Friday, December 23, 2011

“பெண்கள் வந்திருக்கிறோம்.. அந்தாளை வெளியே வரச் சொல்லுங்கள்!”

ஆயிரக் கணக்கான பெண்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கய்ரோ வீதிகளில் ஒன்று திரண்ட காட்சி, எகிப்திய சரித்திரம் சமீபத்தில் காணாதது!கடந்த 1919-ம் ஆண்டில் எகிப்தின் பெண்கள் ஹூடா ஷாராவியின் தலைமையில் கய்ரோ வீதிகளில் இறங்கி 92 ஆண்டுகளின்பின் இப்போதுதான் ஆட்சிக்கு எதிராக போராட ஆயிரக் கணக்கான பெண்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள்.


1919-ல் போராடியது, பிரிட்டிஷ் ஆட்சியை விரட்டுவதற்காக. நேற்று மாலை இறங்கியது, தற்போதைய எகிப்திய ராணுவ ஆட்சியாளர்களை துரத்துவதற்காக!எகிப்திய பெண் ஒருவர் வீதியோரத்தில் ராணுவத்தினரால் தரையில் வீழ்த்தப்பட்டு, ஆடை களையப்பட்டு, கால்களால் மிதிக்கப்பட்ட போட்டோ வெளியான பின்னரே பெண்களின் போராட்டம் இப்படி உச்ச நிலைக்கு சென்றிருக்கிறது.அந்த போட்டோ உலகெங்கும் பிரசுரமாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.



நேற்று மாலை வீதியில் இறங்கி கோஷமிட்ட பெண்கள் ராணுவத்தினரை நோக்கி, “எங்களையும் தரையில் வீழ்த்துங்கள். ஆடைகளைக் களையுங்கள் சகோதரர்களே. உடல்களை மூட ஆடைகள் தேவையில்லை – அவை எமது ரத்தத்தால் மூடப்படும்” என்று கோஷமிட்டது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.


ராணுவம் ஒதுக்குப்புறமாக ஒதுங்கி நின்றது!

கய்ரோவில் உள்ள ராணுவ தலைமைச் செயலக கட்டடத்தை நோக்கி கோஷமிட்ட பெண்கள், “எங்கே அந்த ஆள்? வெளியே வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று கோஷமிட்டனர்.
‘அந்த ஆள்’ என்று இவர்கள் கோஷமிட்டது, எகிப்தில் ராணுவ ஆட்சியை நடத்தும் ராணுவ கவுன்சிலின் தலைவர் மொஹாமெட் ஹூசேன் டன்டாவியை குறித்துதான்!

“எகிப்தின் பெண்கள் வந்திருக்கிறோம் ஆடைகளை களைந்து தாக்க அந்தாளை வரச் சொல்லுங்கள்” என்ற கோஷம் ஆயிரக் கணக்கான பெண்களிடமிருந்து எழுந்தது.
நேற்று வீதியில் இறங்கி ஊர்வலமாகச் சென்ற பெண்களையும் ராணுவத்தினர் தாக்கலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, ஊர்வலம் சென்ற பாதை நெடுகிலும் ஆயிரக் கணக்கான ஆண்கள் வீதியின் இருபுறமும் அணிவகுத்து நின்றார்கள். காலையில் ஆரம்பமாகி மாலைவரை பெண்கள் வீதியில் கோஷமிட்டபடி நின்றனர்.
ராணுவத்தினர் யாருமே வெளியே தலையைக் காட்டவில்லை. ஒதுக்குப் புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

No comments:

Post a Comment