Monday, October 8, 2012

குமரனுக்கு மூன்று எதிரிகள்! ஸ்ரீபெரும்புதூர் திகில்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவிய வீச்சரிவாள் கலாசாரம், இப்போது வெடிகுண்டு அளவுக்கு வளர்ந்து இருக்கிறது! 
கடந்த 1-ம் தேதி காலை. வழக்கம் போல தன்னுடைய நண்பர்கள் சங்கர், மதியழகன் ஆகியோருடன் டொயோடா காரில் பயணம் செய்தார் குமரன். அவருக்குத் துணையாக எப்போதும் ஆட்கள் நிரம்பிய இனோவா கார் ஒன்றும் கூடவே வரும். சம்பவத்தன்று டிரைவர் மட்டுமே காரை ஓட்டிக்கொண்டு வந்தார். ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே கார் வந்தபோது எதிரே வேகமாக வந்த ஸ்கார்பியோ மோதுவது போல வந்து நிற்க, குமரன் வந்த டொயோடாவும் இனோவாவும் நிறுத்தப்பட்டன.
''பக்கத்து டீக்கடையில் இருந்த இருவர் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை இரண்டு கார்களின் மீதும் வீச... இனோவா கார் சாலையோர பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. அடுத்ததாக குமரன் வந்த கார் மீதும் தொடர்ந்து குண்டுகளை வீச... முன்புறக் கண்ணாடி மீது ஒரு குண்டு விழுந்து வெடித்தது. அடுத்த குண்டு டீசல் டேங்கை சிதைத்தது. அடுத்த குண்டு கார் கதவைப் பதம் பார்க்க, நிலை தடுமாறிய கார் சாலையோரம் கவிழ்ந்தது. காருக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். அப்போது ஸ்கார்பியோவில் வந்த ஆறு பேர் அடங்கிய மர்மக்கும்பல், கடப்பாரை மற்றும் அரிவாளுடன் இறங்கித் தாக்கினர். அதே பகுதியில், போக்குவரத்தை சீர் செய்துகொண்டிருந்த காவலர் ஒருவர் ஓடி வந்தார். அதைப் பார்த்த கும்பல் உடனே இரு சக்கர வாகனத்திலும் ஸ்கார்ப்பியோவிலும் ஏறி தப்பித்துவிட்டனர்'' என்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.
பலத்த வெட்டுக் காயங்களோடு கிடந்த மூவரும் அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனாலும், சிகிச்சை பலன் இன்றி குமரன் இறந்து விட்டார்.
வெடிகுண்டு வீசிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்ற பிரவீன்குமார் போலீஸாரிடம் பிடிபட்டார். காவல் துறையினரின் தீவிர விசாரணையில், செந்தில்ராஜன் மற்றும் வெங்கடேசன் என்ற இரண்டு அ.தி.மு.க. புள்ளிகளின் பெயர்களை உச்சரித்தாராம். அன்று இரவே கூலிப்படையைச் சேர்ந்த கவுஸ்பாஷா, கலைமணி, சாம்சன் ஆகியோர் எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
கொலைக்கான பின்னணி குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஏரியாவில் விசாரித்தோம். ''ஸ்ரீபெரும்புதூர்பிள்ளைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் குமரன். சிறுவயதில் இருந்தே சாராயம் விற்பனை செய்தவர். பி.ஏ. வரை படித்தார். ஆரம்பத் தில் 'புரட்சி பாரதம்’ கட்சியில் இருந்தவர், அதில் இருந்து விலகி 'விடுதலைச் சிறுத்தைகள்’ கட்சியில் இணைந்தார். வளர் புரத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் திருமணிக்குப்பத்தைச் சேர்ந்த மதியழகன் இருவரும் ஆரம்ப காலத்தில் இருந்தே குமரனுக்கு நண்பர்கள். மூவரும் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்பார்கள். கட்டப்பஞ்சாயத்தில் கால் பதித்தவருக்கு தொட்டதெல்லாம் துலங்க ஆரம்பித்தது. ஏரியாவில் இருக்கும் செல்போன் மற்றும் கார் கம்பெனிகளில் ஸ்கிராப் வாங்கி விற்கத் தொடங்கினார். ரியல் எஸ்டேட்டிலும் கோலோச்சினார்.
ஆளும் கட்சியில் செல்வாக்கு பெற விரும்பி, 'விடுதலைச் சிறுத்தைகள்’ கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க-வில் இணைந்தார். ஆளும் கட்சி என்ற துணிச்சல், கட்டப்பஞ்சாயத்தின் வேகத்தை அதிகரிக்கவே... உளவுத் துறை மூலம் மேலிடத்துக்குப் புகார்கள் பறந்தன. அதனால், அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டார்.  
இந்தநிலையில், கோடிகள் கொட்டும் ஸ்கிராப் பிசினஸில் பார்ட்னராக இருந்த கெலுத்திப்பேட்டை வைரவனிடம் இருந்து பிரிந்தார். இதனால், இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க-வைச் சேர்ந்த செந்தில்ராஜனை வீழ்த்தி வெற்றிவாகை சூடினார். இதிலும் பகை ஏற்பட்டது.
ஒன்றியத் தலைவர் பதவிக்கு குமரனும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த குட்டி (எ) வெங்கடேசன் என்பவரும் போட்டியிட்டனர். அ.தி.மு.க-வின் வெங்கடேசன் வெற்றி பெற்றார். வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் ஸ்கிராப் தொழில் செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கம்பெனிகளை நாடினார் வெங்கடேசன். ஆனால், பலன் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் தலைவரான வெங்கடேசனுக்குத் தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்து வந்தார் குமரன். இதனால் இருவருக்கும் பகை அதிகரித்தது. வைரவன், செந்தில்ராஜன், வெங்கடேசன் ஆகியோருடன் குமரனுக்கு ஏற்பட்ட பகைதான் கொலைக்குக் காரணமாக அமைந்தது'' என்கிறார்கள்.
கூடுதல் எஸ்.பி. பாஸ்கரனிடம் பேசி னோம். ''சம்பவத்தின்போது பிடிபட்ட பிரவீன்குமார் கொடுத்த தகவலின் அடிப் படையில் தென் மாவட்டங்களுக்கு சென்று சம்பவத்தில் நேரடித் தொடர் புடைய கூலிப்படையைச் சேர்ந்த 10 பேரைப் பிடித்து இருக்கிறோம். அவர்களின் வாக்குமூலத்தின் அடிப் படையில் முக்கியக் குற்றவாளிகளான செந்தில்ராஜன், வெங்கடேசன் மற்றும் வைரவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலிப்படையினர் பல்லாவரத்தில் தங்கி வெடிகுண்டுகள் தயாரித்து உள்ளனர். சம்பவ தினத்தன்று குண்டுக் காயம்பட்டு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த ரவுடி ஐயப்பன் என்பவரையும் பிடித்து அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். ஐயப்பனின் நிலை இப்போது கவலைக்கிடமாக உள்ளது. கொலை செய்யப்பட்ட குமரன் மீது இரண்டு கொலை வழக்கு, மூன்று கொலை முயற்சி, அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என நிறையவே வழக்குகள் இருக்கின்றன'' என்றார்.
அரசியல் கொலைகள் எந்த ஆட்சியிலும் ஒழியாதோ?

No comments:

Post a Comment