணராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலை​மறைவாகி​விட்டார். தேடி வருகிறோம்'' என்றார்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்பதற்காக கிருஷ்ணராஜ் வீட்டுக்குச் சென்றோம். அவருடைய வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவருடைய செல்லும் ஆஃப். அக்கம் பக்கத்தினரும் பேசத் தயாராக இல்லை.
என்று ஒழியுமோ பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!

No comments:

Post a Comment