Friday, December 23, 2011

இருவர்! திடீர் பிளவு பின்னணி!

ஆறு மாதத்தைக் கடந்துவிட்டது ஜெ.வின் மூன்றாம் முறை ஆட்சி. அவர்தான் முதல்வர் என்றாலும் மற்ற துறைகளுக்கு யார் அமைச்சர்கள், யார்யார் அதிகாரிகள் என்பதெல்லாம் உறுதியாகச் சொல்ல முடியாத நிலைமையே நீடிக்கிறது. மந்திரிசபையிலும் அதிகாரிகள் நிலை யிலும் மாற்றங்கள் தொடர்ந்தபடியே இருப்பதால், ஆட்சி நிர்வாகம் பற்றிய விமர்சனங்களைக் கோட்டை வட் டாரத்தில் நிறையவே கேட்க முடிகிறது.


"சாயங்காலம் 6 மணிக்கு மேலே எந்த அதிகாரியையும் மேடம் பார்க்குற தில்லை. ரொம்ப முக்கியமான விஷயத் தைச் சொல்றதுக்காக போயஸ் கார்ட னுக்குப் போனால் கூட இன்டர்காமில் மட்டும்தான் பேசமுடியும். அதுவும் ஒரு சில நிமிடங்களுக்குத்தான். உளவுத்துறை அதி காரிகளா இருந்தாலும் இதே நிலைமைதான்' என்று கோட்டையில் உள்ள முக்கிய அதிகாரிகள் சொல்வதை, போயஸ் கார்டன் வட்டாரமும் ஆமோதிக்கிறது.

""முந்தைய ஆட்சியில் நைட்டு எத்தனை மணியா இருந்தாலும் முதலமைச்சர்கிட்டே பேசிட முடி யும். உளவுத்துறையிலிருந்து ஒரு முக்கியமான விஷயத்தை நைட்டு 11 மணிக்கு மேலே சொல்லணும்னு விரும்பினாலும், அப்ப இருந்த முதல்வர் கலைஞரைப் பார்த்து சொல்லிடலாம். ஒருவேளை, அவர் தூங்கிட்டாலும், இரவில் பாத்ரூம் போவ தற்காக எழுந்திருக்கிறப்ப, ஏதாவது போன் வந்ததான்னு கேப்பாரு. வந்ததுன்னு சொன்னா, அந்த நம்பரைத் தொடர்பு கொள்ளச் சொல்லி, அதிகாரிகிட்டே அவரே பேசி விஷயத்தைக் கேட்டுக்குவார். காலையிலே 4 மணிக்கெல்லாம் கலைஞர் எழுந்திருச்சிடுவாரு. அப்ப முதல் வேலையே, முதல் நாள் நைட்டு பேசுன அதிகாரிகிட்டே, என்ன பாலோ-அப்னு கேட்டுத் தெரிஞ்சிக்கிறதுதான்'' என்று பழைய நடைமுறைகளைச் சொல்கிறார்கள் அதிகாரிகள்.

"உளவுத்துறையைப் பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு நிலவரம், எதிர்க்கட்சி களின் செயல்பாடுகள், அதிகாரிகளின் நடவடிக்கைகள் இது பற்றியெல்லாம் தினம்தோறும் முதல்வருக்கு ரிப்போர்ட் தரவேண்டும். 6 மணிக்கு மேல் ஜெ.வை சந்திக்க முடியவில்லை என்பதால், விவ ரங்களை நோட் போட்டு கார்டனுக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஆனால், ஜெ.விட மிருந்து எந்தத் தொடர்பும் கிடைப்ப தில்லையாம். அதன்பிறகு, மறுநாள் காலையில்தான் அதற்கு ஃபீட் பேக் வருகிறது. அதற்குள் அந்தத் தகவல்கள் ஆறுன கஞ்சி, பழங்கஞ்சி என்பதுபோல ஆகிவிடுகிறது' என்று தற்போதைய நடைமுறையைச் சொல்கிறார்கள்.

ஜெ.வை உயரதிகாரிகளால் சந்திக்க முடியாத நிலையில், அவர்களின் சாய்ஸ் சசிகலாதான். உளவுத்துறை ரிப்போர்ட் டைக்கூட சசிகலா படித்துப் பார்க்கிறார் என்கிறது போயஸ் வட்டாரம். படித்ததும், "நான் இதை அக்காகிட்டே சொல்லிடு றேன். நீங்க இந்த மாதிரியான நட வடிக்கைகளை எடுங்க' என்று சசிகலா விடமிருந்தே இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் வருகிறதாம். துறைச் செயலாளர்களால் முதல் வரை சந்திக்க முடியாவிட்டால் முதல் வரின் செயலாளர்களிடம் தகவலைத் தெரிவித்து, அதை முதல்வரின் கவனத்துக் குக்கொண்டு செல்வது முந்தைய வழக்கம். ஆனால், மாலை 6 மணிக்குமேல் முதல் வரின் செயலாளர்களே சசிகலா மூல மாகத்தான் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பேசி வருகிறார்கள்.

மந்திரிகளேகூட ஒன் டூ ஒன் பேச்சு வார்த்தை என்றால் சசிகலாவிடம்தான் பேசுகிறார்கள். ஒரு கல்லூரிக்கு கொடுக்கப்பட்ட அனுமதி திடீரென ரத்து செய்யப்பட, அவர்கள் அலறியடித்துக்கொண்டு கார்டனைத் தொடர்பு கொண்டிருக் கிறார்கள். சம்பந்தப்பட்ட மந்திரியைப் பார்க்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது.

கல்லூரி நிர்வாகத்தினர் மந்திரியைப் பார்த்ததும், "5சி ஃபிக்ஸ் பண்ணியிருக் காங்க. கட்டிட்டு, அனுமதி வாங்கிக் குங்க'ன்னு மந்திரி சொல்ல, நிர்வாகத்தின ருக்கு மேலும் அதிர்ச்சி. "போன பீரியடில் இருந்தவங்களுக்கும் கொடுத்திருக்கோம். சென்ட்ரல் கவர்மென்ட்டில் இருக்கிறவங் களையும் கவனிச்சிருக்கோம். அதனால ரொம்ப செலவாயிடிச்சி. இரண்டு சி இப்ப தர்றோம்' என்று சொல்ல, "ஒத்தை ரூபாய் குறைஞ்சாலும் நடக்காது. நான்தான் மேலே பதில் சொல்லணும்' என்று சொல்லிவிட்டாராம் மந்திரி. அதன்பிறகு அடித்துப் பிடித்து 5சி-யைக் கொண்டு வந்து செலுத்தியிருக்கிறது கல்லூரி நிர்வாகம்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், அந்த கல்லூரி நிர் வாகம் எதிர்பார்த்த அனுமதிக்கான உத்தரவு அவர்களின் அலுவலகத்திற்கே கொண்டு வந்து கொடுக்கப்பட்டிருக் கிறது. ""கேட்ட அமவுண்ட்டை தவணை எதுவும் வைக்கா மல் மொத்தமாகக் கொடுத்தால், ப்ராம்ப்ட் டெலிவரி நிச்சயம்'' என்கிறார்கள் மந்திரிகளின் ஆட்கள்.

இந்த டெலிவரி தொடர்பான முடிவுகளெல் லாம் சசிகலாவால்தான் எடுக்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல தனக்கு கீழே உள்ள அதிகாரி களிடம் வேலை வாங்குவதுதான் மந்திரிகளின் முக்கிய வேலை. இல்லையென்றால் சீட் கிழிந்துவிடும் என்பதால் சீனியர் கள்-ஜூனியர்கள் என்ற பேதமின்றி எல்லா மந்திரிகளும் விறுவிறுப்பாக வேலை பார்ப்பதைக் கோட்டைக்குச் செல்பவர்களால் கவனிக்க முடிகிறது.

ஒரு சில அதிகாரிகள்தான் சரியாக ஒத்துழைப்பதில்லை என்று மந்திரிகள் தரப்பிலிருந்து சசி கலாவிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு சசிகலா, ""தி.மு.க பீரியடில் நல்ல இடத்தில் இருந்த அதிகாரிகள் சிலபேர் நம்ம மூலமா இப்பவும் நல்ல போஸ்டிங் வாங்கிட்டாங்க. அவங் களோட ஒர்க் இப்பவும் நல்லா இருக்கு. ரொம்ப விசுவாசமா இருக்காங்க. நம்ம ஆட்கள்னு நினைச்ச அதிகாரிகள்தான் சரியா இல்லை. பேசாம, தி.மு.க ஆட்சியில் இருந்த அதிகாரிகளையே எல்லா இடத்திலும் நியமிக்கணும் போல. எப்படி இருந்தாலும் 5 வருசம் கழிச்சி தி.மு.க.தான் ஆட்சிக்கு வரப்போகுது. தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்துக்குப் பழகிட்டாங்க. அதனால, 5 வருசம் முடியறதுக்குள்ள டெய்லி என்ன செய்யணுமோ அதை நீங்க சரியா செஞ்சிடணும்'' என்று மந்திரிகளிடம் சொன்னாராம்.

மதுபான விவகாரத்திலிருந்து போஸ்டிங், டிரான்ஸ்பர், டெண்டர், கான்ட்ராக்ட் என எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர் சசிகலாதான் என்கிற அ.தி.மு.க சீனியர்கள், சமீபகாலமா நடந்து வரும் சம்பவங்களையும் திருப்பங்களையும் பற்றி விரிவாகப் பேசினார்கள். ""உளவுத்துறையில் பவர்ஃபுல்லாக இருந்த பொன் மாணிக்கவேல் மாற்றப்பட்டது சசிகலா தரப்புக்கு முதல் ஷாக். அவர் சசிகலா குடும்பத்திற்கு வேண்டியவர் என்பது எல் லோருக்கும் தெரியும். இருந் தாலும், ஜெ. நடவடிக்கை எடுத்தபிறகு, சசிகலாவை பொன்மாணிக்கவேல் சந்தித்த போது, மாற்றப்பட்ட இடத்தில் ஜாயிண்ட் பண்ணுங்கன்னு சசிகலா சொல்லிட்டார். அடுத்த அதிரடிங்கிறது சிறப்புத் திட் டங்கள் அமலாக்கத்திற்கான செய லாளராக இருந்த பன்னீர்செல்வம் மாற்றப்பட்டதுதான்'' என்கிறார்கள்.

சசிகலாவின் குடும்ப நண்பர் தான் பன்னீர்செல்வம். பி.ஆர்.ஓ.வாக இருந்து நியமன ஐ.ஏ.எஸ்ஸாகி ரிடையர்டானவர் இவர். ஜெ. ஆட்சி அமைந்ததும் முதல்வரின் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. அவரை அரசின் சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான முக்கிய இடத்தில் நியமித்தார் ஜெ. ரிடையர்டு அதிகாரி ஒருவர் இதுபோன்ற முக்கிய இடத்திற்கு வந்ததில், தற்போதைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அதிருப்தி. எனினும், பன்னீர் செல்வத்தின் செல்வாக்கை அறிந்தவரான தற்போதைய தலைமைச் செயலாளரே அவரிடம் ஆரம்பத்தில் பலமுறை ஆலோசனைகள் நடத்தி யிருக்கிறார்.

""எம்.நடராஜ னுக்கு நண்பர் என்பதால் அவர் விரும்புகின்ற சில நியமனங்களை பன்னீர்செல்வம் மேற்கொண்டார்'' என்கிறது கோட்டை வட்டாரம். இந்த நியமனங்கள் சில அதிகாரிகளுக்கு சாதக மாகவும் சில பிராமண அதிகாரிகளுக்கு பாதகமாகவும் அமைந்திருந்தது. இது பற்றிய புகார்கள் தலைமைச் செயலாளர் வரை சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்தும் மேலும் சில பிரச்சினைகளிலும், தலைமைச் செயலாளருக்கும் பன்னீர்செல்வத்திற்கும் உரசல்கள் அதிகரிக்க, அண்மையில் ஜெ.விடம் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தியபோது, பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் பற்றித் தெரிவித்திருக்கிறார்.

அதனைக் கேட்ட ஜெயலலிதா டென்ஷனாகி, "இங்கே என்னோட ஆட்சி நடக்குதா? நடராஜன் ஆட்சி நடக்குதா? அவர் சொல்றதைக் கேட்டு பன்னீர்செல்வம் ஆடுறாரா. அவரைத் தூக்கிட்டா எல்லாம் சரியாயிடும்' என சத்தம் போட்டுள்ளார். மந்திரிகள் சில பேர் தங்களுக்கு ஒத்துவராத மாவட்ட கலெக்டர்களை மாற்றவேண்டும் என்று பன்னீர்செல்வத்திடம்தான் சொல்லி வந்திருக்கிறார்கள். அதுபோல, பசுமை வீடுகள் திட்டம் தொடக்கவிழா இருமுறை ஏற்பாடு செய்யப்பட்டும் தள்ளிப்போனதற்கு, "அத் திட்டம் தொடர்பாக பன்னீர்செல்வம் மேற்கொண்ட அணுகுமுறைகள்தான் காரணம்' என்கிறார்கள் கோட்டையில் உள்ள தலைமைச் செயலாளருக்கு நெருக்கமான அதிகாரிகள்.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்குப் பதில் மோனோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருவதென ஜெ. முடிவு செய்ததும், இந்த சிறப்புத் திட்டத்தையும் கவனித்தவர் பன்னீர்தான். 2011 ஆகஸ்ட்டில் இதற்கான டெண்டர் கால்ஃபார் செய்யப் பட்டது. செப்டம்பர் 28-க்குள் இதை முடிவு செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதை ரத்து செஞ்சுட்டு புது டெண்டர் விட்டிருக்காங்க. இதை 2012 ஜனவரி 18-க்குள் முடிக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இந்த மோனோ ரயில் திட்டத்தின் டெண்டரைப் பெற, சசிகலாவுக்கு வேண்டியவரான சிங்கப்பூர் ஜெயகுமார் என்பவர் தொடக்கத்திலிருந்தே முயற்சித்து வருகிறார். இவருக்காகத்தான் பன்னீர் செல்வம் மோனோ ரயில் டெண்டரை காலதாமதப்படுத்தினார் என்ற தகவலும் ஜெ.வுக்குப் போயுள்ளது.

இது சசிகலாவின் கவனத்திற்கு வரவே, பன்னீர்செல்வத்தை அழைத்த சசிகலாவும், "அக்கா ரொம்ப கோபமா இருக்காங்க. நீங்க இப்ப ரிசைன் பண்ணிடுங்க. அப்புறமா நல்ல போஸ்டிங் வாங்கிக்கலாம்' என்று சொல்ல, இதையடுத்துதான் 13ஆம் தேதி ராஜினாமா செய்தார் பன்னீர் செல்வம்.

சிறப்புத் திட்ட செயலாக்க அதிகாரியாக இருந்த பன்னீர்செல்வத்திற்கு வேண்டியவர்களோ, ""எம்.நடராஜனுடன் பன்னீர் செல்வம் நெருக்கமானவர் என்பதால் அவர் மீது ஜெ.வுக்கு ஒரு சந்தேகம் இருந்து வந்தது. ஜெ.வின் செக்யூரிட்டி அதி காரிகளான திருமலைச்சாமியும் பெருமாள்சாமியும் நடராஜ னுக்குப் பல தகவல்களைப் பரிமாறுவதாகவும் கார்டனில் சந்தேகம் உண்டு. இவர்களின் வீடுகளுக்கு காஸ்ட்லியான கார் களில் சிலர் வந்து பேசிவிட்டுப் போவதாகவும் ஜெ.வின் கவனத் திற்குத் தகவல் போய் இருக்கிறது. பெங்களூருவில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஜெ.வுக்குப் பாதகமாக வரும்போது, நடராஜனை முதல்வராக்க ஒரு ப்ளான் இருப்பதாகவும் தகவல்கள் கசிய, இதற்கெல்லாம் வசதியாகத்தான் பன்னீர்செல்வம் காய் நகர்த்துகிறார் என்று சந்தேகப்பட்டு பதவியைப் பறித்துவிட்டார்கள். இதன் பின்னணியில் உயர்சாதி அதிகாரிகளின் கைங் கர்யமும் இருக்கிறது. பன்னீரைப் பொறுத்தவரை அ.தி.மு.க என்றால் அதன் ராஜா எம்.ஜி.ஆர்., ராணி ஜெயலலிதா என்று விசுவாசத்துடன் சொல்வார்'' என்கிறார்கள்.

இந்நிலையில், டிசம்பர் 14-ந் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக 13-ந் தேதியே ரெடியாக ஆரம்பித்த சசிகலாவுக்கு கோட்டையில் நடந்த ஒரு முக்கிய விஷயம் உடனடியாகக் கவனத்திற்கு வரவில்லை. பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவுக்குப் பிறகு, கோட்டையில் மந்திரிகளை அழைத்து ஆலோ சனை நடத்தினார் ஜெ. அப்போது, "இன் னையிலிருந்து உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறேன். உங்க துறைச் செயலாளர்கள், அதிகாரிகளை வைத்து எந்த முடிவு வேண்டு மென்றாலும் எடுங்கள். சந்தேகம்னா என்னைக் கேளுங்க. வேற யார் தலையீட்டையும் அனுமதிக்காதீங்க. யார் பேச்சையும் கேட்க வேண்டியதில்லை' என்று அழுத்தம் கொடுத்துச் சொல்லியுள்ளார். கோட்டையிலிருந்து கார்டனுக்குத் திரும்பிய ஜெ., "சசிகலாவுக்கு வேண்டிய 8 பேர் இனி கார்டனுக்கு வரக்கூடாது' என்றும் சொல்லி விட்டாராம்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜ ராகிவிட்டு வெளியே வந்த சசிகலாவுக்கு இந்த விவரங்கள் தெரியவர, சென்னை திரும்பியதும் போயஸ் கார்டனுக்கு வரவில்லை. சிங்கப்பூர் ஜெயகுமார் தங்கியிருந்த சென்னை கெஸ்ட் ஹவுஸின் சாவி, சசிகலா வசம்தான் இருக்கிறது. அங்கு போய் தங்கிவிட்டார் சசிகலா. இதுதான் கார்டனிலும் கோட்டையிலும் அ.தி.மு.க வட்டாரத்திலும் பலத்த விவாதங்களை எழுப்பியுள்ளது.

ஐ.பி.எஸ். பொன்.மாணிக்கவேல், ஐ.ஏ.எஸ். பன்னீர்செல்வம், கருத்தையா பாண்டியனைத் தொடர்ந்து ஜெ.வின் அப்பாயிண்ட்மெண்ட்டுகளை கவனித்து வந்த செயலாளர் ராமலிங்கம் வியாழனன்று மாலை அதிரடியாக மாற்றப்பட்டது சசிகலா வட்டாரத்துக்கு இன்னொரு அதிர்ச்சி.

சீனியர் மந்திரிகளிடம் இது பற்றி பேசியபோது, ""இது சிம்பிளான ஈகோ பிரச்சினை. இதுமாதிரி எத்தனையோ முறை நடந்திருக்குது. ஒரு மாசம் கழிச்சி இரண்டு பேரும் வழக்கம்போல செயல்படுவாங்க. இவங்க ஈகோ சண்டையை நம்பி, நாங்க ஒரு ஸ்டாண்ட் எடுத்தால் அப்புறம் ஒரு மாசம் கழிச்சி எங்க பதவி காலியாயிடும்'' என்கிறார்கள் எச்சரிக்கை யுடன்.

ஜூனியர்களுக்குத்தான் இந்த நிலைமைகள் புரியவில்லை. சசிகலா தரப்பிலிருந்து தங்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை எப்படி நிறைவேற்றுவது, கணக்குவழக்குகளை எப்படி ஒப்படைப்பது, இப்போது கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால், நிலைமை சுமுகமானதும் பழிவாங்கப்படுவோமா என்பது போன்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment