Monday, December 26, 2011

முல்லைப் பெரியாறு பிரச்னை: எம்.பி.,க்கள் "எஸ்கேப்'

முல்லைப் பெரியாறு அணையில், தமிழகத்திற்கான உரிமையை தர மறுக்கும் கேரள அரசுக்கு, அங்குள்ள அனைத்து கட்சிகளும், ஒருமித்த ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் கட்டுப்படாமல், கண்டிப்புக் காட்டும் கேரளத்திற்கு, குட்டு வைக்க வேண்டிய மத்திய அரசு, மவுனம் சாதிக்கிறது.




தமிழக மக்கள் ஒன்று திரண்டதால், வேறு வழியின்றி, தமிழக அரசியல் கட்சிகளும் போராட முன்வந்தன. ஈரோடு, கரூர், கோவை என, வைகை பாசனத்திற்கு தொடர்பு இல்லாத பகுதிகளில் கூட, கேரள அரசு மீதான எதிர்ப்பை, பொதுமக்கள் வெளிப்படுத்தினர். ஆனால், முல்லைப் பெரியாறு பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள தென் மாவட்டத்தில், செல்வாக்கான மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு, "ஜீரோ' ஆக உள்ளது.



* மதுரை மாவட்டத்தில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் எக்டேர் விவசாய நிலத்தில், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர், பெரியாறு-வைகை பாசனப்பகுதி. ஆறு ஊராட்சி ஒன்றியங்களில், ஆயிரக்கணக்கான விவசாயிகளை கொண்ட மாவட்டத்தில், காங்., உடன் கூட்டணி வைத்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி எம்.பி., ஆக, மத்திய உர அமைச்சராக உள்ளார். ஆனால், அவர் விவசாயிகளுக்காக, இதுவரை குரல் கொடுக்கவில்லை. கட்சி அறிவித்த ஆர்ப்பாட்டத்தில் கூட, "ஆப்சென்ட்'.



* திண்டுக்கல் மாவட்டத்தில், இரண்டு லட்சத்து 20 ஆயிரம் எக்டேர் விவசாய நிலம் உள்ளது. 95 பொதுப்பணித் துறை, 2,023 ஊராட்சி ஒன்றிய கண்மாய்கள் உள்ளன. ஒரு லட்சத்து 15 ஆயிரம் எக்டேர் நிலத்தில், விவசாயம் நடக்கிறது. இதில், 20 ஆயிரம் எக்டேர் நிலம், வைகை பாசனத்தை நம்பியுள்ளது. திண்டுக்கல் எம்.பி., ஆக காங்., கட்சியின் சித்தன் நீடிக்கிறார். பெரியாறு அணையின் உரிமையை கேட்காமல், மக்கள் எழுச்சி அதிகமான போது, இடுக்கி மாவட்டத்தை இணைக்கும் கோரிக்கையை வைக்கிறார். சரி... வைத்த கோரிக்கையை நிறைவேற்ற, ஆக்கப்பூர்வமாக செயல்பட்டார்களா என்றால், அதுவும் இல்லை. கேரள காங்கிரஸ் எம்.பி.,க்கள் எல்லாம் போராடி முடித்த பிறகு, நமது எம்.பி.,க்கள் வெளியில் வந்தனர்.



* வறட்சிக்கு பெயர் போன ராமநாதபுரம் மாவட்டத்தில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் எக்டேர் விவசாய நிலம் உள்ளது. ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 845 எக்டேர் நிலத்தில் விவசாயம் நடக்கிறது. இதில், 18 ஆயிரத்து 485 எக்டேரில் மிளகாய் பயிரியிடப்படுகிறது. வைகை பாசனம் மூலம், ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. மொத்தமுள்ள 1,694 கண்மாயில், வைகை பாசன கண்மாய்கள் 374. "வைகை இல்லையேல், வாழ்க்கையே இல்லை' என்ற நிலை தான் ராமநாதபுரத்தில். ராமநாதபுரத்தின் எம்.பி., ஆக வெற்றி பெற்றவர் ரித்தீஷ்குமார். வைகை நீர் கிடைக்காவிட்டால், தொகுதி மக்கள் வாடி விடுவர், என்று சிந்திக்க, இவருக்கு நேரமில்லை. கனிமொழி வழக்கு நடந்த போது, டில்லி பாட்டியலா கோர்ட்டில், நடிகை குஷ்பு குழுவோடு சென்று, "தலை காட்ட' காட்டிய ஆர்வத்தின் ஒரு பகுதியை, தொகுதி மக்களின் நீர் ஆதாரத்திற்கு காட்டியிருக்கலாம்.



* பெரியாறு பாசனத்தின் பிரதான பகுதியான தேனி மாவட்டத்தில், மூன்று லட்சத்து 25 ஆயிரம் எக்டேர் விவசாய நிலம் உள்ளது. இதில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் எக்டேரில், விவசாயம் நடக்கிறது. பெரியாறு நேரடி பாசனமாக, 85 ஆயிரம் எக்டேர் நிலங்கள் பயன்பெறுகின்றன. 348 கண்மாய்கள் பெரியாறு பாசனத்தை நம்பியுள்ளன. முல்லைப் பெரியாற்றில், முதலில் பயன் பெறும் பகுதியில், காங்., கட்சியின் ஆரூண், எம்.பி.,ஆக உள்ளார். போராட்டம் தீவிரமாகி, "இவரை காணவில்லை' என, மக்கள் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்த பிறகு, ஒருவழியாக தேனி வந்தார். "அணைக்கு போகிறேன்' என்று புறப்பட்டு, கைதாகி விடுதலை ஆனார்.



* சிவகங்கை லோக்சபா எம்.பி., ஆகவும், மத்திய உள்துறை அமைச்சராகவும் இருப்பவர் சிதம்பரம். மத்திய அரசின் முக்கிய தளபதிகளில் ஒருவர். 93 ஆயிரத்து 300 எக்டேர் விவசாய நிலம் கொண்ட சிவகங்கை மாவட்டத்தில், பெரும்பாலானவை வானம் பார்த்த பூமி.கடந்த ஆண்டு 84 ஆயிரத்து 525 எக்டேர் நிலத்தில், நடவுப் பணி நடந்தது. பொதுப்பணித் துறை, ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில், 4,951 கண்மாய்கள் உள்ளன. கடந்த ஆண்டு, நல்ல மழை இருந்தும், சிவகங்கை மாவட்டத்தில், முழுமையான விவசாயம் நடக்கவில்லை. 2,700 எக்டேர் பயறு விவசாயத்தில், 1,400 எக்டேரும், 9,400 எக்டேர் எண்ணெய் வித்துக்கள் விவசாயத்தில் 5,700 எக்டேரும், 7,500 எக்டேர் கரும்பு விவசாயத்தில், 3,154 எக்டேர் நிலங்களில் மட்டுமே, விவசாயம் நடந்தது. நீர் பற்றாக்குறையால், ஒவ்வொரு ஆண்டும், விவசாயம் செய்யும் நிலங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆண்டுக்கு, 413 மி.மீ., மழை சராசரியாக பெய்தாலும், வைகை பாசனம் கைகொடுத்தால் மட்டுமே, சிவகங்கையில் 60 சதவீதம் விவசாயம் பயன்பெறும். முல்லைப் பெரியாறு பயன்பாட்டில், சிவகங்கைக்கு அந்த அளவு முக்கியத்துவம் உள்ளது. தமிழகத்திற்காக இல்லாவிட்டாலும், எம்.பி., ஆக தேர்வு செய்த சிவகங்கை மக்களின் நலனில் அக்கறை வைத்தாவது, சிதம்பரம் இப்பிரச்னையில் தீவிரம் காட்டியிருக்கலாம். உரிமை பறிபோகிறதே என, தென் மாவட்ட மக்கள் கொதித்து எழுந்த போது, பல நாட்கள் எதுவுமே பேசாமல் இருந்து விட்டு, இறுதியில் கேரள இடைத் தேர்தல் தான், அணை பிரச்னைக்கு காரணம் என பேசி, மறுநாள் கேரள அரசியல்வாதிகளுக்கு பணிந்து வருத்தம் தெரிவித்தார்.



* விருதுநகர் மாவட்டத்தின் 65 ஆயிரத்து 685 எக்டேர் நிலத்தில், 50 ஆயிரம் எக்டேரில் விவசாயம் நடக்கிறது. இதில், 1,500 ஏக்கர் வைகை பாசன பகுதிகள் உள்ளன. அருப்புக்கோட்டை பகுதிக்கு செல்வது, வைகை தண்ணீரே. முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு முழக்கமிட்டு வரும் வைகோவை தோற்கடித்து, தம்மை தேர்ந்தெடுத்த நன்றிக்காவது, மாணிக்தாகூர் எம்.பி., கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம். கேரளாவின் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,கள் முல்லைப் பெரியாறு விவகாரத்தில், தம் மாநிலத்திற்கு வெளிப்படையாக உதவுகின்றனர். இங்கோ, மறைமுகமாகக் கூட உதவ யாரும் முன்வரவில்லை. இந்த எம்.பி.,க்கள் ஒன்று சேர்ந்து, பிரதமரை நிர்பந்தித்து, நமக்கு சாதகமாக கூட எதுவும் செய்ய வேண்டாம். அணை தொடர்பான நமது உரிமையை இழக்காமல் இருக்க, ஏதாவது செய்யலாம். போராடும் மக்களுக்கு துணை நிற்கலாம்.

No comments:

Post a Comment