Tuesday, October 30, 2012

''சின்மயி புகாருக்கும் ராஜன் கைதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதல்வர் பின்னணியா? திடுக்கிடும் தகவல்.


ட்டற்ற சுதந்திரத்துக்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். இந்த விதி மீறப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு பாடகி சின்மயி விவகாரம் ஓர் உதாரணம்! 
ட்விட்டர் வலைதளத்தில் அதிகமான எண்ணிக்​கையில் பின்தொடர்பவர்களைக் கொண்டவர் சின்மயி. ஏறத்தாழ ஒரு லட்சத்​துக்கும் மேலான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அவர் தனது ட்விட்டரில் இடஒதுக்கீடு விவகாரம், தமிழக மீனவர்கள் படுகொலை போன்ற மிக சூடான, ஆழமான விவகாரங்கள் பற்றி சில பதிவுகளை வெளியிட, உடனேயே அதற்கு எதிர்வினைகள் எல்லா பக்கங்களில் இருந்தும் வந்து குவிந்திருக்கின்றன. அந்த விவ காரம்தான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறி சின்மயியின் தாயாரைப் பற்றி அசிங்கமாக சில பதிவுகளை வெளியிடும் அளவுக்குப் போய் இருக்கிறது.  
இதை அடுத்துத்தான், கடந்த 18-ம் தேதி சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு தனது தாயாருடன் வந்த சின்மயி, 'வலை தளங்களில் தன்னைப்பற்றி மோசமான பதிவுகளை வெளியிடுபவர் ​களைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று புகார் கொடுத்தார். சின்மயி புகார் கொடுத்த அடுத்த 24 மணி நேரத்தில் இரண்டு பேரை கைது செய்தது காவல்துறை. கைதானவர்களில் ஒருவர் தேசிய ஆடை வடிவமைப்பு கல்லூரி உதவிப்பேராசிரியர் சரவணக்குமார். மற்றொருவர் அவிநாசியைச் சேர்ந்த ராஜமணாளன் என்ற ராஜன். இவர், ராஜன் லீக்ஸ் என்ற பெயரில் ட்விட்டரில் தொடர்ந்து எழுதுபவர். தனியாக வலைதளமும் வைத்து அதிலும் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிகிறார்.
ட்விட்டரில் இவர்களுக்கும் பாடகி சின்மயிக்கும் இடையே என்னதான் நடந்தது? ராஜனின் நண்பர்கள் சிலரிடம் பேசினோம். ''கதை, கவிதை, சினிமா விமர்சனம் என தொடர்ந்து எழுதி வரும் ராஜன், ட்விட்டரிலும் தனது கருத்துக்களை வெளியிடுவதில் ஆர்வம் உள்ளவர். இந்தநிலையில், கடந்த மாதம், ஆங்கிலப் பத்திரிகை ஒன்று எழுதிய கட்டுரையில் ட்விட்டரில் அதிகப் பதிவுகளை வெளியிட்டவர்கள் என ஷ்ரேயா கோஷல், சேகர்கபூர், சின்மயி, ராஜன்... எனப் பெயர்களை வரிசைப்படுத்தி இருந்தது. 'எனக்கு அடுத்தபடியாக ராஜனின் பெயரை ஏன் வெளியிட்டீர்கள்? அவர் எங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு முக்கியமானவரா?’ என்று அந்தக் கட்டுரையை எழுதியவரிடம் அப்போதே சண்டை போட்டார் சின்மயி. இதையடுத்து, ராஜனை மறைமுகமாக ஆர் லீக்ஸ் என்று குறிப்பிட்டு, தனது பதிவுகளில் சின்மயி தொடர்ந்து தாக்கி எழுதிக் கொண்டு இருந்தார். ஆனால், ராஜன் அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. அவர் நினைத்தால்கூட கூறவும் முடியாது. ஏனென்றால், அதற்கு முன்பே சின்மயி தன்னுடைய ட்விட்டர் நண்பர்கள் பட்டியலில் இருந்து ராஜனை நீக்கி விட்டார். ஃபேஸ்புக்கில்தான் சிலர், சின்மயி பற்றி அவதூறாக எழுதினர். அவர்களுக்கும் ராஜனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், ராஜன் மீது சின்மயி ஏன் புகார் கொடுத்தார் என்று தெரியவில்லை'' என்றனர்.
விவரமறிந்த சிலரோ, ''சின்மயி புகாருக்கும் ராஜன் கைதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில நாட்களுக்கு முன், தமிழக முதலமைச்சர் ஜெய லலிதாவை மிகமோசமாகச் சித்திரித்து இலங்கைப் பத்திரிகை ஒன்று கார்ட்டூன் வெளியிட்டு இருந்தது. அதனுடன் மேலும் சில மோசமான வார்த் தைகளைச் சேர்த்து, தன் வலைதளத்தில் ராஜன் பரப்பினார். இதைச் சிலர் காவல் துறையின் கவனத்துக்குக் கொண்டு வந்ததன் விளைவே ராஜனின் கைது. ஆனால், உதவிப் பேராசிரியர் சரவணக்குமார் விவகாரம் வேறு. இவர்தான் சின்மயியின் தாயாரைப்பற்றி கிண்டலாக ஆபாசம் தொனிக்கும் சில பதிவுகளை வெளியிட்டவர். அதற்கான எல்லா ஆதாரங்களையும் சின்மயி போலீஸிடம் கொடுத்துள்ளார். அதன்பேரிலேயே சரவணக்குமார் கைது செய்யப்பட்டார். இவர் செய்தது தவறு என்றால் சின்மயியும் தவறு செய்தவர்தான். இவருக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு உண்டு'' என்கிறார்கள். அரசியல், கொள்கை சார்ந்து விமர்சிக்கும்போது, தனிப்பட்ட முறையில் ஆபாசமாக எழுதுவதுதான் இப்போது பிரச்னை ஆகி இருக்கிறது.
சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஜார்ஜிடம் பேசியபோது, ''யாராக இருந்தாலும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில், தனிஅறைக்குள் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டர் மூலம் யாரைப்பற்றியும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்கக் கூடாது. அப்படி செய்வதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்றும் நினைக்கக்கூடாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்க சைபர் க்ரைம் உள்ளது. பாதிக்கப்படுபவர்கள் இதை யாரிடம் சொல்வது, எப்படிப் புகார் கொடுப்பது என்று தடுமாறவும் தேவையில்லை. உடனடியாக சைபர் க்ரைமை அணுகலாம். குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைப் பெற்றுத்தர முடியும். அதேபோல், புகார் கொடுப்பவர்களும் தாங்கள் வெளியிட்ட பதிவுகளை மறைத்து விட்டு, தங்களுக்கு எதிரான பதிவுகளை மட்டும் ஆதாரமாகக் காட்டி புகார் அளிக்க முடியாது. இருவருக்கு இடையிலும் நடந்த அனைத்து உரையாடல்களையும் கண்டுபிடிக்கும் வசதியும் தொழில்நுட்பமும் எங்களிடம் உள்ளது'' என்றார்.
சமூக வலைதளத்தில் உலா வருபவர்களுக்கு இந்தச்சம்பவம் ஓர் எச்சரிக்கை!

No comments:

Post a Comment