Wednesday, October 17, 2012

2013 டிசம்பர் வரையில் மின் வெட்டு தீராது! ஓர் அதிர்ச்சி தகவல்


தூக்கம் தொலைத்து, தொழிலைத் தொலைத்து, நிம்மதியைத் தொலைத்துவிட்டாலும், 'மின்வெட்டுப் பிரச்னை எந்த நேரமும் தீர்ந்து விடும்’ என்ற நம்பிக்கையில் இருந்தனர் மக்கள். ஆனால், நாளுக்குநாள் மின்வெட்டு நேரம் அதிகரித்த நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், '2013-ம் ஆண்டு ஜூன் மாதம் மின்வெட்டு பிரச்னை தீரும்’ என்று அறிவித்திருக்கிறார். இதை எதிர்பார்க்காத மக்கள், 'இனியும் பொறுக்க முடியாது’ என்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பொங்கி எழுந்து விட் டனர். மின்வாரிய அலுவலகங்களை முற்றுகை இடுவதும், சாலை மறியல் செய்வதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. இதன் உச்சகட்டமாக ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் அ.தி.மு.க. தெருமுனைப் பிரசாரத்துக்கு வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, முற்றுகை இட்டு போராடி இருக்கிறார்கள். 
'தி.மு.க. ஆரம்பித்து வைத்த மின்திட்டங்களில் இருந்து மின்சாரத்தைப் பெற தமிழக அரசு முயற்சிக்க வில்லை’ என்று கருணாநிதியும் கண்டித்திருக்கும் நிலையில், உண்மையில் என்னதான் நடக்கிறது?
தமிழகத்தின் ஒரு நாளைய மின்சாரத் தேவை 12 ஆயிரத்து 500 மெகாவாட். ஆனால், அனல் மின் நிலையங்கள், நீர் மின் உற்பத்தித் திட்டம், காற்றாலை போன்றவற்றின் மூலம் நமக்கு கிடைப்பதோ 7,500 முதல் 8,000 மெகா வாட்தான். அதனால், நாள் ஒன்றுக்கு 3,000 முதல் 4,000 மெகாவாட் வரை பற்றாக்குறை நீடிக்கிறது. காற்றாலை உற்பத்தியும் இப்போது கைவிட்டு விட்டதால், சில மணி நேரங்களாக இருந்த மின்வெட்டு, இப்போது 16 மணி நேரம் வரை நீடிக்கிறது.
மின்சாரத் தேவை அதிகரிப்பு:

இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது மின்சாரத் தேவை அதிகரித்து இருப்பதுதான். ஃப்ரிட்ஜ், கிரைண்டர், ஸ்டெபிலைசர், மிக்ஸி, வாஷிங் மெஷின் என்று மின்சாதனப் பொருட்கள் பெருகிவிட்டன. அதனால், மின்தேவையின் அளவு கிடுகிடுவென அதிகரித்து உள்ளது. மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டால், பயன்படுத்தும் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மின்சாரக் கட்டணத்தைக் கண்டு மக்கள் வயிற்றெரிச்சல் பட்டாலும் தேவையைக் குறைக்கத் தயாராக இல்லை என்பதே உண்மை.

புதிய மின்திட்டங்கள்
மின் தேவை மற்றும் பற்றாக்குறை அதிகரித்து வருவதை முந்தைய முதல்வர் கருணாநிதியோ, அதற்குமுன் ஆட்யில் இருந்த ஜெயலலிதாவோ உணரவே இல்லை. அப்போதே திட்டமிட்டு புதிய மின்உற்பத்தித் திட்டங்களை தொடங்கி  இருந் தால், இப்போது பலரும் ராத்திரியில் தூக்கத்தைத் தொலைத்து வியர்வையில் குளிக்கும் நிலை ஏற்பட்டு இருக்காது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் மின் பற்றாக்குறை அதிகரித்து, மின்வெட்டு தீவிரமாகவும் வட சென்னை அனல் மின் நிலையத்தில் தலா 600 மெகா வாட் தயாரிக்கும் வகையில் இரண்டு யூனிட்களும், மேட்டூரில் 600 மெகா வாட் உற்பத்தியாகும் வகையில் ஒரு யூனிட், வல்லூரில் தலா 500 மெகா வாட் உற்பத்தியாகும் மூன்று யூனிட்களையும் தொடங்கினர்.
இந்தப் புதிய மின்உற்பத்தித் திட்டங்கள் மூலம் கிடைக்கும் 3,300 மெகாவாட்டை நம்பித்தான் 2013-ம் ஆண்டு மின்வெட்டுப் பிரச்னை தீரும் என்று, மின்வாரிய அதிகாரிகளில் இருந்து மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வரை சத்தியம் செய்கின்றனர். ஆனால், இந்தத் திட்டங்கள் எல்லாம் மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் இருக்கிறதா என்பதைப் பார்த்தால், அதிர்ச்சிதான் பதிலாகக் கிடைக்கிறது.
ஆமை வேகத்தில் பணிகள்
வடசென்னை அனல் மின்நிலையத்தில் இரண்டு யூனிட்களை நிறுவும் பணியை 'பெல்’ நிறுவனமும், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் புதிய யூனிட்களை நிறுவும் பணியை 'பி.ஜி.ஆர். எலெக்ட்ரானிக்ஸ்’ என்ற தி.மு.க. மூத்த அமைச்சரின் உறவினர் நிறுவனமும் கான்ட்ராக்ட் எடுத்துள்ளன. கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி 2011-ம் ஆண்டு செப்டம்பரில் முடிக்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். காலதாமதம் ஆகும் ஒவ்வொரு மாதத்துக்கும் லட்சக்கணக்கில் அப ராதம் விதிக்கப்படும் என்ற ஷரத்தும் ஒப்பந்தத்தில் உண்டு.
திட்டப்படி 2011-ல் வேலை முடிந்திருந்தால், பொது மக்கள் இவ்வளவு அவஸ்தையை அனுபவித்திருக்க மாட்டார்கள். கான்ட்ராக்ட் நிறுவனங்கள் இதுவரை வேலையை முடிக்கவில்லை. விரைவில் முடிக்கும் சூழலும் தென்படவில்லை. தட்டிக்கேட்டு வேலை வாங்க வேண்டிய மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கும், கான்ட்ராக்ட் நிறுவனங் களுக்கும் இடையே உள்குத்து இருப்பதால், யூனிட் அமைக்கும் பணி ஜவ்வாக இழுபடுகிறது. மேட்டூரில் புது யூனிட் சோதனை ஓட்ட நிலைக்கு  வந்திருக்கிறது. வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஒரு யூனிட் அடுத்த ஆண்டு மார்ச் மாதமும், மற்றொரு யூனிட் ஆகஸ்ட் மாதமும் தயாராகும் என்கிறார்கள். வல்லூரில் ஒரு யூனிட் மட்டும் இந்த மாதம் சோதனை ஓட்டத்துக்கு வரும். மற்றவற்றில் பணிகள் நிறைவு அடையவில்லை.
இந்த கான்ட்ராக்ட் நிறுவனங்களுக்கு மின் வாரியம் ஏற்கெனவே கணிசமான அளவு பணத்தைக் கொடுத்து விட்டது. அதனால், விரட்டி வேலை வாங்க முடியவில்லை. சீக்கிரம் முடியுங்கள் என்று கெஞ்ச  வேண்டிய நிலை. தாமதமானால் அபராதம் என்பது குறித்துப் பேசும் நிலையில்கூட மின்வாரியமும் இல்லை.
அதிகாரிகள் மாற்றம்
மின்வாரியத் தலைவர் பதவியில் இதுவரை ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி இருக்கிறது அரசு. பதவியேற்ற சில மாதங்களிலேயே ஒவ்வொருவரும் காலியாகி விடுகிறார்கள். அதனால், புதிதாகப் பதவிக்கு வருபவர்கள், எத்தனை நாட்கள் பதவியில் இருக்கப் போகிறோமோ என்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள். யாரும் புது மின்திட்டப் பணிகளில் கவனம் செலுத்துவது இல்லை என்கின்றனர் மின் வாரியத் துறையினர்.
மத்திய அரசின் ஓரவஞ்சனை
தமிழகத்தை, மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. தமிழக மின்திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிலக்கரியை 30 சதவிகிதம் குறைத்து விட்டது என்று மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சமீபத்தில் புகார் சொல்லி இருந்தார். மத்திய அரசின் நிலக்கரி சுரங்கத் துறைதான் தேசிய அனல் மின் நிலையங்களுக்கும், மாநிலங்களுக்கும் நிலக்கரி சப்ளை செய்கிறது. தமிழகத்தில் உள்ள மின்உற்பத்தி நிலையங்களுக்கு ஆண்டுக்கு 150 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவை. ஆனால், மத்திய அரசு 120 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியைத்தான் தமிழகத்துக்கு வழங்குகிறது. 30 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி பற்றாக்குறை என்பதால், மின் உற்பத்தியும் குறைகிறது. வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய மின்வாரியம் இறங்கி இருக்கிறது. ஆனால், மத்திய அரசு அனுமதி வழங்குவது, கப்பலில் நிலக்கரி கொண்டு வருவது என்று அதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து தி.மு.க-வைச் சேர்ந்த மின்சார வாரிய தொ.மு.ச. பொதுச்செயலாளர் ரத்தின சபாபதியிடம் பேசியபோது, ''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் புதிய மின்திட்டப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்திருந்தால், உண்மையிலேயே மூன்று மாதங்களில் எல்லா வேலையும் முடிந் திருக்கும். இப்போது ஏற்பட்டிருக்கும் மின் வெட்டுப் பிரச்னை வந்திருக்காது. மின் வெட்டுப் பிரச்னையை சமாளிப்பதற்கு மின்வாரியத் தலைவர் பதவியில் இருந்த  ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பலிகடா ஆக்கி விஷயத்தை திசை திருப்பி விட்டனர்.
அதேபோல, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பத்தில் மறைமுகமாக அ.தி.மு.க. ஆதரித்தது. அதனால், கூடங்குளத்தில் மின்சார உற்பத்தியும் தொடங்கவில்லை. புதிய மின்திட்டங்கள் எல்லாமே கடந்த தி.மு.க. ஆட்சியில் தலைவர் கருணாநிதி கொண்டு வந்தவைதான். கருணாநிதி கொண்டு வந்தது என்பதாலேயே புதிய மின்திட்டங்களை ஜெயலலிதா முடக்கி வைத்துவிட்டார். இப்போது, நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டுதான் மத்திய அரசு மீது பழியைப் போடுகிறார்கள்'' என்றார்.
தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் கே.விஜயன், ''மின் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். ஆனால், அதைச்சமாளிக்க முடியாமல் மாநில அரசு திணறுவதற்கு முழுக்க முழுக்க அரசியல்தான் காரணம். ஒரே ஓர் உதாரணம். நாடு முழுவதும்  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய மின் பகிர்மான கம்பிகள் வழியாகத்தான் மின்சாரம் சப்ளை ஆகிறது. தனியார் மின் நிறுவனங்கள் தயாரிக்கும் மின்சாரமும் இந்த மின்வழிக் கம்பிகள் மூலமாகத்தான் வேறு இடங்களுக்குப் போகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டுப் பிரச்னை கடுமையாக இருந்தது. அப்போது, நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. உடனே மத்திய அரசு அனுமதியுடன் வெளி மாநிலத்தில் இருந்து 3,000 மெகா வாட் மின்சாரத்தை வாங்கி இதே தேசிய மின்வழிக் கம்பிகள் மூலமாகக் கொண்டுவந்து நிலைமையை சமாளிச்சாங்க. இப்போது நம்முடைய மின் பற்றாக்குறையை சமாளிக்க குஜராத், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் மின்சாரம் தருவதற்குத் தயாராக இருக்கின்றன. அந்த மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை தேசிய மின்பகிர்மானக் கம்பிகள் மூலமாகக் கொண்டுவருவதற்கு நம் மாநில அரசு அனுமதி கேட்டது. ஆனால், மத்தியஅரசு, 'தேசிய மின் பகிர்மானக் கம்பிகள் ரொம்பவும் பலவீனமாக இருக்கிறது. நெருக்கடி இருக் கிறது’ என்று சாக்குப்போக்குச் சொல்லி அனுமதி மறுத்துட்டாங்க. அதனால், வட மாநிலத்தில் இருந்து மின்சாரத்தை வாங்க முடியவில்லை. தமிழக மின் திட்டங்களுக்கான நிலக்கரி ஒதுக்கீட்டை  மத்தியஅரசு குறைச்சதிலும் அரசியல் இருக்கிறது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க-வுக்கு இடையே நடக்கும் அரசியல் 'உள் குத்தில்’ மக்கள் படும்பாடுதான் வேதனையாக இருக்கிறது. இதேநிலை நீடித்தால் 2013-லும் மின்வெட்டுப் பிரச்னை தீராது... மின்வெட்டு நேரம் கொஞ்சம் குறையும் அவ்வளவுதான்'' என்றார்.

No comments:

Post a Comment