Thursday, October 11, 2012

அடுத்த பிரதமர் அம்மா... அடுத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!'' தேனியில் ஒலித்த குரல்!


முதல்வர்’ என்ற வார்த்தைதான் அ.தி.மு.க. வட்டாரத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தை. அதைத் தைரியமாக சொல்லி இருக்கிறார்கள் தேனி ரத்தத்தின் ரத்தங்கள்! கடந்த 4-ம் தேதி நடந்த, தேனி நாடாளு மன்றத் தொகுதி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத் தில், 'அடுத்த பிரதமர் அம்மா... அடுத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்’ என்று வெளிப்படையாக கோஷம் எழுப்பப்படவே, அலறிக்கிடக்கிறது ஆளும் கட்சி வட்டாரம். மாவட்டச் செயலாளர் சிவகுமார் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட் டத்தில் மாண்புமிகுக்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், செல்லூர் ராஜு ஆகியோர் படையோடு வந்து கலந்து கொண்டனர். 
அடுத்த பிரதமர் அம்மா... அடுத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!'' தேனியில் ஒலித்த குரல்!
ஆண்டிபட்டி எம்.எல்.ஏ-வான தங்கத் தமிழ்ச் செல்வன் பேசத் தொடங்கியபோதே சர்ச்சைக்குரிய கருத்துக்களை அள்ளி விதைத் தார். ''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தோற்றதுக்குக் காரணம் நம் கட்சிக்குள் இருந்த உள்குத்துப் பிரச்னைதான். 2004 மற்றும் 2009-ம் ஆண்டு நடந்த தேனி நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிக்கே வராத ஆரூணிடம் நாம் எப்படித் தோற்றோம் என்றால், அழகிரியின் மீது இருந்த பயம்தான். அவர் செய்த ரவுடித்தனம், மிரட்ட லால்தான் தோற்றோம். உளவுத் துறை ஆய்வாளராக இருக்கும் ஒரு போலீஸ்காரர்தான் அழகிரிக்கு ரூட் போட்டுக் கொடுத்து பணத்தைக் கட்டுக்கட்டாக போலீஸ் வாகனத்திலேயே கடத்திப் பட்டுவாடா செய்ய உதவி செய்தார். அழகிரி சொன்னதை எல்லாம் செய்த அந்த நபர் இன்றும் தேனியில் இருக்கும் மர்மம் என்ன? பலமுறை கட்சிக்குப் புகார் அனுப்பியும் அவரைத் தூக்காத மர்மம் என்ன? கடந்த தேர்தலில் அழகிரி எல்லாப் பக்கமும் பணத்தைக் கொடுத்தாலும், ஆண்டிபட்டி, உசிலம் பட்டி, சோழவந்தானில் நாம்தான் அதிக ஓட்டு வாங்கினோம். ஆனால் பெரியகுளம், போடி, கம்பம் சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க-வைவிட நாம் குறைவான வாக்குகளை வாங்கினோம். ஏனென்றால், உள்கட்சிப் பிரச்னைதான். இந்த முறையாவது நாம் ஜெயிக்க வேண்டும் என்றால், பொறுப்பாளர்கள் அனைவரும் காழ்ப்புஉணர்ச்சியை மறந்து ஒற்றுமையாக உழைக்க வேண்டும்'' என்று பிரச்னையைத் தொடங்கி வைத்தார்.
அடுத்துப் பேசிய அமைச்சர் கே.பி.முனுசாமி, ''இந்த தேனி மாவட்டம்தான், மருத்துவமனையில் படுத்து இருந்தபோதே புரட்சித் தலைவரை ஜெயிக்க வைத்தது. இது அம்மாவின் மாவட்டம். அம்மாவுக்கு மிகவும் பிடித்த ஆண்டிபட்டி இங்குதான் உள்ளது. 1989-ல் சேவல் சின்னத்தில் போடி தொகுதியில் அம்மா போட்டியிட்ட நேரத்தில் ஜெயிக்க வைத் ததும் இந்த ஊர்தான். மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஊழலில் மூழ்கி நிற்கிறது. நாடு நல்லா இருக்க வேண்டும் என்றால், இங்கு கூடியிருக்கும் கூட்டம் அம்மாவைப் பிரதமராக்க வேண்டும்'' என்றார்.
மைக் பிடித்த நத்தம் விஸ்வநாதன், 'வெந்ததைத் தின்று... கண்டதைப் பேசுபவர் அம்மா இல்லை. சொன்னதைச் செய்பவர். ஏற்கெனவே, தி.மு.க. அரசு மின்சாரத் துறையின் உற்பத்தித் திறனை அதிகரிக்காமல் விட்டதின் பலனைத்தான் இன்று நாம் மின்வெட்டுப் பிரச்னையாக அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். 2013-ல் நிச்சயம் அம்மா மின்சாரப் பிரச்னையைத் தீர்த்து வைப்பார்'' என்று அமர்ந்தார்.
அடுத்துப் பேச வந்தார் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். ''எம்.ஜி.ஆர். இறந்த நேரத்தில் 18 லட்சம் உறுப்பினர்களுடன் இருந்த கழகத்தை இன்று, 1.50 கோடி உறுப்பினர்கள் கொண்ட கழகமாக எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாத கழகமாக அம்மா நடத்தி வருகிறார். தினமும் 22 மணி நேரம் மக்களுக்காக உழைக்கிறார். 18 மாத கால அம்மாவின் ஆட்சியைக் குறை சொல்ல முடியாத காரணத்தால்தான், கருணாநிதி டெசோவைக் கையில் எடுத்திருக்கிறார். டெல்லியில் இருக்கும் மீடியாக்காரர்கள், 'அம்மாதான் இந்தியாவை வழி நடத்தும் தகுதி படைத்த நபர்’ என்று எங்களிடம் சொன்னார்கள். எனவே, அம்மாவைப் பாரதப் பிரதமராக்க 40 தொகுதிகளிலும் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பைத் தேடித் தாருங்கள்'' என்று முடித்தார்.
உடனே ரத்தத்தின் ரத்தங்கள், 'வருங்கால பாரதப் பிரதமர் அம்மா வாழ்க... வருங்கால தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்க...’ என்று உணர்ச்சிவசப்பட்டு கோஷமிட்டனர். முதலில் புன்னகையுடன் அதைக் கவனித்தார் பன்னீர் செல்வம். மற்ற அமைச்சர்களும் நிர்வாகிகளும் அந்த கோஷத்தைக் கேட்டு அதிர்ந்து நிற்பதைப் பார்த்த பிறகுதான் நிலவரம் கலவரமானது. இந்த இடத்தில் இதற்கு மேல் நின்றால் ஆபத்து என்று நினைத்து அவசர அவசரமாக வெளியேறி னர் அமைச்சர்கள்.
பன்னீர் நிம்மதியைக் கெடுத்துவிட்ட தாம் அந்தக் கோஷம்!

No comments:

Post a Comment