Friday, December 23, 2011

சசிகலா போய் விட்டதால் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்புவார்களா முக்கியத் தலைவர்கள்?

சசிகலா என்ற ஒரே காரணத்திற்காக அதிமுகவை விட்டு விலகிய எம்.ஜி.ஆர். காலத்து அதிமுககாரரான முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்புவார்களா என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.



முத்துச்சாமி மட்டுமல்லாமல், அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர் பாபு என பலரும் கூட சசிகலா குழுவால் திட்டமிட்டு சதி செய்து மெதுவாக வெளியேற்றப்பட்டவர்கள் ஆவர். இவர்களுக்கு எதிராக இருந்த உள்ளூர் கோஷ்டித் தலைவர்களை பயன்படுத்திக் கொண்டு நேக்காக இவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதிலும் எஸ்.வி.சேகர் எதற்காக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் என்பது இதுவரை யாருக்குமே புரியாத புதிராகவே உள்ளது. ஜெயலலிதாவுடன் பேசக் கூட அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதுதான் சேகர் இன்று வரை கூறும் ஒரே புகாராக உள்ளது.



மேலும் ஜெயலலிதாவுக்கு யாரெல்லாம் விசுவாசமாக இருந்தார்களோ அவர்களையெல்லாம் அவருக்குப் பகையாளிகளாக்கி படு சாதுரியமாக காய் நகர்த்தியுள்ளது சசிகலா-நடராஜன் கும்பல் என்கிறது விஷயம் அறிந்த வட்டாரம்.



திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரனில் ஆரம்பித்து அனிதா ராதாகிருஷ்ணன், முத்துச்சாமி, பி.கே.சேகர்பாபு, சேடப்பட்டி முத்தையா, கருப்பசாமி பாண்டியன், இந்திரகுமாரி, அழகு திருநாவுக்கரசு, சத்தியமூர்த்தி, ஏ.வ.வேலு (இவர் திமுகவில் சேர்ந்து கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றார், இப்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார்), ஆஸ்டின், மாயத்தேவர் என பலரும் சசிகலா குரூப்பால் சாதுரியமாக ஜெயலலிதாவுக்கு எதிரானவர்களாக காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர் அல்லது அவர்களாக வெளியேறினர் என்கிறார்கள் கார்டனுக்கு நெருக்கமானவர்கள்.



இவர்களில் பலர் எப்படி வெளியேற வைக்கப்பட்டனர் என்றால், ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்காமல், அவமதிக்கப்பட்டு, ஓரம் கட்டப்பட்டு புழுங்கித் தவித்து தாங்களாகவே வெளியேற வைக்கப்பட்டனர். இவர்களின் சதியில் சிக்கி இன்னொரு புள்ளி பொன்னையன். கடந்த அதிமுக ஆட்சியில் இவர் நிதியமைச்சராக விளங்கியவர். ஜெயலலிதாவின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவர். ஜெயலலிதாவால் புத்திசாலி அமைச்சராக பார்க்கப்பட்டவர். ஆனால் தனது மகனுக்கு கட்சியில் சீட் கேட்டார் என்ற வதந்தியை ஜெயலலிதாவிடம் பரப்பி, பொன்னையனை ஓரம் கட்டி விட்டது சசிகலா குரூப் என்கிறார்கள்.



இருப்பினும் பொன்னையன் மற்றவர்களைப் போல கட்சியை விட்டு வெளியேறவில்லை. கடைசி வரை தான் எம்.ஜி.ஆரின் விசுவாசி என்பதை நிரூபிப்பதற்காக தொடர்ந்து அதிமுகவிலேயே இருந்து வருகிறார். இப்போது அவர் பெருத்த நிம்மதியில் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



முத்துச்சாமி கட்சியிலிருந்து விலகியபோது ஜெயலலிதாவைச் சுற்றியுள்ளவர்கள் தவறான ஆலோசனைகளைச் சொல்கிறார்கள். கட்சித்தலைவரான ஜெயலலிதாவை சந்திக்கவே முடிவதில்லை இப்படிப்பட்ட கட்சியில் இருப்பதை விட வெளியேறுவதே கெளரவம் என்று கூறிச் சென்றார் என்பது நினைவிருக்கலாம். அந்த அளவுக்கு சசிகலாவின் ஆதிக்கம் கட்சிக்குள் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது.



இப்படி ஜெயலலிதாவை திசை திருப்பி அவருக்கு சாதகமாக இருந்த, அவருக்குப் பக்க பலமாக இருந்து வந்த முக்கியத் தலைவர்களை, குறிப்பாக களத்தில் கலக்கக் கூடிய பல தளபதிகளை அவரிடமிருந்து வெட்டி விட்டு படு சாதுரியமாக ஜெயலலிதாவை பலமிழக்க வைத்துள்ளனர் சசிகலா- நடராஜன் கூட்டத்தினர் என்கிறார்கள்.



அதிலும் பி.கே.சேகர் பாபு வட சென்னையின் அதிமுக தளபதியாக திகழ்ந்தவர். அவரைத் தாண்டி ஒரு அதிமுக தொண்டர் கூட செயல்பட மாட்டார் என்றஅளவுக்கு கட்சியை கட்டுக்குள் வைத்திருந்தவர். வட சென்னையில் திமுகவினரின் மிரட்டலுக்குப் பயப்படாமல் படு தைரியமாக அரசியல் செய்து வந்தவர் சேகர்பாபு. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்தவர். ஆனால் அவரையே ஜெயலலிதாவுக்கு எதிராக திசை திருப்பி விட்டு வெளியேற வைத்தது சசிகலா கூட்டம் என்கிறார்கள்.



இப்போது சசிகலா வெளியேற்றப்பட்டு விட்டதால் முத்துச்சாமி, சேகர்பாபு போன்ற பழையவர்கள் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்புவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக முத்துச்சாமி, பொன்னையன் போன்றவர்கள் சரியான ஆலோசனைகளை மட்டுமே வழங்கக் கூடியவர்கள் என்பதாலும், எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதிகள் என்பதாலும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்றவர்கள் என்பதாலும் அவர்களை ஜெயலலிதா நிச்சயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும், மீண்டும் கட்சிக்குள் முத்துச்சசாமியை அழைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிமுக தொண்டர்களிடையே நிலவுகிறது.

No comments:

Post a Comment