Friday, December 23, 2011

கார்டனில் சசிப்பெயர்ச்சி!

ழுகார் உள்ளே நுழையும்போது அவர் கேட்பார் என்று, கடந்த மூன்று ஜூ.வி. இதழ்களை எடுத்து தயாராகவே வைத்திருந்தோம்! ''போயஸ் கார்டனுக்குள் நடந்து வந்த பொருமல் யுத்தத்தை நீர்தான் தொடர்ச் சியாகப் புட்டுப்புட்டு வைத்து வந்தீரே! இரண்டு வாரங்களாக நீர் கொடுத்த லைவ் காட்சிகளுக்கு இப்படி உடனடி க்ளைமாக்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை!'' என்றோம்.

'... நடுவில் சுதாகரன்!’ என்று ஓர் இதழில் தலைப்பு. 'மீண்டும் மன்னார்குடி அசெம்பிளி’ என்று இன்னோர் இதழில் அட்டை. 'யார் இங்கே சி.எம்? நானா? சசியா?’ என்று அடுத்த இதழில் அட்டை என்று வெளிவந்த மூன்று இதழ்களையும் பொறுமையாக திருப்பிப் பார்த்து பெருமிதத்தை வெளியில் காட்டாமல் நிமிர்ந்தார் கழுகார்.

அண்ணா ஹஜாரேவில் இருந்து ஆரம்பித்தார்...
''சென்னைக்கு அண்ணா ஹஜாரே டிசம்பர் 18-ம் தேதி வருவதாக முடிவான நாளில் இருந்து அவருக்குப் பலவித பிரஷர்கள். இ-மெயில், ஃபேக்ஸ், நேரில் என்று தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள், அவர் இங்கே பேசவேண்டிய விஷயத்தை வலியுறுத்தினார்கள். 'முதல்வர் ஜெயலலிதா நல்ல நிர்வாகி. ஆனால், அவரைச் சுற்றிலும் இருக்கும் சசிகலா கோஷ்டியினர் ஆதிக்கம் செய்கிறார்கள். கடந்த ஆறு மாத காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இதைப்பற்றி எச்சரிக்கை விடும் வகையில் நீங்கள் பச்சையப்பன் கல்லூரிக் கூட்டத்தில் பேசவேண்டும்' என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு தகுந்தாற்போல, பாயின்ட் களைக் கேட்டு குறிப்பு எடுத்துக் கொண்டாராம். இந்த விஷயம் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் போனதாம். உடனே, அவரது டெல்லி லாபியை அழைத்து இந்தத் தகவலை கிராஸ்செக் செய்தாராம். அவரது சில நடவடிக்கைகளுக்கு இதுவும் காரணம் என்கிறார்கள்!''
''நடவடிக்கைகள் யாரால் நடந்தால் என்ன?''
''போயஸ் கார்டனில் குஜராத் நர்ஸ் என்கிற தகவலைச் சொல்லி இருந்தேன். அந்த நர்ஸ் இப்போது முதல்வருக்கு இதுவரை தரப்பட்டு வந்த மருந்துகள், டயட் இரண்டையும் தன் கன்ட்ரோலில் எடுத்துக் கொண்டாராம். இந்த நிலையில், குஜராத் மோடி கடந்த வாரத்தில் ஒரு நாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு போன் செய்து, 'நான் அனுப்பிவைத்த நர்ஸை யாரோ மிரட்டுவதாகக் கேள்விப்பட்டேன்' என்று சொன்னாராம். அதைஅடுத்து, போயஸ் கார்டனில் பிரளயமே வெடித் தது. 'நர்ஸை மிரட்டியது யார்?' என்று முதல்வர் விசாரித்தாராம். சசிகலா, இளவரசி, இன்னொரு பெண் ஆகிய மூவரும்தான் அந்த நர்ஸை அழைத்து, 'உன் வேலை மருந்து கொடுப்பதுதான். டயட் பற்றி நீ ஏன் பேசுகிறாய்? அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். அவருக்கு வாய்க்கு ருசியாக டயட் கொடுக்கிறோம். அதில் நீ தலையிடக் கூடாது. இனி, அக்காவின் அறைக்குப் போகக் கூடாது' என்று கண்டிஷன் போட்டார்களாம். அந்த நர்ஸ் ஜெயலலிதாவிடம், 'இதுவரை எதற்காக நீங்கள் மருந்து சாப்பிடுகிறீர்களோ... அதற்கு எதிர்மறையாக உங்கள் டயட் இருக்கிறது.’ என்று எச்சரிக்கை செய்தாராம். நர்ஸ் மிரட்டப்பட்ட தகவலை ஏன் தன்னிடம் சொல்லவில்லை என்று தனக்கு வேண்டப் பட்ட போலீஸ் அதிகாரியிடம் முதல்வர் ஜெயலலிதா விசாரிக்க... 'எப்படிச் சொல்வது? இதுமாதிரி பல விஷயங்கள் நடக்கின்றன' என்று, அவர்தான் பிள்ளையார் சுழி போட்டாராம். பெங்களூரு கோர்ட்டில் நடந்த தகவல்களை உமக்கு முன்பே சொல்லி இருக்கிறேன்!''
''ம்!''
''பணப் பரிமாற்றங்கள்தான் ஜெயல லிதாவை அதிகமாகக் கொந்தளிக்க வைத்தனவாம். இந்தியாவில் பெரிய வங்கிகளில் பணம் கட்ட முடியாமல், அசையா, அசையும் சொத்துக்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். அந்த மாதிரியான சொத்துக்களின் மதிப்பு அதிகமாக இருக்கும்போது, யாரும் வாங்குவது இல்லை. ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் குறிப்பிட்ட நாலு பேர் அனைத்துச் சொத்துகளையும் வாங்கியிருக்கிறார்கள். அந்த நாலு பேர் மன்னார்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இது, முதல்வரை அதிர்ச்சி அடைய வைத்ததாம். இதில் அதிகப்படியான புகார்கள் ராவணன் என்பவர் மீதுதான் விழுந்தன!''
''சொல்லும்!''
''ராவணன், கட்சியில் மேற்கு மண்டலப் பொறுப்பாளர். சசிகலாவின் நெருங்கிய உறவுப் பெண்ணைத் திருமணம் செய்தவர். அந்தப் பெண் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். ஒரே மகன். மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். மேற்கு மண்டலத்தில் வரும் ஏழு மாவட்டங்கள் மற்றும் மதுரை ஏரியாவிலும் இவர் சொன்னவர்களுக்கே எம்.எல்.ஏ. ஸீட்கள் கிடைத்தன. தற்போது உள்ள மந்திரிகளில் ராவணன் கைகாட்டிய வேலுமணிக்கு தொழில்துறை, ஈரோடு ராமலிங்கத்துக்கு பொதுப்பணித் துறை, செந்தில் பாலாஜிக்கு போக்குவரத்துத் துறை என்று, முக்கியத் துறைகள் கிடைத் தன. மேற்கு மண்டலத்தில் உள்ள எட்டு மந்திரிகளில் செங்கோட்டையன் தவிர மற்ற அனைவரும் இவரின் சிஷ்யர் கள். கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தும் மூவர் கமிட்டியில் ஒருவராய் இருந்த பொள்ளாச்சி ஜெயராமனை, ராவணனுக்குப் பிடிக்காது. தேர்தல் முடிந்ததும், ஜெயராமனைப்பற்றி ஜெயலலிதாவிடம் வத்திவைக்க.. அமைச்சர் லிஸ்ட்டில் இருந்த அவர் பெயர் விடுபட்டது.
'முக்கியத் துறைகளில் தனது விசுவாசிகளுக்கே அமைச்சர் பதவி வாங்கித் தந்தார் ராவணன். அதிலும், எட்டு அமைச்சர்கள் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேற்கு மண்டலத்தில் மற்ற சமூகத்தைப் சேர்ந்த பலரும் எம்.எல்.ஏ-க்களாக இருந்தும், அவர்களைப் புறக்கணிக்க முக்கியக் காரணமே ராவணன்தான்.’ என்று சொல்லும் கட்சிக்காரர்கள் இவர் குறித்து வாசித்த பட்டியல் மலை அளவு முதல்வரை மலைக்க வைத்துள்ளது!''
''க்ளைமாக்ஸ் நெருக்கடிகளை விவரியும்!''
''தனக்கு எதிராக சசிகலாவின் உறவினர்கள் சதி வலை பின்னுகிறார்கள் என்ற சந்தேகம் சில நாட்களாக ஜெயலலிதாவுக்கு வந்தாலும், கோபத்தை சசிகலாவிடம் நேருக்கு நேராக கடந்த வெள்ளிக்கிழமைதான் காட்டினார் என்கிறார்கள். அப்போது வார்த்தைகள் தடித்து இரண்டு தரப்பிலும் கோபமான சொற்கள் உதிர்ந்தன. இறுதியாக 'கெட் அவுட்’ சொல்லிவிட்டு ரூமுக்குள் போய் கதவை மூடிக்கொண்டாராம் ஜெயலலிதா. அதன்பிறகு, சசிகலாவை அவர் தேடவில்லை. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சசிகலா கொட்டிவாக்கத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு இரவு நேரத்தில் சென்றுவிட்டார். அன்று இரவு முழுக்க ஜெயலலிதா அவரைத் தேடவில்லை. மறுநாள் காலையிலும் இதே நிலைதான். ஜெயலலிதா போன் செய்து கூப்பிடுவார் என்று சசிகலா எதிர்பார்த்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால், போன் வரவில்லை.
ஞாயிற்றுக்கிழமை சசிகலாவிடம் இருந்து ஜெயலலிதா வுக்கு போன் வந்துள்ளது. அப்போதும் கோபம் குறையாமல் தான் பேசி உள்ளார். அவரை வரச்சொல்லி ஜெ. அழைக்க வில்லையாம். திங்கள்கிழமை காலையில், ஜெயலலிதாவே சசிகலாவுக்கு போன் செய்ததாகச் சொல்கிறார்கள்!''
''எதற்காம்?''
''சமாதானம் செய்யும் குரல் அதில் தொனித்ததாகச் சிலர் சொல்கிறார்கள். கார்டனுக்கு காலை 9.30 மணிக்கு ஒருவிதமான நம்பிக்கையுடன்தான் வந்துள்ளார் சசிகலா. ஆனால், வரவேற்பு வேறு மாதிரியாக இருந்துள்ளது. அதைவிட நிலைமை மோசமாக இருக்கிறது என்று அடுத்த சில நொடிகளிலேயே தெரிந்து விட்டதாம் சசிகலாவுக்கு. வாக்குவாதங்கள்... தடித்த வார்த்தைகள் எல்லாம் அதிகமாகவே இருந்துள்ளன. 'உங்க யாருடைய தயவும் எனக்குத் தேவை இல்லை’ என்று ஜெயலலிதா கர்ஜித்ததுதான் நெட் ரிசல்ட். அடுத்த சில நிமிடங்களில் கார்டனைவிட்டு சசிகலா வெளியேறி விட்டார். அடுத்தடுத்த நிமிடங்கள்... ஜெயலலிதா பரபரப்பாக இருந்தார். தனக்குத் தெரிந்த மன்னார்குடி பெயர்களை எல்லாம் எழுதி மொத்தப் பேரையும் கட்சியை விட்டு நீக்குங்கள்... என்று எழுதி தாளைத் தூக்கிப் போட்டார்!''
''அதிரடியா இருக்கே?''
''தினகரனின் மனைவி அனுராதாதான் ஜெயா டி.வி.யின் எம்.டி. சசிகலாவையும் சேர்த்துக் கட்டம் கட்டி அறிவிப்பு வெளியான திங்கள்கிழமை காலை ஜெயா டி.வி.யின் முக்கிய அதிகாரி ஒருவரை அவசரமாக கார்டனுக்கு அழைத்திருந்தார் ஜெயலலிதா. 'இனிமேல் நிர்வாகப் பொறுப்பு எதுவும் சசிகலா குடும்பத்தினரிடம் இருக்கக் கூடாது’ என்று சொல்லிவிட்டார். அதன்பிறகுதான் சசிகலா உட்பட 12 பேர் நீக்கம் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ஜெயா டி.வி-யில்தான் முதன்முதலில் வெளியானது. இப்படி ஓர் அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாகவும் அந்த அதிகாரி யிடம் பேசி இருக்கிறார் ஜெயலலிதா. 'இந்த அறிவிப்பு அனுராதாவுக்குக்கூடத் தெரியக் கூடாது’ என்று உறுதியாகச் சொல்லி அனுப்பினாராம் ஜெயலலிதா.
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் நீக்கப்பட்டு இருந்தாலும் தினகரனின் மனைவி அனுராதா, சசிகலாவின் அண்ணி இளவரசி போன்றவர்கள் மீது எந்த அதிரடியும் பாயவில்லையே ஏன் என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இந்த அதிரடி அறிவிப்பு வந்த கொஞ்ச நேரத்திலேயே சசிகலா குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர்கள் வீடுகளில் அதிகாரபூர்வமற்ற ரெய்டு நடத்தப்பட்டதாம். அரசு தொடர்பான ஆவணங்கள் எதுவும் அங்கு இருக்கின்றனவா என்பதை அறியத்தான் இந்த சோதனையாம். சசிகலா குடும்பத் தினர் மூலம் செய்யப்பட்ட பரிந்துரைகள், முடிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் சேகரிக்க ஆரம்பித்திருக்கிறது அரசுத் தரப்பு.''
''பெங்களூருதான் இத்தனை சிக்கல்களுக்கும் காரணமா?''


''பெங்களூருவில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்கு இரண்டையும் தனியாகப் பிரித்து நடத்த வேண்டும் என்று, அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞராக இருந்த ஜோதி ஆலோசனை சொன்னார். சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் சொன்ன ஆலோசனை, இங்குள்ள சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. காரணம் அப்படி வழக்கைப் பிரித்து நடத்த மனு போட்டால், மன்னார்குடித் தரப்பினர் வழக்கில் பாதிக்கப் படலாம் என்பதால் சிலர் இதனைக் கடுமை யாக எதிர்த்துள்ளனர். ஜோதியிடம் நடந்த டெலிபோன் உரையாடலில் 'பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு நீ. உன்னை கார்டனில் இருந்து விரட்டி அடிக்காமல் விட மாட்டேன்’ என்று மன்னார்குடியைச் சேர்ந்தவர் ஏகத்துக்கு சண்டை போட்டதாகச் சொல்வார்கள்.

இந்தப் பெங்களூரு வழக்கில் சசிகலாவும், அவருக்கு வேண்டப்பட்டவர்களையும் மட்டுமே எப்படியாவது வெளியில் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற சட்ட முயற்சிகள் ஜெயலலிதாவுக்குத் தெரியா மலேயே மன்னார்குடி தரப்பு செய்து வந்ததாம். இதுதெரிந்துதான் ஜெயலலிதா முன்னதாகவே உஷாரானார் என்கிறார்கள். இதைச் சொல்பவர்கள் இன்னொன்றையும் சொல்கிறார்கள்!''
''அது என்னவாம்?''
''மொத்தப் பழியையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் எங்களோடு சண்டை போட்டுப் பிரிந்த மாதிரி காட்டிக் கொள் ளுங்கள் என்று சசிகலாவே சொல்லி இத்தனையையும் செய்யச் சொன்னதாகச் சொல்கிறார்கள்.' என்ற கழுகாரிடம்,
''கழுகாரே, 'கண்கள் பனித்தன... இதயம் இனித்தது’ என்று கலைஞர் சொன்னதைப் போல ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைய மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்'' என்று கேட்டோம்.
''ஆண்டாண்டு காலமாக நான் சொல்லும் அதே பதில்தான்... அரசியலில் எதுவும் நடக்க லாம்'' என்ற கழுகார்...
''ஒரு மணி நேர அவகாசத்தில் மீண்டும் வருகிறேன். பக்கங்களை காலியாக வையும்!'' என்ற வாக்குறுதி கொடுத்துக் கிளம்பினார்!

No comments:

Post a Comment