Friday, December 23, 2011

''பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போடுங்கள்''

துரை கலெக்டர் சகாயத்தை வைத்து ஒரு சர்ச்சை உருவாகி இருக்கிறது. கடந்த ஆட்சியில் துணை சபாநாயக​ராகவும், இப்போது தி.மு.க. துணை பொதுச்செயலாளராகவும் இருக்கும் வி.பி.துரைசாமிக்​கும் சகாயத்துக்குமான மோதல்தான் இதற்குக் காரணம்!


நாமக்கல் கலெக்டராக சகாயம் இருந்த நேரத்தில், அதே மாவட்டத்தைச் சேர்ந்தவரும் துணை சபாநாய கராக இருந்தவருமான வி.பி.துரைசாமிக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது வி.பி.துரைசாமி அளித்த பேட்டி ஒன்றில், 'பவர் புரோக்கர்களையும் கிரிமினல் களையும் வைத்துக்கொண்டு மாவட்ட நிர்வாகத்தை சீர்குலைத்தார். கிராமம் செல்வோம் நிகழ்ச்சிக்காக இரவில் கிராமங்களில் தங்கியபோது ஏ.ஸி. ஏற்பாடு செய்யச் சொன்னார், பாதிரியார்களுக்கு உதவச் சொன்னார்’ என்று சில அதிரடிக் குற்றச்சாட்டு​களை சகாயம் மீது அடுக்கினார். அதற்குத்தான் இப்போது மானநஷ்ட வழக்கு போட்டுள்ளார் சகாயம்.

சகாயத்துக்காகப் பேசியவர்கள், ''துரைசாமி எப்படி எல்லாம் சகாயத்தின் நேர்மைக்கு சவால் விட்டார் என்பதற்கான ஆதாரங்கள் அவரிடம் இருக்கிறது. இதுகுறித்து, 28.01.11-ல் அப்போதைய முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் உருக்கமான கடிதம் எழுதினார் சகாயம். 26 பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில், வி.பி.துரைசாமியின் குறுக்கீடுகள் அனைத்தையும் சொல்லி விட்டு, 'எனது 20 ஆண்டு கால அரசுப் பணியில் எங்காவது ஓர் இடத்தில் ஒரு சிறு ஊழல் செய்து இருந்தாலோ, ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கி இருந்தாலோ, என்னை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போடலாம்.’ என்று எழுதினார். இதைத் தொடர்ந்தே துரைசாமி மீது 25 லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார் சகாயம்.'' என்கிறார்கள்.

இந்த வழக்கு குறித்து சகாயத்திடம் கேட்டதற்கு, ''துரைசாமியின் குற்றச்சாட்டுகள் எனது நேர்மைக்கும் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியதால் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன். நீதிமன்றத்தின் மீது எனக்கு முழுநம்பிக்கை இருப்பதால், நிச்சயம் என் மீது சுமத்தப்பட்ட களங்கம் கழுவப்படும்'' என்றார்.
வி.பி.துரைசாமியை நாம் தொடர்பு கொண்டபோது, ''சகாயத்தை எதிர்த்து வி.ஏ.ஓ-க்கள் ஒரு மாதம் வேலை செய்யவில்லை. அரசுப் பணிகள் தடைப்படக் கூடாது என்பதற்காக நான் சில முயற்சிகளை எடுத்தேன். மக்கள் பிரதிநிதிகளிடம் மனுக்களைக் கொடுத்தால், அதை கலெக்டரிடம்தானே அனுப்ப வேண்டும். இதைக் குறுக்கீடு என்று சொல்வதா? சகாயம் நீதிமன்றத்துக்குப் போயிருப்பதால், இந்த விஷயத்தில் இதற்கு மேல் நான் எதுவும் பேசக் கூடாது'' என்றார்.
ஒரு கலெக்டருக்கும் ஒரு கட்சியின் முக்கியப் பிரமுகருக்கும் நடக்கும் மோதல் சட்டப் போராட்டத்​தையும் மீறி அரசியல் அதிர்வுகளையும் ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment