Saturday, December 17, 2011

அரசுக்கு தெரியாத ரகசியம்!

கொல்கத்தாவில் விஷம் கலந்த சாராயம் குடித்த 140 பேர் குடல் வெந்து மரணம் அடைந்திருக்கிறார்கள். இன்னும் 300 பேர் மருத்துவமனைகளில் உயிருக்கு போராடுகிறார்கள். ஆம்ரி மருத்துவமனையில் தீ பிடித்து 90 நோயாளிகள் மூச்சு திணறி பலியானதை தொடர்ந்து மேற்கு வங்க தலைநகரில் நிகழ்ந்திருக்கும் சோக சம்பவம். பலியானவர்கள் எல்லோருமே ஏழைகள். ரிக்ஷா ஓட்டியும் சுமை தூக்கியும் பிழைப்பு நடத்தி வந்தவர்கள். அதிக விலை கொடுத்து மது வாங்க வசதியின்றி சாராயம் வாங்கி குடித்திருக்கிறார்கள்.

அரை லிட்டர் ரூ.5, ஒரு லிட்டர் ரூ.10. பெரிய நகரங்களில் தண்ணீர், பால் மாதிரி சாராய பாக்கெட்டும் வேன்களில் ஏரியா வாரியாக டெலிவரி செய்வது அரசுக்கு மட்டுமே தெரியாத ரகசியம். தொழிலாளர் பகுதிகளில் நடப்பதால் நடுத்தர வர்க்கம் கண்டுகொள்வதில்லை. கணிசமான மாமூல் வருவதால் காவல், கலால் துறையினரும் மேலிடத்துக்கு தெரியாமல் மறைத்துவிடுகிறார்கள். டயமண்ட் ஹார்பர் பகுதியில் காவல் நிலையத்தை ஒட்டியே பத்து பூத்களில் சாராயம் விற்பனை நடந்து வந்திருக்கிறது.

சாவு எண்ணிக்கை நூறை தாண்டியதும் மக்கள் ஆத்திரத்துடன் அந்த கடைகளை அடித்து நொறுக்கியபோது காவலர்களும் சேர்ந்து கொண்டனர். ‘18 வருடமாக செப்டி (வங்க மொழியில் அதுதான் பெயராம்) குடிக்கிறேன்; இதுவரை வயிற்றுப் போக்குகூட வந்ததில்லையே’ என்று மருத்துவமனையில் ஒரு ரிக்ஷாக்காரர் பேட்டியில் ஆச்சரியப்படுகிறார்.

இனி மதுவிலக்கு வரப் போவதில்லை. அரசாங்கமே மது விற்கிறது.

வசதி படைத்தவர்களுக்காக உயர்தர பார் திறக்கிறது. ஏழைகளுக்கு மட்டும் அந்த உரிமையை மறுப்பது நியாயமில்லை. அவர்களும் வாங்கி குடிக்க வசதியாக மலிவு விலை மது கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது மலிவாக கிடைக்கும் கள், சாராயம் போன்ற உள்ளூர் சரக்குகளை சுகாதாரமாக தயாரித்து விற்க அனுமதிக்க வேண்டும். விஸ்கி, பிராந்தி மட்டும்தான் குடிக்கலாம் என்பது பாரபட்சம் மட்டுமல்ல; இயற்கை நீதி கோட்பாடுக்கும் எதிரானது.

உயிருக்கும் உடலுக்கும் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று சொல்லிக் கொண்டே மது விஷயத்தில் மட்டும் குடிக்காதவர்கள் தடுமாறுவதை பார்த்து குடிப்பவர்கள் சிரிக்கிறார்கள். இந்த போலித்தனம் ஒழிந்தால் விஷ சாராய சாவுகள் நின்றுவிடும்.

No comments:

Post a Comment