Wednesday, August 22, 2012

தப்பிப்பாரா அழகிரி? தடதடக்கும் தேர்தல் வழக்கு


த்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு எதிராக வரிசை கட்டும் வழக்குகளில், தேர்தல் விதிமுறைமீறல் வழக்கு இப்போது சூடுபிடித்து இருக்கிறது! 
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் களம் இறங்கிய அழகிரியை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக மோகனை நிறுத்தியது சி.பி.எம். இந்த வெற்றியை எதிர்த்து மோகன்  தொடர்ந்த வழக்குதான் அழகிரிக்கு சிக்கலை உருவாக்கி உள்ளது. மோகன் இறந்துவிட்ட நிலையில் அதே கட்சியைச் சேர்ந்த லாசர் இந்த வழக்கின் மனுதாரராகத் தொடர்கிறார். இதை அழகிரி தரப்பு ஆட்சேபனை செய்தது.
'மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த லாசருக்கு எவ்வித உரிமையும் இல்லை’ என்று உயர் நீதிமன்றத்தில் வாதம் செய்தது அழகிரி தரப்பு. அதை நிராகரித்து வழக்கு விசாரணையைத் தொடங்கியது உயர் நீதிமன்றம். இந்த விசாரணைக்குத் தடை கேட்டு, கடந்த டிசம்பரில் உச்ச நீதிமன்றம் போனார் அழகிரி. விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடந்த 16-ம் தேதி, 'லாசர் தனது மனுவில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரம் அவகாசம் அளிக்கிறோம்’ என்று தீர்ப்பு எழுதி உள்ளனர்.
 
உச்ச நீதிமன்றத்தில் லாசருக்காக ஆஜரான வழக்​கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம். ''லாசர் தனியாக அஃபிடவிட் தாக்கல் செய்யவில்லை. மோகன் தாக்கல் செய்த மனுவையே அவரும் தொடர்கிறார். அந்த மனுவில் உள்ள குறிப்பிட்ட ஏழு பாராக்கள் ஆட்சேபகரமாக இருப்பதால், அதை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட அழகிரியின் வக்கீல் அந்தி அர்ஜுனா, 'உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையே தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கோரினார். 'தேர்தல் வழக்குகளை விசாரணைக்கு எடுக்கும் முன்பே அப்படி நீக்க முடியாது. விசாரணை தொடங்கிய பிறகுதான் முடிவு செய்ய முடியும். லாசர் தனியாக அஃபிடவிட் தாக்கல் செய்யவில்லை என்ற பிரச்னையை மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் எழுப்பவில்லை. இருந்தாலும் அதைச் சரிசெய்துவிட முடியும்’ என்று நாங்கள் வாதிட்டோம். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கி இருக்கின்றனர். உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை தொடங்கும்'' என்றார்.
அழகிரிக்காக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர் அழகுராமன், ''மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒருவரின் வெற்றியைக் கேள்விக்குறியாக்குவது சாதாரண விஷயம் அல்ல. லாசர் தரப்பில் தாக்கலான மனுவில், 'தேர்தலில் பணப் பட்டுவாடா நடந்தது, வேட்டி சேலை கொடுத்தனர், அரசு எந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது’ என்றெல்லாம் கூறப்பட்டு உள்ளது. ஆனால், அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. அவர்களுடைய கட்சிக்காரர்கள் கொடுத்த வாக்குமூலங்களையும் அனுப்பிய புகார்களையும் எப்படி ஆதாரங்களாக எடுத்துக்கொள்ள முடியும்? தொகுதியில் போட்டியிட்ட அனைவரையுமே எதிர்மனுதாரராகச் சேர்த்து, அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும்.  இப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி லாசரின் மனுவில் உள்ள தவறுகளை வேண்டுமானால் சரிசெய்யலாம். ஆனால், பொய்யான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அவர்களால் ஆதாரங்களைக் கொடுக்க முடியாது. அதனால், இந்த வழக்கு எங்களுக்குத்தான் சாத கமாக இருக்கும்'' என்கிறார்.
ஆனால் லாசரோ, ''தேர்தல் நேரத்தில் நடந்த அத்துமீறல்களையும் அராஜகங்களையும் நான் களத்தில் நின்று பார்த்தவன். முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்களும் சாட்சிகளும் இருப்பதால், அழகிரி தப்பிக்கவே முடியாது'' என்கிறார்.
அடுத்த நாடாளுமன்றத்தேர்தல் வரப்போகிறது. அதற்குள் வருமா தீர்ப்பு?

No comments:

Post a Comment