Tuesday, October 30, 2012

'நான் கார்டன்ல இருந்து பூங்குன்றன் பேசுறேன்.மிமிக்கிரி ஆள் வைத்து மோசடி செய்கிறாரா டி.டி.நாயுடு?




த்தனையோ முறை புகார்கள் வந்து விட்டன. யார் யாரோ புகார் கொடுத்து​விட் டனர். ஆனால், அத்தனை புகார்களையும் சமாளித்து தனது காரியங்களைக் கச்சிதமாகச் செய்து வருகிறார் தீனதயாள் நாயுடு. அவரது மோசடிகளுக்கு முற்றுப்​புள்ளி வைக்கவே முடியாதா?'' என்ற கொந்தளிப்பு மாணவர்கள் மத்தியில் மீண்டும் கிளம்பி இருக்கிறது. 
திருவள்ளூர் மாவட்டம், குன்ன​வலத்தில் உள்ளது டி.டி. மருத்துவக் கல்லூரி. இந்தக் கல்லூரி மீதும், கல்லூரியின் நிறுவனர் தீனதயாள் நாயுடு மீதும் கூறப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் குறித்து, ஏற்கனவே 29.6.2011 தேதியிட்ட  ஜூ.வி. இதழில் விரிவாக எழுதிஇருந்தோம். இந்திய மருத்துவக் கழகம், அந்தக் கல்லூரியின் ஆவணங்களைக் கடந்த ஆண்டு பரிசீ லனை செய்தபோது, போலி​யான போட்டோ மற்றும் ஆவணங்கள் தயாரித்து பல டாக்டர்கள் பணியாற்று​வதுபோல செட்டப் செய்தது அம்பல​மானது. சில மருத்துவமனைகளின் வெப்சைட்டுக்குள் சென்று, டாக்டர்களின் போட்டோக்களையும் கையெழுத்தையும் காப்பி செய்து, தங்கள் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிவது போன்று போலி ஆவணங்கள் தயாரித்து, 150 மருத்துவ இடங்களை அந்தக் கல்லூரி பெற்றது. இந்த விவகாரம் அப்போது விஸ்வரூபம் எடுக்க... கல்லூரிக்கான அங்கீகாரத்தை ரத்துசெய்ய, அகில இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் பரிந்துரைத்தது தமிழக அரசு. ஆனால், அதையும் மீறி மாணவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதாக இப்போது புகார் கிளம்பி இருக்கிறது.
இந்த ஆண்டுக்கும் அங்கீகாரம் இல்லாத நிலையில், நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளிடம் பணம் வாங்கி கோடிக்கணக்கில் சுருட்டுகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சித் தகவல். முதலில் விவரம் தெரியாமல் பணத்தைக் கட்டிவிட்டு, பிறகு பணத்தைத் திருப்பி வாங்க பல மாணவர்கள் துடிதுடிக்கிறார்கள்.
விக்னேஷ் என்ற மாணவனின் வழக்கறிஞர் பாலு நம்மிடம் பேசினார். ''கடந்த ஜூலை மாதம் எனது கட்சிக்காரர்கள் பீமாராவ் தனது மகன் விக்னேஷ§க்காக 27.5 லட்ச ரூபாயும், பார்த்திபன் என்பவர் தனது மகள் குமுதாவுக்காக 19 லட்ச ரூபாயும், திருமாவளவன் என்பவர் தனது மகள் செந்தமிழ்ப்பாவைக்காக 11 லட்ச ரூபாயும் மருத்துவப் படிப்புக்கான கட்டணமாக டி.டி கல்லூரியின் நிர்வாகி தீனதயாளிடம் கொடுத்துள்ளனர். கல்லூரிக்கான அங்கீகாரம் இல்லாதது தெரியவந்து இவர்கள் கட்டிய பணத்தைத் திருப்பிக் கேட்டனர். அதைத்தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் அவர். ஒரிஜினல் சான்றிதழையாவது கொடுங்கள் என்று கேட்கச் சென்ற பெற்றோரை ஆள் வைத்து மிரட்டி இருக்கிறார். இதுகுறித்து, கடந்த செப் டம்பர் மாதம் திருவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால், வழக்குப்பதிவு செய்ய வில்லை. இப்போது, நீதிமன்றம் சென்ற பிறகே அவசர அவசரமாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த ஆண்டு மட்டும் சுமார் 200 மாணவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய்களைக் கறந்துள்ள தீன தயாள், போலியாக சில ஆவணங்களைத் தயாரித்து பெற்றோரை ஏமாற்றி உள்ளார்'' என்று பகீர் கிளப் பினார்.
விஷயம் தெரிந்து நிர்வாகியிடம் விவகாரம் செய்யும் பெற்றோர் பல வழிகளில் மிரட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு வி.ஐ.பி-க்கள் போல மிமிக்ரி வாய்ஸில் பேசுவதற்கென்றே தனியாக ஒரு ஆளை சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்துள்ளாராம். அவர்களை வைத்து பெற்றோர்களிடம் பேசி மிரட்டுகிறாராம். சமீபத்தில், அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வேதாச்சலம் தனது கட்சிக்காரர் ஒருவர் மகளுக்காக கட்டிய பணத்தைக் கேட்க டி.டி கல் லூரிக்குச் சென்றாராம். அவரைச் சந்திக்காமல் திருப்பி அனுப்பி விட்டாராம் தீனதயாள் நாயுடு. அடுத்தநாள், வேதாச்சலத்துக்கு போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. 'நான் கார்டன்ல இருந்து பூங்குன்றன் பேசுறேன். அம்மா டி.டி காலேஜை வாங் கிட்டாங்க. அந்தக் காலேஜ் பக்கம் போய் பணம் கேக்குற வேலை வெச்சுக்காதீங்க' என்று மிரட்டல் வர... 'அப்படியா..? நீங்க திரும்பவும் இதைச் சொல் லுங்க, நான் ரெக்கார்டு பண்ணிக்கிறேன்’ என்று வேதாச்சலம் சொன்னதும் லைன் கட் ஆகி இருக்கிறது.
இதுகுறித்து எம்.எல்.ஏ வேதாச்சலத்திடம் கேட்ட​போது, ''அந்த ஆள் அம்மா பெயரைச் சொல்லி என் கிட்டேயே ஏமாத்துறார். இப்ப நான் கார்டனுக்குத்தான் போயிட்டு இருக்கேன். இதை அம்மா கவனத்துக்குக் கொண்டு போகப்போறேன்'' என்றார்.
இதேபோல, இந்தக் கல்லூரியின் வண்ட​வாளத்தைக் கேள்விப்பட்ட வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணப்பன், பாதிக்கப்பட்ட சில மாணவர்​களின் ஒரி ஜினல் சான்றி​தழ்களை வாங்கிக்கொடுக்கச் சொல்லி போலீஸாரை அனுப்பியுள்ளார். அடுத்த நாளே, 'ஐ.ஜி.கண்ணப்பன் போலீஸை அனுப்பி என் காலேஜ்ல இருந்து அஞ்சு கோடி ரூபாயை அள்ளிட்டுப் போயிட்டார்’ என்று தீனத​யாள் புரளி கிளப்பினாராம்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்க அந்தக் கல்லூரிக்கு நாம் நேரில் சென்றோம். செக்யூரிட்டிகள் நம்மை உள்ளே அனுமதிக்க மறுத்ததோடு, 'எந்த வண்டியில் வந்தீங்க? திரும்பி வீடு போய்ச் சேர மாட்டீங்க...’ என்று மிரட்டல் தொனியில் பேசினர். தீனதயாளை தொலைபேசி எண்ணில் பலமுறை தொடர்பு கொண்டோம். போனை எடுத்த அவரது உதவியாளர் சீமா, 'சார் எங்கே இருக்கார்னே எனக்குத் தெரியலை. அவர் வந்ததும் நீங்க பேசினதா சொல்றேன்’ என்பதையே திரும்பத் திரும்ப கிளிப்பிள்ளையாக சொன்னார். டி.டி கல்லூரி நிர்வாகத்தின் விளக்கம் வந்தால் பிரசுரிக்க நாம் தயாராகவே இருக்கிறோம்.
இந்தக் கல்லூரி குறித்து வந்திருக்கும் புகார் குறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. ரூபேஷ் குமார் மீனாவிடம் பேசினோம். ''சமீபத்தில்தான் எனது கவனத்துக்குப் புகார் வந்தது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.
மருத்துவத்தின் பெயரைச் சொல்லி இப்படி ஓர் மோசடி நடப்பதை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்​கழகம் எப்படித்தான் அனுமதிக்கிறதோ..?

No comments:

Post a Comment