“தி.மு.க.வில் பேராசிரியர் க.அன்பழகனுக்கும் வாரிசு அரசியலுக்கும் காத தூரம். ஆனால், அது இல்லாமலே ஒரு சுனாமியையே உருவாக்கியிருக்கிறார் அவர்” என்கிறார்கள் உடன்பிறப்புகள். கட்சியில் தலைவர் கருணாதியும், தானும் பதவி விலகி அடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்பதுதான் அன்பழகன் முன்வைத்திருக்கும் அதிரடி கருத்து! உடன்பிறப்புகளிடையே றெக்கை கட்டிப் பறக்கும் இந்தச் செய்தி கருணாநிதியை ரொம்பவும் அப்செட் ஆக்கிவிட்டதாம்!
“அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை சமயோசிதமாக பிடித்த கருணாநிதி, கடந்த 43 ஆண்டுகளாக நிரந்தரத் தலைவராக இருக்கிறார். 1972-ல் எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது அவர் வகித்து வந்து பொருளாளர் பொறுப்பைப் பெற்றவர் அன்பழகன். அதேபோல 1976-ல் நாவலர் நெடுஞ்செழியன் தி.மு.க.வில் இருந்து விலக, அவர் வகித்து வந்த பொதுச்செயலாளர் பொறுப்பில் அன்பழகன் வந்து உட்கார்ந்தார். அது முதல் கடந்த 36 ஆண்டுகளாக அவர்தான் பொ.செ. இவர்கள் இருவரும் எப்போதோ அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்கியிருக்க வேண்டும். ஆனால், அதை வெளிப்படுத்தும் துணிவு யாருக்கும் இல்லை.
இந்தச் சூழலில்தான் தழிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒட்டி கடந்த மார்ச் 26-ம் தேதி அறிவாலயத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில், சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் எப்படிச் செயல்படவேண்டும் என்பதுதான் விவாதப் பொருள். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அது சம்பந்தமாகவே பேசிவிட்டு உட்கார்ந்துவிட, கருணாநிதிக்கு முன்பாக பேச எழுந்தார் அன்பழகன். அப்போது, ‘சட்டசபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைவிட, தி.மு.க.வினரும், தி.மு.க.வும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் இப்போது ஆரம்பித்த அன்பழகனை, புரியாமல் பார்த்திருக்கிறார் கருணாநிதி.
‘தி.மு.க. மீது மட்டும் மக்களுக்கு அதிருப்தி இல்லை. அ.தி.மு.க. மீதும் அதிப்ரு இருக்கிறது. ஆனால், அந்த அதிருப்தியை நம் பக்கம் கொண்டுவர நம்மால் முடியவில்லை. காரணம், அ.தி.மு.க. மீது இருக்கும் அதிருப்தி தொடர்ந்து நீடிப்பதில்லை. தோன்றிய நிலையிலேயே மறைந்துவிடுகிறது. ஏனென்றால், யார் தப்புச் செய்தாலும், அவர்களைத் தள்ளி வைக்கிறார் ஜெயலலிதா. அதனால், அந்த மாவட்டச் செயலாளர் மீதோ அமைச்சர் மீதோ ஏற்பட்ட அதிருப்தி சில நாட்களில் மறைந்துவிடுகிறது. நம் கட்சியில் 20 வருடம், 30 வருடம் என்று ஒரே மாவட்டச் செயலாளர் இருந்தால், அவர் தவறு செய்திருந்தாலும் அவர் மீது நடவடிக்கை...’ என்று அன்பழகன் பேசிக்கொண்டிருந்தபோதே கருணாநிதி குறுக்கிட்டு, ‘இங்கே அதைப் பேச வேண்டாம். நாம் தனியாகப் பேசலாம். எனவே, அந்த சப்ஜெக்ட்டை விட்டுவிடுங்கள்’ என முட்டுக்கட்டை போட்டுவிட்டாராம். அத்துடன் அன்பழகன் அமர்ந்துவிட்டார். எப்போதுமே கருணாநிதி மனதில் நினைப்பதை மட்டுமே வார்த்தைகளாகக் கொட்டும் அன்பழகன், இப்படி முரண்பட்டுப் பேசியதில் எம்.எல்.ஏ.க்களுக்கு ஏக அதிர்ச்சியாம்.
கூட்டம் முடிந்த பிறகு கட்சித் தலைவரின் அறைக்கு அன்பழகன் சென்றிருக்கிறார். அங்கு கருணாநிதி, ஆற்காட்டார், துரைமுருகன் என சிலர் மட்டுமே இருந்த நிலையில் மீண்டும் பொங்கிவிட்டாராம். ‘நம் கட்சியின் எதிர்காலத்தை நினைத்து இதை அங்கே சொல்ல வந்தேன். நீங்கள் தடுத்துவிட்டீர்கள். நீங்களும், நானும் இங்கு நிரந்தரத் தலைவர்... பொதுச்செயலாளர்... இப்படி இருந்தால், கட்சி எப்படி வளரும்? மக்களுக்கும் நம் மீது அலுப்பு வந்துவிட்டதே? நமக்கு ஓய்வேயில்லையா? நல்ல முடிவை சீக்கிரம் எடுங்கள். அல்லது என்னையாவது முடிவெடுக்க விடுங்கள்’ என்று தனது கருத்துக்களை கொட்டிவிட்டாராம் அன்பழகன். இதைக் கேட்டதும் ‘இவரா இப்படிப் பேசினார்?’ என கருணாநிதியின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள் ஓடியதாம்! பின்னர் அவர் எதுவுமே பேசாமல், சைகை மூலம் வீட்டுக்குப் போகலாம் என்று சிக்னல் கொடுக்க, பாதுகாவலர்கள் அவரை வீல் சேரில் தள்ளிச் சென்றிருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் பத்திரிகையாளர்கள் பட்ஜெட் பற்றி அவரிடம் கருத்துக் கேட்க, ‘இன்னமும் கூடுதலாக் வரி போட்டிருக்கலாம்!’ என்கிற ரீதியில் வார்த்தைகளை உதிர்த்துவிட்டுப் போயிருக்கிறார்.
காரசாரமான இந்த விவகாரம் கிளம்பி நாட்கள் சில கடந்துவிட்டாலும், இது உருவாக்கிய அதிர்வு அவ்வளவு சுலபத்தில் ஓய்வதாகத் தெரியவில்லை. இதுபற்றி விவரமறிந்த வட்டாரங்களில் நாம் பேசியபோது, “தி.மு.க.வைவிட்டு எம்.ஜி.ஆர். பிரிவதற்கு முன்பு கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் அலைவரிசை அதிகம் ஒத்துப்போனதாகச் சொல்ல முடியாது. ஆனால் எம்.ஜி.ஆர். பிரிந்த சமயத்தில் தன்னைவிட்டுப் போய்விடக் கூடாது என்கிற அக்கறையில் மூத்த தலைவரான அன்பழகனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் கருணாநிதி. அதிலிருந்து ஏற்பட்ட நட்பில் ‘பேராசிரியரின் உருவத்தில் என் தாயைக் காண்கிறேன்’ என பல்வேறு கட்டங்களில் உருகியிருக்கிறார் கருணாநிதி. அப்படிப்பட்ட அவர்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார்.
இந்த முடிவை ஏதோ ஒரு வேகத்தில் திடுதிப்பென பேசவிட்டதாகச் சொல்ல முடியாது. நன்றாக யோசித்து, கட்சியின் இதர முன்னணியினர் சிலரிடம் கலந்து பேசிய பிறகே இப்படிப் பொங்கியிருக்கிறார்” என்கிறார்கள் விவரமறிந்த தி.மு.க. பிரமுகர்கள்.
ஆரம்ப காலம்தொட்டே கட்சியில் தனக்கென்று ஆதரவாளர்கள் யாரையும் அன்பழகன் வைத்துக்கொள்வதில்லை. ஆனாலும் தவறாமல் அன்பழகன் வீட்டில் ஆஜராகிவிடுவார். இது இன்று நேற்றைய பழக்கமல்ல. 1967-ல் அன்பழகன் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே, எம்.எல்.ஏ.வாக இருந்த ஆற்காட்டார் தேடிப்போய் உருவாக்கிக்கொண்ட பழக்கம் அது. பிந்தைய ஆண்டுகளில் ஆற்காட்டாருடன், துரைமுருகனும் சேர்ந்துகொள்வார். மூவரும் கட்சியின் நடவடிக்கைகளை விவாதிப்பதுண்டு. கொஞ்ச நாட்களாகவே, “நம் கட்சியின் போக்கு எனக்கே பிடிக்கவில்லை. அண்ணா நாடகம் எழுதி, அந்த நாடகத்தில் அவரே நடித்து வளர்த்த கட்சி இது. இன்று கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகத் தெரிகிறதே? என்று வருத்தப்பட ஆரம்பித்துவிட்டாராம் அன்பழகன். ‘நானாவது அரசியலில் இருந்து விலகி இருக்கலாம் என்றால், கலைஞர் விட மறுக்கிறார். என்னைக் கட்டாயப்படுத்தி இந்த முறை தேர்தலில் நிற்க வைத்தார். என்ன செய்வது என்றே தெரியவில்லை” என அன்பழகன் நொந்துபோய் பேசியதாகக் கூறுகிறார்கள். துரைமுருகனும் தன் பங்குக்கு, “இந்தத் தேர்தலில், சீனியர்கள் ஒதுங்கிக்கொள்ளலாம். அடுத்த தலைமுறைக்கு வழிவிடலாம். கட்சியை வழி நடத்தும் குழு ஒன்றை அமைத்து அதற்கு நீங்களே தலைவராக இருங்கள்’ என்று தலைவரிடம் பேசிப் பார்த்தேன். அவர் ஒப்புக்கொள்ளவேயில்லை. ‘அப்படி செஞ்சா என்னை யாருய்யா மதிப்பான்?’ என்று தலைவர் கோபப்படுகிறாரே தவிர, யதார்த்தத்தை அவர் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை” என கொட்டித் தீர்த்ததாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே கட்சியிலிருந்தும் தீவிர அரசியலிலிருந்தும் ஒதுங்கியே இருக்கும் ஆற்காட்டார், ‘என்னைக் கேட்டால், ஸ்டாலினை முன்னிறுத்தி கடந்த முறை தேர்தலைச் சந்தித்து இருக்கலாம். அதைச் சொன்னால், தலைவருக்குப் பிடிக்காதே?’ என்கிறாராம், சக தலைவர்களிடம்.
அன்பழகனின் அதிர்வேட்டு கிளப்பிய அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத கருணாநிதி சமீபகாலமாக அறிவாலயத்துக்கு வருவதை வெகுவாக குறைத்துக்கொண்டதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இப்போதும் ‘அன்பழகன் இப்படிப் பேசிவிட்டாரே’ என்கிற வருத்தம்தான் கலைஞரிடம் தெரிகிறதே தவிர, யதார்த்தத்தைப் புரிந்து அடுத்தகட்ட நகர்வை கட்சி மேற்கொள்ளவதாகத் தெரியவில்லை” என்கிறார்கள், கட்சியின் உள் விவகாரங்களை அறிந்தவர்கள். தி.மு.க.வின் உறுப்பினர் சேர்க்கை முடிந்து அடுத்த ஆறு மாதங்களில் கட்சித் தலைவர் தேர்வு நடக்கும்போதுதான் இதற்குச் சரியான விடை கிடைக்கும் என்கிறார்கள்.
இதுபற்றியெல்லாம் பேராசிரியர் அன்பழகனிடமே கேட்டுவிடலாம் என நினைத்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றோம். “அன்பழகன் கண்புரை அறுவை சிகிச்சை செய்திருப்பதால் சந்திக்கும் வாய்ப்பு இல்லை” எனத் தெரிவித்த அவரது உதவியாளர், நாம் கேட்க வந்திருந்த விஷயங்களை கேட்டுத் தெரிந்துகொண்டார். பின்னர் அன்பழகன் கூறியதாக நமக்கு அவர் சொன்ன பதில் இதுதான்... “கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசியதை வெளிப்படையாக மீடியாக்களிடம் சொல்ல முடியாது!”
தி.மு.க.வின். இந்தப் புகைச்சல் என்ன விளைவுகளை உருவாக்குமோ?
நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்
No comments:
Post a Comment