Monday, October 8, 2012

கம்பெனிகளிடம் காசு பறிக்கும் கட்சிகள்... கட்சிகளைக் காக்கா பிடிக்கும் கம்பெனிகள்!


ஞ்சம் கொடுப்பதில் ஒரு வகை, 'கட்சி நிதி யாகக் கொடுத்து விடுகிறோம்’ என்பது. அதாவது, முறையாக முறைகேடு செய்வது. இந்த விவகாரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது! 
தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் என்ற அமைப்பினர் டெல்லியில் பகிரங்கப்படுத்தி இருக்கும் தகவல்களைப் பார்த்து, அத்தனை அரசியல் கட்சி தலைமை அலுவலகங்களும் தலைகுனிந்து நிற்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் தனியார் கம்பெனிகளும் அரசியல் கட்சிகளுக்குப் போட்டி போட்டுப் பணத்தை வாரிவழங்கி உள்ளன. அதாவது, நிதிகளை அள்ளிக் கொடுப்பதன் மூலம், அரசியல் கட்சிகளை இந்தக் கம்பெனிகள் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை 2,008 கோடி ரூபாய் தானமாகத் தரப்பட்டுள்ளது. இப்போது, எதிர்க்கட்சியாகவும் அடுத்து ஆளும் கட்சியாக வரப்​போகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் பி.ஜே.பி. இதுவரை 994 கோடி ரூபாய் வாங்கி உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கோலோச்சும் மாயாவதி 484 கோடி ரூபாயையும், அவரைக் குற்றம்சாட்டி அரசியல் செய்வதையே தொழிலாகக்கொண்டுள்ள முலாயம் சிங் யாதவ் 279 கோடியையும் வாங்கி உள்ளார். திருவாளர் பரிசுத்தம் போல அனைத்துக் கட்சிகளையும் விமர்சித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 417 கோடி ரூபாய் பெற்றுள்ளது. சரத்​பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 160 கோடி கிடைத்துள்ளது. அ.தி.மு.க. 59.97 கோடி ரூபாயும், தி.மு.க. 44 கோடி ரூபாயும் பெற்றுள்ளது. இவர்களுக்கு அடுத்த இடத்தில் சிவசேனா (32 கோடி), ஐக்கிய ஜனதா தளம் (27 கோடி) ஆகியவை​ இருக்கின்றன. இந்த ஒட்டுமொத்த வருமானம் எல்லாம் 2004 முதல் முதல் 2011 வரையிலான கணக்குகள்!
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதிகள், நன்கொடைகள் போன்றவைக்கு வரிவிலக்கு உண்டு. அதேசமயம், இந்த வருமானம் குறித்து ஒவ்வோர் ஆண்டும் வருமான வரித் துறையினருக்கு கணக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதேமாதிரி, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடையாக அல்லது நிதியாகக் கிடைத்தால், நிதி அளித்தவர்களின் பெயர்ப் பட்டியலோடு ஆண்டுதோறும் தங்கள் வருமானக் கணக்கை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் நினைத்தால் இப்படி சமர்ப்பிக்காத கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். இதே மாதிரி வருமான வரித் துறையினருக்கு கணக்கு சமர்ப்பிக்கவில்லை என்றால், வருமான வரி விலக்கும் பெற முடியாது. கட்சி அலுவலகங்களில் சோதனை நடத்தி பணத்தைக் கைப்பற்றலாம். ஆனால், அப்படி எல்லாம் எதுவும் நடப்பது இல்லை.
மொத்தம் உள்ள 36 கட்சிகளில் 18 கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் நன்கொடை விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை. இதனால்தான், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தகவல்களைக் கேட்டனர். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர, எந்தக் கட்சியும் தகவல் தர முன்வரவில்லை. தங்களுக்கு நன்கொடை அளித்தவர்கள் பட்டியலை அந்தக் கட்சி கொடுத்ததோடு எந்தெந்த வழிகளில் பணம் தரப்பட்டது என்ற விவரங்களையும் கொடுத்துள்ளது. காங்கிரஸ், பி.ஜே.பி., மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள், 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கட்சிகள் வராது’ என்று பதில் கொடுத்துள்ளன. 'நீங்கள் கேட்கும் தகவல்களை எடுத்துத் தர எங்கள் கட்சிக்கு ஆள் பலம் இல்லை’ என்று சரத்பவார் கட்சி பதில் கூறி உள்ளது.
கல்வி, வறுமை, மருத்துவம் போன்றவற்றில் உதவத்தான் முன்பு அறக்கட்டளைகள் தொடங்கப் பட்டன. இப்போது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கவே கார்ப்பரேட் நிறுவனங்கள் சில அறக்கட்டளைகளை உருவாக்கியுள்ளன. பிர்லா நிறுவனம் அமைத்துள்ள அறக்கட்டளையின் பெயர் ஜெனரல் எலக்ட்ரோரல் அறக்கட்டளை. இந்த அறக் கட்டளையின் சார்பில் (2003-11) காங்கிரஸ் கட்சிக்கு 36 கோடி கொடுக்கப்பட்டு உள்ளது. இதே நிதி ஆண்டுகளில் எதிர்க்கட்சியான பி.ஜே.பி-க்கு 26  கோடி கொடுத்துள்ளது. டாடா நிறுவனம் ஏற்படுத்தியுள்ள அறக்கட்டளையின் பெயர் எலக்ட்ரோரல் டிரஸ்ட். காங்கிரஸுக்கு 9.96 கோடி ரூபாயும் பி.ஜே.பி-க்கு 6.82 கோடி ரூபாயும் கொட்டியுள்ளது. தூத்துக்குடியில் இயங்கும் சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அரசியல் விழிப்பு உணர்வு அறக்கட்டளை காங்கிரஸ் கட்சிக்கு ஆறு கோடியும் பி.ஜே.பி-க்கு இரண்டு கோடியும் கொடுத்துள்ளது. இந்த நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனம். வெளிநாட்டு நிறுவனங்களிடம் இந்திய அரசியல் கட்சிகள் நன்கொடை பெறக் கூடாது என்று விதிமுறை இருந்தும், யாரும் அந்த விதியை கண்டுகொள்வது இல்லை!
இந்தத் தகவல் களை எல்லாம் தோண்டியெடுக்க இந்தப் பொதுநலன் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 18 மாதங்கள் போராடி யுள்ளன. இந்தத் தகவல்கள் மூலம், டாடா, பிர்லாக்கள் நன் கொடைகள் கொடுத்து கட்சிகளை யும் நாட்டையும் ஆளுவது தெளிவாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment