Saturday, October 20, 2012

நித்தி டிஸ்மிஸ்? அடுத்தது அரெஸ்ட்?



மாதக் கணக்கில் நித்திய கண்டமாய் நகர்ந்துவரும் நித்தியானந்தா நியமன வழக்கு, முக்கியக் கட்டத்தை எட்டி இருக்கிறது. அருணகிரிநாதரை மதுரை ஆதீனத்தில் இருந்து வெளியேற்றுவது, ஆர்த்தி ராவ் வழக்கில் நித்தியை சிறைக்கு அனுப்புவது போன்றவற்றில் தமிழக அரசின் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது! 
நித்தியானந்தா நியமனத்தை எதிர்த்துக் கிளம்பிய மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பினர், 'நித்தியானந்தாவையும் அவரைக் குறுக்கு வழியில் ஆதீனத்துக்குள் கொண்டுவந்த அருணகிரிநாதரையும் மடத்தைவிட்டு வெளியேற்றிவிட்டு நிர்வாகத்தை அரசு ஏற்க வேண்டும்’ என்று ஆரம்பத்தில் கோரிக்கைவைத்தார்கள். அப்போது, 'நிர்வாகப் பொறுப்புகளை அருணகிரிநாதரே கவனித்துவருவதால் மடாதிபதி இருக்கை காலியாக இல்லை. எனவே மடத்தை அரசு ஏற்க வேண்டிய அவசியம் எழவில்லை’ என்று சொன்னது இந்து அறநிலையத் துறை. ஆனால், நித்தியானந்தா நியமனம் தொடர்பாகத் தொடரப்பட்ட பொது நல வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 28-ல் வந்தபோது, 'சட்ட விதிகளுக்கும் மடத்தின் மரபுகளுக்கும் முரணாக நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து இருக்கிறார் அருணகிரிநாதர். அதற்காக அருணகிரிநாதர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று அரசுத் தரப்பில் அஃபிடவிட் தாக்கல் செய்து ஆதீனத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது தமிழக அரசு!
கடந்த 16-ம்தேதி இந்த வழக்கின் மறு விசாரணை வந்தபோது, இன்னும் ஒருபடி மேலே போயிருக்கிறார்கள். 'நித்தியானந்தா மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. குண நலன் கெட்டு, ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்காத நித்தியானந்தா, இந்த மடத்துக்கு மட்டும் அல்ல, வேறு எந்த மடத்துக்கும் தலைவராகத் தகுதியற்றவர். அவரை மதுரை ஆதீனத்தின் வாரிசாக நியமித்தது சட்டத்துக்குப் புறம்பானது. இதன் பின்னணியில் ஆதீன சொத்துக்களை அபகரிக்கும் நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது’ என்று வாதாடினார் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்.
அடுத்த நாள் அருணகிரிநாதருக்காக ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், 'இளைய ஆதீனத்தை நியமனம் செய்வதற்கு அருணகிரிநாதருக்கு முழு அதிகாரம் உள்ளது. இதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது. நித்தியானந்தாவை முறைப்படிதான் இளைய ஆதீனமாக நியமித்து இருக்கிறார் அருணகிரிநாதர். நித்தியானந்தாவின் சாதியைப் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். 1994-லேயே அவர் சன்னியாசி ஆகிவிட்டார். சன்னியாசிக்கு சாதி ஏது? நித்தியானந்தா நியமனத்தில் எந்த விதிமீறலும் இல்லை. கற்பனையான காரணங்களைச் சொல்லி பொது நல மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்’ என்று தனது வாதத்தை எடுத்துவைத்தார். இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பும் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளிப்பதற்காக விசா ரணையை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள் நீதிபதிகள்.
அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணனிடம் பேசினோம். ''இந்து அறநிலையத் துறை சட்டப்படி மதுரை ஆதீன மடத்தைப் பொறுத்தவரை, ஒருவர் மட்டுமே மடாதிபதியாக இருக்க முடியும். அவருக்குப் பின்னால் மடாதிபதியாக வருபவரும் அந்த மடத்திலேயே தங்கி இருந்து, சிவ சித்தாந்த நெறிமுறைகளைக் கற்றுத் தேர்ந்த சீடர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். ஆனால், '292-வது குருமகா சன்னிதானமான நான் 293வது சன்னிதானமாக நித்தியானந்தாவை நியமிக்கிறேன்’னு கர்நாடகாவில் வைத்து ஒப்பந்தம் எழுதி இருக்கிறார் அருணகிரிநாதர். இது, இந்து அறநிலையத் துறை சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது. மேலும், ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டுகளில் சிக்கி இருக்கும் நித்தியானந்தாவை மடத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் மரபுகளை மீறி அடுத்த மடாதிபதியாக நியமித்திருக்கிறார் அருணகிரிநாதர். இந்த நியமனம் ஏற்புடையது அல்ல என்பதை கோர்ட்டில் தெளிவுபடுத்தி இருக்கிறோம். மரபுகளை மீறி சட்ட விரோதக் காரியத்தைச் செய்த அருணகிரிநாதரை மடத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து நீக்கி, மடத்தை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மதுரை நீதிமன்றத்தில் அரசு தரப்பில் சிவில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டன'' என்றார்.
தமிழக அரசின் அதிரடி மூவ் குறித்து தொடர் முயற்சிகளுக்குப் பிறகு மதுரை ஆதீனம் அருணகிரி நாதரிடம் பேசினோம். ''வழக்கு நீதிமன்றத்தில் இருக்கே...'' என வழக்கம்போல இழுத்தவர், ''நாங்கள் உட்பட ஆதீனகர்த்தர்கள் யாருமே கோர்ட்டுக்கோ, போலீஸ் ஸ்டேஷனுக்கோ இதுவரை போனது இல்லை; அப்படிப் போவது மரபும் இல்லை. கடந்த 40 ஆண்டுகளாக ஆதீன மடத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபட்டிருக்கும் நாங்கள், மடத்துக்கு விரோதமான நடவடிக்கைகள் எதிலும் இறங்கியது இல்லை. ஆதீனத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்வதற்காகவே நித்தியானந்தரை இளைய பட்டமாக ஆக்கினோம். ஆதீனத்தின் சொத்துக்களை நித்தியானந்தாவுக்கு எழுதிக் கொடுத்துவிட்டதாகச் சொல்வது எல்லாம் அபாண்டம். அதுபோன்ற காரியத்தை ஒருக்காலும் நாம் செய்ய மாட்டோம். எங்களை இந்த மடத்தைவிட்டு வெளியேற்றும் சூழல் வராது; அத்தகைய முடிவை அரசாங்கம் எடுக்காது. புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு எங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். எங்களை வெளியேற்றி, ஒரு தவறான முன்னுதாரணத்தை நிச்சயம் புரட்சித் தலைவி அவர்கள் செய்ய மாட்டார்கள். மற்ற விஷயங்களை நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னால் பேசுவோம்'' என்று தயக்கத்துடனேயே பேசினார் அருணகிரிநாதர்.
பொது நல வழக்குப் போட்டவர்களோ, ''மதுரை ஆதீன மடத்தை 'மதுரை ஆதீன அறக்கட்டளை’ என்று மாற்றி அதன் தலைவராக நித்தியானந்தாவை நியமித்து ஆதீன சொத்துக்களை பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறார் அருணகிரிநாதர். இதற்கான ஒப்பந்தத்தை கர்நாடகாவில் பதிவும் செய்திருக்கிறார். அதற்கான 27 பக்க ஆவணங்கள் இப்போது எங்கள் கையில்'' என்று அடுத்த குண்டை தூக்கிப் போடுகிறார்கள். 'நித்தியின் ஆட்கள் என்னை கொலை செய்யப் பார்க்கிறார்கள்’ என்று ஏற்கெனவே ஆர்த்தி ராவ் கொடுத்த புகாருக்கு எஃப்.ஐ.ஆர். போட்டுவைத்திருக்கும் சென்னை போலீஸ், இந்த வழக்கில் நித்தியைக் கைதுசெய்வது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கிறார்களாம்.
இந்த அதிரடியை தாக்குப்பிடிக்க முடியாமல், 'மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதி பொறுப்பு வேண்டாம்’ என்று நித்தியானந்தா ராஜினாமா செய்துவிட்டதாக 18-ம் தேதி பரபரப்பு கிளம்பியது. உடனடியாக அருணகிரிநாதரைத் தொடர்புகொண்டோம். ''எங்களுக்கும் அப்படி ஒரு தகவல் வந்தது. ஆனால், நித்தியானந்தா எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. நித்தியானந்தா ராஜினாமா வதந்தி பற்றி இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது. அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால் அப்புறம் கருத்துச் சொல்கிறோம்'' என்று முடித்துக்கொண்டார்.
ராஜினாமா விவகாரம் குறித்து திருவண்ணாமலையில் இருக்கும் நித்தி அலுவலகத்தில் விசாரித்தோம். ''ராஜினாமா செய்தி பொய். சுவாமிஜி எட்டு மணி நேர தியானத்தில் இருக்கிறார் அவரை இப்போது பார்க்க முடியாது'' என்று சொன்னார்கள். ஆனால், அந்த நேரத்தில் எங்கோ வெளியில் சென்றிருந்த நித்தியானந்தா தனது காரில் ஆசிரமத்துக்குள் நுழைந்தார். போகும்போதே மீடியாக்களைப் பார்த்து கையசைத்துவிட்டுப் போனார். சற்று நேரத்தில் உள்ளே இருந்து வந்த நித்தியின் உதவியாளர் நித்திய பரமானந்தா, ''சுவாமிஜி ராஜினாமா செய்துவிட்டதாகச் சொல்லப்படும் செய்தி தவறானது. யாரோ வதந்தியைப் பரப்பி இருக்கிறார்கள். ராஜினாமா செய்யும் திட்டம் எதுவும் இல்லை; அவர் அப்படி செய்யவும் மாட்டார். வழக்கு கோர்ட்டில் இருக்கிறது அதை சட்டப்படி எதிர்கொள்வார்'' என்று நாலே வரியில் நச்சென பதில் சொன்னார். நித்தியானந்தாவை சந்திக்க வேண்டும் என்று நிருபர்கள் கேட்டதும், ''நவராத்திரி பூஜைகளில் சுவாமிஜி பிஸியாக இருக்கிறார். இரவு 7 மணிக்கு அவர் பூஜைக்கு வரும்போது அவரைத் தரிசிக்கலாம்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் பரமானந்தா.

No comments:

Post a Comment