Friday, December 23, 2011

சென்னையில் பாய்ந்தார்... டெல்லியில் பதுங்கினார்!

அத்தைக்கு மீசை முளைத்தது போனறு ஓர் அபூர்வக்காட்சி அது. தமிழகக் காங்கிரஸ் கட்சியின் அத்தனை கோஷ்டித் தலைவர்​களும், ஒரே மேடையில் கூடினார்கள்.அது​கூட ஆச்சர்யம் இல்லை. அடிதடி, அமளிதுமளி எதுவுமே இல்லாமல் கூட்டம் முடிந்தது என்பதையும் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.


கடந்த 17-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில், சோனியா காந்தி பிறந்தநாள் விழா மற்றும் முல்லைப் பெரியாறு - கூடங்குளம் விளக்கப் பொதுக் கூட்டத்தில்தான் மேற்கண்ட அதிசயம் நிகழ்ந்தது.

மறக்கப்பட்ட மன்மோகன்!

எதிர்க் கட்சியினர்தான் பிரதமர் மன்மோகனைப் பெரிதாக மதிப்பது இல்லை என்றால், காங்கிரஸ் கட்சியும் அப்படித்தான். மேடையின் பின்புறம் வைக்கப்பட்ட பேனரில் சோனியா, ராகுல் படங்களுக்கு மத்தியில் சிறிய அளவில் காமராஜர், இந்திரா, ராஜிவ், மூப்பனார் ஆகியோர் உருவங்கள் மட்டுமே இருந்தன. பிரதமர் மன்மோகன் சிங் என்று ஒருவர் இருப்பதை(?) மறந்தே போனார்கள். விழா தொடங்கும் முன்பு அந்த பேனரில் பிரதமரின் போட்டோ ஒன்றை மாட்டி, அவரது மானத்தைக் காப்பாற்றினார்கள்.

கலகல தேசிகன்!

விழாவுக்கு தலைமை ஏற்றுத் தொகுத்து வழங்கிய ஞானதேசிகன், 'முதலில் சட்ட​மன்ற உறுப்பினர்கள் சார்பாக விஜயதரணி சுருக்கமாகப் பேசுவார்’ என்று அழைத்தார். மைக் பிடித்த விஜயதரணி, 15 நிமிடங்களுக்கும் மேலாக நீட்டி முழங்கினார். ஏகப்பட்ட ஜாடை காட்டி அவரது பேச்சை நிறுத்திய ஞானதேசிகன், 'அடுத்ததாக சேவாதளம் சார்பில் கோவை செல்வராஜ் மூன்று நிமிடங்கள் மட்டுமே பேசுவார்’ என்று அழுத்தம் கொடுக்க, பலத்த சிரிப்பலை.

நேரம் அதிகமாகச் செல்வதை சரிக்கட்டுவதற்காக, 'அடுத்து மகிளா காங்கிரஸ் சார்பில் சாய்லட்சுமி பேச வேண்டும். அவர் இங்கே பேசியதாக நான் பதிவு செய்துகொள்கிறேன்...’ என்று சொல்லிவிட்டு மைக்கை தனுஷ்கோடி ஆதித்தனிடம் ஞானதேசிகன் நீட்ட, மீண்டும் சிரிப்பலை.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி பேசும்போது, 'இடுக்கியை தமிழகத்துடன் சேர்க்க வேண்டும்’ என்று குரல் கொடுத்தார். 'இருக்கிற பிரச்னை போதாதா... இது வேறயா?’ என்று ஜாலியாக அவரைக் கலாய்த்த தேசிகன், 'முல்லைப் பெரியாறு, கூடங்குளம் இருக்கட்டும். எனக்கொரு பிரச்னை இருக்கு... அதாங்க எல்லோரும் சுருக்கமாப் பேசுங்க’ என்று மீண்டும் கலகலப்பு மூட்டினார்.

தத்துவ தங்கபாலு...தடாலடி இளங்கோவன்!

முல்லைப் பெரியாறு, கூடங்குளம் ஆகிய பிரச்னைகளில் தமிழக காங்கிரஸ் நிலை குறித்துப் பேசிய தங்கபாலு, 'காங்கிரஸ் வாழும்போது நாடு வாழ்கிறது. காங்கிரஸ் வீழும்போது நாடு வீழ்கிறது’ என்றொரு தத்துவத்தை உதிர்க்க... 'நீங்க வாழ்ந்தப்ப (தலைவராக) நாங்க வாழலையே...’ என்று கூட்டத்தில் இருந்து டைமிங்காக ஒரு குறும்புக் குரல் வர, மீண்டும் சிரிப்பிலையில் மிதந்தது அரங்கம்.


இளங்கோவன் பேச்சு செம காரம். 'தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு தமிழக மின்தேவை குறித்த அக்கறையே இல்லை. தமிழினத் தலைவர்னு ஒருத்தர் இருப்பார். அவருக்கு இதை எல்லாம் கேட்க நேரமே இருக்காது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் டெல்லி ஜெயில்ல இருந்து விடுதலையாகி வந்தா, அவங்களைப் போய் வரவேற்கிறதோட அவர் வேலை முடிஞ்சது’ என்று கருணாநிதியைக் காய்ச்சினார். அடுத்து டிராக் மாறிய இளங்கோவன், 'கேரள காங்கிரஸை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கத் தொடங்கினார். கேரள அரசு, உச்ச நீதிமன்றம் கூறியதை ஏற்க மறுத்துவிட்டது. மத்திய அரசு சொல்வதையும் கேட்கவில்லை. அதனால், அந்த அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். உம்மன் சாண்டி மத்திய அரசு சொல்வதைக் கேட்காவிட்டால், வீட்டுக்குப் போகலாம்’ என்று தடாலடியாக முழங்கிவிட்டு, 'இது என்னுடைய கருத்து. எனது கருத்து என்பது தொண்டர்கள் கருத்து. இதை காங்கிரஸ் கட்சியின் கருத்து என்று சொல்ல மாட்டேன். சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...’ என்று புன்னகையுடன் நிறுத்த, விசிலில் அதிர்ந்தது அரங்கம்.

சென்னையில் பாய்ந்தார்... டெல்லியில் பதுங்கினார்!

ப.சிதம்பரம் பேசும்போது, 'அணை உடைந்து​​விடும் என்று கேரள அரசியல்வாதிகள் அச்சம் கொள்கிறார்கள். இது தேவை இல்லாத பயம். நிரந்தர அச்சமோ, இடைக்கால அச்சமோ அல்ல. இடைத்தேர்தல் அச்சம். இடைத் தேர்தல் முடிந்தால், அந்த அச்சம் போய்விடும்’ என்று சொல்ல, அன்று மாலையே கேரள காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு எதிராக வரிந்துக் கட்டிக்கொண்டு எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.

இதை சற்றும் எதிர்பாராத சிதம்பரம் மறுநாள் டெல்லி போனதும், 'எனது கருத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்’ என்று ஜகா வாங்கினார். கேரள காங்கிரஸார் அந்த மாநிலத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ப.சிதம்பரம் மட்டும் தமிழகம் பக்கம் உறுதியாக நிற்காமல், ஏன் பின்வாங்க வேண்டும்?

''2ஜி ஆரம்பித்து டெல்லி ஹோட்டல் குப்தா வரைக்கும் அவருக்கு எத்தனையோ தலைவலிகள். இதில் முல்லைப் பெரியாறும் சேர வேண்டுமா என்று ப.சிதம்பரம்யோசித்​ திருக்​கலாம்'' என்கிறார்கள் தமிழக காங்கிரஸ்காரர்கள்.

No comments:

Post a Comment