Wednesday, December 28, 2011

பாம்பன் பாலத்தை முடக்குவோம். சீறும் மீனவர்கள்.

லங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதலால் கொதித்துப் போயிருக்கிறார்கள் ராமேஸ்வரம் மீனவர்கள். மத்திய அரசும் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அடுத்த கட்டமாக மீனவர்கள் பாம்பன் பாலத்தில் போக்குவரத்தை முடக்கத் திட்டமிட்டுள்ளனர்.


தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த பலவிதமான டெக்னிக்குகளைப் பயன்படுத்துகிறது இலங்கைக் கடற்படை. இதில் லேட்டஸ்ட்... அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்குப் போடுவது. இலங்கைக் கடற்படையின் இந்தப் புதிய வகைத் தாக்குதலால் கடந்த இருபது நாட்களாக தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்.

இங்குள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அகஸ்டின், வில்சன், எமர்ஸன், பிரசாத், லேங்க்லேட் ஆகிய ஐந்து மீனவர்கள் கடந்த 28-ம் தேதி காலையில் கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்... அப்போது அங்கு வந்த சிங்களக் கடற்படை அவர்களைப் பிடித்து ஹெராயின் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து இலங்கை மெல்காம் சிறையில் அடைத்துவிட்டது.

அடுத்த நாள் அவர்கள் கரைக்குத் திரும்பாததால் மீனவர் அமைப்புகள் விசாரித்தன. அப்போதுதான் போதைக் கடத்தல் வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்ட விஷயம் தெரிந்தது. மீன்பிடி வரலாற்றிலேயே முதல்முறையாக பாய்ந்திருக்கும் இந்த வழக்கால் அதிர்ந்துபோன மீனவர் அமைப்புகள் அந்த ஐந்து பேரை மீட்பதற்காக தொடர்ந்து போராடுகின்றன.

பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்துக்கு வழக்குச் செலவுக்காக அரசு நிதியில் இருந்து இரண்டு லட்ச ரூபாயை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். இந் நிலையில், மீனவர்களை மீட்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை ராமேஸ்வரத்தில் நடந்தது. பல்வேறு கட்சிகளின் நகரப் பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

காங்கிரஸின் நகரத் தலைவர் பாரிராஜன், “மீனவர்களிடம் ஒற்றுமை இல்லாததால்தான் இவ்வளவு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இங்கிருக்கும் உளவு அமைப்புகள் நமது பிரச்னைகளை பிரதமரிடம் கொண்டு செல்வதில்லை. நமது மீனவர்கள் பாகிஸ்தான் சென்று மீன் பிடித்தால்கூட பிரச்னை ஏற்படாத அளவுக்கு சில ஒப்பந்தங்கள் உள்ளன. இலங்கை அரசுடனும் அதுபோல ஒப்பந்தம் கையெழுத்திட மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்’’ என்றார்.

அடுத்து பேசிய பா.ஜ.க. பிரமுகர் முரளிதரன், “ஐந்து மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் மாநில செயற்குழுவிலேயே தீர்மானம் போட்டிருக்கிறோம். இது சாதாரணமான விஷயமல்ல. முல்லைப் பெரியாறு, கூடங்குளம் விவகாரத்தால் நமது மீனவர்கள் மீது பாய்ந்திருக்கும் கடத்தல் வழக்கு அமுங்கிவிட்டது. இந்தப் பிரச்னையை பெரிய அளவில் எடுத்துச் செல்ல சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசலாம் என்றிருக்கிறோம்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து தி.மு.க., ம.தி.மு.க. பிரமுகர்களும் தங்கள் கட்சித் தலைவர்கள் உதவியுடன் போராட்டத்தை தீவிரப்படுத்தலாம் என்றனர். கூட்டத்தில் பேசிய பலரும் மீனவர்கள் விஷயத்தில் மத்திய அரசின் கவனத்தைத் திருப்ப, பாம்பன் பாலத்தில் போக்குவரத்தை முடக்கலாம் என்றும் வலியுறுத்தினர்.

அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு கடத்தப்பட்ட மீனவர்களின் நிலையறிய தங்கச்சிமடம் விரைந்தோம்.

“சிறைப்பட்டிருக்கும் மீனவர்களின் குடும்பங்கள் மிகுந்த வறுமையில் வாழ்கின்றனர். மன உளைச்சலால் அவர்களால் பேசக்கூட முடியவில்லை. எமர்சன் குடும்பத்தில் உள்ள ஒன்பது பேரும் அவரது வருமானத்தை மட்டும் நம்பியிருப்பவர்கள். திருமண வயதில் அவருக்கு இரண்டு தங்கைகள்... பிரசாத்துக்கு இப்போதுதான் திருமணம் நடந்தது. பாரம்பரிய மீனவர்கள் கடத்தல் தொழில் செய்ய மாட்டார்கள் என மாநில அரசு நம்புவதால்தான் வழக்குச் செலவாக இரண்டு லட்ச ரூபாய் அளித்திருக்கிறது. மத்திய அரசும் இதை உணர வேண்டும். அதுவரை சிறைப்பட்டிருக்கும் மீனவர் குடும்பங்களின் வறுமைக்கு அரசு போதிய நிவாரணம் அளிக்க வேண்டும்’’ என்கிறார் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர் லேவுத்தல்லஸ்.

இதே பகுதியைச் சேர்ந்த மீனவர் சின்னத்தம்பி, “இந்திய எல்லையில் நாங்கள் மீன் பிடிக்கச் செல்வதற்கு முன்பு மீன்வளத் துறை உதவி இயக்குனர் ஒரு டோக்கன் தரு வார். அதேபோல், இந்திய கடற்படை அதிகாரிகள் படகில் முழுமையாக சோதனை செய்துவிட்டு ஒரு டோக்கன் தருவர். இதைத் தாண்டி எந்தக் கடத்தல் பொருளையும் எடுத்துச் செல்ல முடியாது. அப்படி இருக்கும்போது இலங்கைக் கடற்படை வேண்டுமென்றே பொய் வழக்குப் போட்டுள்ளது. இந்த வழக்கில் 110 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கக் கூட அதில் இடம் உண்டு.

தமிழக மீனவர்களை மிரட்டுவதற்காக முதலில் படகுகளைச் சேதப்படுத்தியது சிங்களக் கடற்படை. அடுத்து எங்களை அடித்து சித்ரவதை செய்தது. மூன்றாவதாக, விடு தலைப்புலிகளுக்கு உதவுவதாகச் சொல்லி வழக்குப் போட்டார்கள். அதையும் மீறி இப்போது ஹெராயின் வழக்கு. எங்களை உச்சகட்டமாக மிரட்ட சிங்களக் கடற்படையின் யுக்தி இது. நாங்கள் யார் என்பதை மத்திய அரசு உணர வேண்டுமென்றால் பாம்பன் பாலத்தை முடக்கினால் மட்டுமே முடியும். வடநாட்டு யாத்ரீகர்கள் பாதிக்கப்ப டும்போதுதான் மன்மோகன் சிங்கின் தூக்கம் கலையும்’’ என்றார் கொந்தளிப்போடு.

பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வழக்கமாக வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு இந்த முறையாவது விரைவில் நடவடிக்கை எடுத்தால் நல்லது!

No comments:

Post a Comment