Wednesday, October 3, 2012

மன்மோகனை ஆதரிக்காத காங்கிரஸ் கமிட்டி! டெல்லியில் வீசும் தேர்தல் காற்று



80 -வது பிறந்த நாள் கொண்டாடும்நேரத்தில் நிம்மதி இல்லாமல் இருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். தினமும் ஒரு விவகாரம் வெடித்து அவரது ஆட்சியின் ஆயுளைக் குறைத்துக்​கொண்டே இருக்கிறது! 
நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிக்கித் தவித்த காங்கிரஸ் ஆட்சி, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டைக் கொண்டுவந்து அதைத் திசை திருப்பலாம் என்று பார்த்தது. அமெரிக்காவைத் திருப்திபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை, இந்தியா முழுமைக்கும் அதிருப்தியை விதைத்துவிட்டது. எத்தனையோ முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும்போதெல்லாம் சும்மா மிரட்டல் மட்டும் விட்டுவந்த மம்தாகூட, இம்முறை தனது ஆதரவை வாபஸ் வாங்கும் அளவுக்குப் போனார். ஆட்சியின் ஸ்திரத்தன்மையை முலாயம் சிங் ஆதரவை வைத்து சரிசெய்ய வேண்டிய நெருக்கடிக்கு மன்மோகன் சிங் அரசு தள்ளப்பட்டது. பிரதமரின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் சில தலை​வர்களே ஆதரிக்கவில்லை, அதிருப்தி காட்டினர் என்பதுதான் உண்மை. இது, டெல்லியில் அரசல்புரசலாக வெளியில் வர ஆரம்பித்ததும் அதை மறைத்தாக வேண்டிய நெருக்கடி காங்கிரஸ் மேலிடத்துக்கு ஏற்பட்டது. 'பிரதமரின் முடிவுகளுக்கு எங்களது முழுஆதரவு உண்டு’ என்று காரியக் கமிட்டியில்  பேசப்பட்டதாக அறிவிக்கவும் செய்தார்கள். இந்த தலைமைக் கமிட்டியில் பிரதமர் உட்பட மொத்தம் 30 உறுப்பினர்கள் இருந்தனர். 80 வயதான பிரதமரை விட ஒரு வயது மூத்தவரான கரன்சிங்தான் அவரை விமர்சித்துப் பேசி இருக்கிறார்.
''நிலக்கரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது'' என்று, கரன்சிங் சொன்​னதைக் கவலையுடன் கவனித்த மன்மோகன், ''நீங்களே இப்படி ஃபீல் செய்து பேசுகிறீர்கள். இதற்கு நான் பொறுப்பேற்றுக்கொள்ளத் தயார்!'' என்று படபடப்புடன் சொன்னாராம். ''அவர் சொன்னதைக் கவனித்தபோது மன்மோகன் உடனே ராஜினாமா செய்து விடுவார் என்றே நினைத்தேன்'' என்று நம்மிடம் சொன்னார் ஓர் உறுப்பினர்.
உடனே, உஷார் அடைந்து நிலைமையைச் சமாளிக்க ஆரம்பித்தார் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல். ''யாரும் உங்களைக் குறை சொல்லவில்லை. கட்சி மீது தவறான கருத்து வளர்கிறது. இதை நாம் அகற்ற வேண்டும். டீசல் விலை உயர்வு, சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு என்று எதைத் தொட்டாலும் பிரச்னையாகிறது. இப்போது இமாசலப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தேர்தல் வருகிறது. அங்கு இவை நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் கட்சியினர் வருத்தப்படுகிறார்கள்'' என்று பூசி மெழுகி இருக்கிறார் அகமது படேல்.
இதைத்தொடர்ந்து பேசிய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், ''இதுபோன்ற முடிவுகள் எடுக்கும்போது, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்​களை  கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். அதைச் செய்வது இல்லை.
இந்த மாதிரியான பொருளாதார முடிவுகளை படிப்படியாக அமல்படுத்தி இருக்கலாம். எங்களிடம் ஆலோசித்து விட்டு முடிவு எடுத்திருந்தால் எதிர்க் கட்சிகளை சமாளிக்க நம்மைத் தயார்படுத்திக்கொண்டு இருக்க முடியும்'' என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகு, சோனியா காந்தி சில வார்த்தை​களைச் சொல்லி இருக்கிறார்.
''நாட்டின் பொருளாதாரம் பலமாக இருக்க வேண்டும். வளர்ச்சிப் பணிகளை மேற் கொள்ளப் பணம் தேவை. இதற்குத் தேவையான பொருளாதார சீர்திருத்தங்களை பிரதமர் எடுத்துள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுக்கிறது. ஆட்சிக்கும் எந்தவிதமான ஆபத்தும் இல்லை'' என்று சொல்லிக் கூட்டத்தை முடித்துள்ளார் சோனியா.
தன்னை ஆதரித்து சோனியா பேசியது மட்டுமே போதுமானது என்று பிரதமர் நினைக்கவில்லை. 'மன்மோகன் சிங் எடுத்து வரும் பொருளாதார சீர்த்திருத்தங்களை காங்கிரஸ் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது’ என்று தீர்மானம் போட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம் பிரதமர். ''அப்படி ஒரு தீர்மானத்தை கட்சி நிறைவேற்றினால், அது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். காரியக் கமிட்டியிலேயே ப.சிதம்பரம் தவிர வேறுயாரும் அந்த தீர்மானத்தை ஆதரிக்க மாட்டார்கள்'' என்று காரியக் கமிட்டி உறுப்பினர்களே பேசிக்கொள்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் சூடுபட்ட பூனையாகி​விட்டது மத்திய அரசு. டீசல், எரிவாயு போன்றவற்றுக்கு மானியத்தைக் குறைத்ததுபோல சர்க்கரைக்கும் மானியத்தைக் குறைக்கலாம் என்று ஆலோசனை சொன்னாராம் அமைச்சர் சரத்பவார். ஆனால், அந்த ஃபைல் போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டதாம். அமைச்சரவையிலும் இந்த விவாதம் வர வேண்டாம் என்று சோனியா உத்தரவிட்டாராம். ''தீபாவளி நேரத்தில் இதைச்செய்தால், ஆட்சிக்கு இன்னும் கெட்ட பெயர் ஏற்படும்'' என்று, தடை விதித்து விட்டார்களாம்.
ஆனால், நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்​தன்மை​யை உருவாக்க வேண்டுமானால், இத்தகைய மான்யக் குறைப்புகள் அவசியம் என்பதில்பிரதமர் உறுதியாக இருக்கிறார். மொத்தத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் மன்மோகன் சிங் சிந்தனைக்குக் கடுமை​யான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த விரக்தி காரண​மாக தினமும் நொந்துபோய் காட்சி அளிக்கிறார் பிரதமர்!

No comments:

Post a Comment