Thursday, December 8, 2011

வீரமும்,விவேகமும் இருக்கும் இடத்தில் பரிதி நிச்சயம் இருப்பான்

ரசியல் களத்தில் திடீர் புரட்சிக்காரர்கள் திடீரென ஒரு மேடையில் சங்கமித்தால்.. அதிரடிக்குப் பஞ்சம் இருக்குமா என்ன? நாளந்தா பதிப்பக ஆசிரியர் தங்கப்பாண்டியன் தொகுத்த, 'தந்தையும் தம்பியும்’ என்ற புத்தக வெளியீட்டு விழா கடந்த 2-ம் தேதி சென்னையில் நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். தி.மு.க-வில் உள்கட்சி ஜனநாயகக் கேள்வியைக் கிளப்பி இருக்கும் பரிதி இளம்வழுதி முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இதே போன்ற சர்ச்சையை எழுப்பியதால் பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்டு புதுக் கட்சியை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் வேல்முருகனும் இதில் கலந்து கொண்டார் என்பதுதான் ஹைலைட்.


விழாவுக்குத் தலைமை ஏற்றுப் பேசிய கொளத்தூர் மணி, ''புலிகள் எப்பொழுதும் முக்கியமான ஆட்களை தனித் தனி படகுகளில் அழைத்துச் செல்வதுதான் வழக்கம். ஒருமுறை மதிவதனியையும், குழந்தையையும் ஒரே படகில் அழைத்துச் சென்றனர். மதிவதனிக்கு எதுவும் புரியாமல் பிரபாகரனிடம் விளக்கம் கேட்டார். அதற்கு அவர், 'நீங்கள் இருவரும் உயிரோடு வந்தால் வரட்டும்... இல்லையெனில் இருவரும் ஒன்றாக மறையட்டும் என்ற முடிவோடுதான் ஒரே படகில் அழைத்து வரச் சொன்னேன்’ என்றார். பிரபாகரன் தன் குடும்பத்தைவிட இனப் போராட்டத்தையே அதிகம் நேசித்தார் என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சான்று. இதே போல், தனது மனைவி நாகம்மாள் மறைந்தபோது, 'எனக்கு இதுவரை இருந்த ஒரு தடையும் நீங்கிவிட்டது. எனவே மனைவியின் மரணம் மகிழ்ச்சியைத் தருகிறது’ என்றார் பெரியார். அவர்கள் இருவரையும் ஒப்பிடுவது பொருத்தமானது'' என்று பேசினார்.
அடுத்துப் பேசிய வேல்முருகன், ''பயம் என்பது நம்ம பரம்பரைக்கே கிடையாது. மனம் திறந்து பேசுங்கன்னு டாக்டர் அய்யா சொன்னார். மனதைத் திறந்தேன். வைகோவைப் பாராட்டிப் பேசினேன். இதை ஏற்றுக்கொள்வாரா ராமதாஸ்? வெளியே அனுப்பிட்டாங்க. தமிழினப் போராளி என்று சொல்லிக்கொள்கிறார் மருத்துவர். ஈழத்தில் கொத்துக் கொத்தாக நம் இனம் அழிக்கப்பட்டபோது, 'அய்யா அங்கே பண்டார வன்னியர்கள் அதிகமா இருக்காங்க. நீங்க குரல் கொடுங்க’ என்று நான் சொன்னப்ப, 'எல்லாம் எங்களுக்குத் தெரியும். நீ உன் வேலையை பாரு’ன்னு சொன்னவர்தான் மருத்துவர். இன்னும் எவ்வளவோ இருக்கு. எல்லாத்தையும் சொல்லட்டுமா? நான் சொன்னா நீங்க தாங்குவீங்களா? 21 வருஷம் கட்சிக்காக உழைச்ச என்னைப் பார்த்து டாக்டர் அய்யா சொல்றார், 'அவன் சொல்றதெல்லாம் புளுகு. அவன் வாய்ல இருந்து உண்மையே வராது’னு சொல்றார். இப்ப நான் சொல்றேன்... நீங்க சொல்றதுதான் புளுகு'' என்று சூடாகப் பதிலடி கொடுத்தார்.
பரிதி இளம் வழுதி இந்த மேடைக்கு வந்ததை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். 'தென் பாண்டிச் சிங்கம்’ என்று வைகோவுக்கு அடைமொழி கொடுத்தபோது பலத்த கைதட்டல். ''நான் அந்தக் கட்சியில் இருக்கிறேனா இல்லையா என்று இங்கு பேசியவர்கள் சந்தேகம் கிளப்பினார்கள். அபிமன்யு தன் மரண நேரத்திலும், இருக்கின்ற இடத்துக்குத் துரோகம் செய்யாமல் உறுதியாகவே இருந்தான். அதுபோல நானும் இருப்பேன். எனக்கு பத்மவியூகம் வகுக்கவும் தெரியும், உடைத்துக்கொண்டு வெளியே வரவும் தெரியும். இதை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் தலைவர் கலைஞர்தான். இந்த மேடைக்கு நான் எப்படி வந்தேன் என்று சிலர் கேட்கலாம். எங்கே சுய மரியாதை இருக்கிறதோ... எங்கே தன்மானம் இருக்கிறதோ... எங்கே வீரம் இருக்கிறதோ... எங்கே விவேகம் இருக்கிறதோ... அங்கே பரிதி நிச்சயம் இருப்பான்'' என்று முழங்கினார்.
கூட்டத்தை உற்றுப் பார்த்தபடி மைக் பிடித்த வைகோ, ''ஒரு முறை பிரபாகரன் இருக்கும் இடம் அறிந்து சிங்கள ராணுவம் விமானம் மூலமாகக் குண்டு வீசியது. அந்த நேரத்தில் தலைவர் முதலில் தன் குடும்பத்தைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லவில்லை. இருப்பிடத்தில் இருந்த விமான எதிர்ப்பு ஏவுகணையைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுசேர்த்தபிறகுதான், தன் குடும்பத்தை அழைத்து சென்றார். அந்த அளவுக்கு, தன் குடும்பத்தின் உயிருக்கும் மேலாக இந்த இனத்தின் விடுதலையை நேசித்தவர் மேதகு பிரபாகரன். 'நிறைவாகும் வரை மறைவாக இரு...’ என்று காசிஆனந்தன் கூறியபடி அவர் மறைவாக இருக்கி றார். நம்மை இயக்குகிறார்'' என்று நெகிழ்ந்த வைகோ, அதன் பிறகு முகம் சிவந்தவராக மத்திய அரசை காய்ச்சத் தொடங்கினார்... ''முல்லை பெரியாறு அணைப் பிரச்னையில் மத்திய அரசு நடந்துகொள்ளும் விதம் சரி இல்லை. உறுதியாக உள்ள முல்லை பெரியாறு அணையை உடைக்க மாபெரும் சதி நடக்கிறது. ஆனால், மத்திய சர்க்கார் கேரளாவுக்கு சாதகமாக மெத்தனமாக நடக்கிறது. முல்லை பெரியாறு அணை உடைந்தால், இந்தியா துண்டு துண்டாக உடையும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன்'' என்றதும் எழுந்த கைதட்டல் அடங்க வெகு நேரம் பிடித்தது.
''பரிதியைப் பற்றிப் பேசி அவருக்கு நான் சிக்கல் ஆக்க விரும்பவில்லை. ஆனால் நீ வீரன்!'' என்று வைகோ வைத்தார் ஒரு பஞ்ச்!

No comments:

Post a Comment