Monday, December 12, 2011

வில்லங்கம் செய்தாரா மல்லை சத்யா?

நில அபகரிப்புப் புகாரில் ம.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா தலை உருள்கிறது. சென்னை, சிட்லப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வானை. கணவரை இழந்தவர். இவரது பூர்வீக இடத்தை மல்லை சத்யா அபகரித்துக் கொண்டதாக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளார். தெய்வானையிடம் பேசினோம்.


''திருப்போரூர் அருகே உள்ள நெல்லிக்குப்பம்தான் என் கணவர் தேவராஜின் சொந்த ஊர். உடல்நிலை சரி இல்லாமல் கடந்த 2008-ம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். என் கணவரின் மருத்துவச் செலவுக்காக எங்களது பூர்வீகச் சொத்தை விற்றுத் தரும்படி பத்திரம், பட்டா, சிட்டாக்களை மல்லை சத்யாவிடம் கொடுத்தேன். மொத்தம் 30 லட்சம் ரூபாய் தருவதாக சொல்லி, ஐந்து லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக பலமுறை அவரிடம் மீதிப் பணத்தை கேட்டு அலைந்துவிட்டேன். பணத்தையும் தரவில்லை; பத்திரம் உள்ளிட்ட ஆவணங் களையும் தரவில்லை.

வேறு வழி இல்லாமல் நான் போலீஸுக்குப் போக வும், 'பெண் என்பதால் பொறுத்துப் போகிறேன். இல்லை என்றால், நடக்கிறதே வேற...’ என்று போனில் மிரட்டினார். கணவனையும் இழந்து, கையில் இருந்த சொத்துக்களையும் இழந்து நிராதரவாக நிற்கிறேன். இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீஸ், காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் கொடுத்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் இப்போது டி.ஜி.பி-யிடமே நேரில் மனு கொடுத்துவிட்டேன். இனியாவது எனக்கு நியாயம் கிடைக்கவேண்டும்'' என்றார் கண்ணீருடன்.


தெய்வானையின் புகார் குறித்து மல்லை சத்யாவிடம் விளக்கம் கேட்டோம்.
''உதவி செய்யப்போய் உபத்திரவம் வந்த கதை இது. தன்னுடைய நிலத்தை விற்றுத்தரக் கேட்டு அவர் வந்தது உண்மைதான். எனது அரசியல் பணிகளுக்கு இடையே நில விவகாரங்களைக் கவனிப்பது இயலாத காரியம். அதனால், அவருக்கு உதவச் சொல்லி நண்பர்களி டம் கூறினேன். அதோடு அந்த விவகாரம் முடிந்து விட்டது. அதன்பின்பு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. தெய்வானையின் நிலம் எங்கே இருக்கிறது? அதில் என்ன வில்லங்கம் இருக்கிறது என்பதுகூட எனக்குத் தெரியாது. இப்படி ஒரு புகாரை அவர் என் மீது கொடுத்ததின் பின்னணியில் அரசியல் சக்தி இருப்பதாக சந்தேகிக்கிறேன். அந்த சொத்து தொடர்பாக விபரங்கள் திருப்போரூர் ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளரான வழக்கறிஞர் சிவராமனுக்குத் தெரியும். அவரிடம் கேளுங்கள்...'' என்றார்.
வழக்கறிஞர் சிவராமனிடம் பேசினோம். ''இறந்துப்போன தெய்வானையின் கணவ ருக்கு 2.9 ஏக்கர்

நிலம் உள்ளது. அதில் 1.4 ஏக்கர் நிலத்தில் மட்டும் தெய்வானை தனது ஆயுள் முழுவதும் அனுபவப் பாத்தியதையாக வைத்துக்கொள்ளலாம். தேவராஜ் மூலமாக தெய் வானைக்கு வாரிசு இருந்தால் அந்த வாரிசுதாரர் இடத்தை கிரையம் செய்துகொள்ளலாம் என்று பத்திரம் எழுதப்பட்டுள்ளது.


ஏனெனில் தெய்வானை, தேவராஜுக்கு மூன் றாவது மனைவிதான். இவர்களுக்கு வாரிசு கிடையாது. தேவராஜின் முதல் இரண்டு மனைவி களுக்கும் வாரிசுகள் இருக்கிறார்கள். அவர்களும் இந்தச் சொத்தில் பங்கு கேட்டு பிரச்னை கிளப்பி வருகிறார்கள். எனவேதான், நிலத்தை விற்றுத்தரச் சொல்லி எங்களிடம் வருவதற்கு முன்னரே, ரவி என்பவரிடம் இதே நிலத்தை விற்க ஒப்பந்தம் போட்டு

முன்தொகையும் பெற்றுள்ளார் தெய்வானை. இந்த விபரங்கள் எல்லாவற்றையும் அவர் எங்களிடம் மறைத்து விட்டார். அதனால்தான் ஏற்கெனவே அவர் கொடுத்த புகார்களின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை.


தன் மீதான தவறுகளை திசை திருப்பும் நோக்கத் துடனும் வேறு சிலர் தூண்டுதலின்படியும் மல்லை சத்யா மீது தெய்வானை புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரிலும் எந்த முகாந்திரமும் இல்லை. ஏனெனில், இடத்தை விற்றுத்தரக் கோரி இப்போது தெய்வானை ஒப்பந்தம் போட்டு இருப்பது ஹனீஃபா என்பவருடன்தான். முக்கிய அரசியல் பிரமுகர்கள் மீது நில அபகரிப்பு புகார் கொடுத்தால், அவர்கள் பயந்துக்கொண்டு தனக்கு உதவுவார்கள் என்று எண்ணி விட் டார் தெய்வானை...'' என்றார்.

தேவராஜின் இரண்டாவது மனைவியின் மகன் சொக்கலிங்கம் என்பவர் நம்மைத் தொடர்பு கொண்டு, ''என் தந்தை இறந்த போது எங்கள் ஊருக்கு வந்த தெய்வானை, அதன்பிறகு 16-ம் நாள் காரியத்துக்குகூட வரவில்லை. ஆனால், இடத்தை எப்படியாவது விற்றுவிட முயற்சி செய்கிறார். எங்களுக்குச் சொந்தமான நிலத்துக்கும் சேர்த்து முறைகேடாக பட்டாவும் வாங்கி வைத்துள்ளார்...'' என்றார் குமுறலோடு.

யார் மீது குற்றம் என்பதை இனி நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும்!

No comments:

Post a Comment