Saturday, October 20, 2012

சேலம் போலீஸ் மீது வழக்குப் போடுவேன்! வெளுத்துக் கட்டும் வீரபாண்டி ஆறுமுகம்


அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்களில் அதிக நாட்கள் சிறையில் இருந்தவர் வீரபாண்டி ஆறுமுகம்தான். வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனவர், தன் சொந்தக் கிராமமான பூலாவரிக்குச் சென்ற கையோடு, கருணாநிதியைச் சந்திக்க சென்னை திரும்பி இருக்கிறார். சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றபோது, ''நான் ஜெயிலுக்குப் போனபோது சித்தார்த் ரொம்பக் குட்டியா இருந்தான். இப்போ என்னைப் பார்த்து நல்லா சிரிக்கிறான்'' என்று, பேரனை மடியில் வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார் வீரபாண்டி ஆறுமுகம். 
''எப்படி இருந்தது ஜெயில் வாழ்க்கை?''
''ஜெயில் எனக்குப் புதுசு இல்லை. தமிழ் மொழிக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் அண்ணா காலத்தில் இருந்தே பலமுறை ஜெயிலைப் பார்த்தவன் நான். ஜெயில்ல பிடிச்சுப் போட்டா வீரபாண்டி ஆறுமுகம் முடங்கிப்போவான்னு கணக்குப் போட்டாங்க. எதையும் தாங்கும் இதயம் வேண்டும்னு அண்ணா சொல்லிச் சொல்லி வளர்ந்த புள்ளைங்க நாங்க. இதுக்கெல்லாம் அசர மாட்டோம்.
ஜெயிலுக்குள் இருந்தவரை, தினமும் காலையில 6 மணிக்கெல்லாம் எழுந்திடுவேன். கொஞ்ச நேரம் காலார நடப்பேன். எனக்கு மூட்டு வலி இருக்கிறதால, அதுக்கு சில பயிற்சிகளை டாக்டர்கள் சொல்லிக் கொடுத்திருந்தாங்க. அந்தப் பயிற்சிகளை செய்வேன். அப்புறம் அரை மணி நேரம் யோகா. வெளியில் இருந்தபோது தினமும் யோகா செய்ய நேரம் கிடைக்காது. ஆனா, ஜெயிலுக்குள்ள யோகாவை ஒரு நாள்கூட மிஸ் பண்ணவே இல்லை. உடம்பையும் மனசையும் புத்துணர்ச்சியோட வைத் திருக்கும் பவர் யோகாவுக்கு இருக்கு.
ஜெயிலுக்கு வரும் தமிழ் பேப்பர் எல்லாத்தையும் ஒரு வரி விடாம படிச்சு முடிச்சுடுவேன். அது எவ்வளவு நேரத்துக்குத் தாங்கும் சொல்லுங்க.. எங்க வீட்டு ஆளுங்ககிட்ட பேராசிரியர் சில புத்தகங்களைக் கொடுத்திருந்தார். அது எல்லாமே தமிழகத்தைப் பற்றிய வரலாற்று நூல்கள். படிக்க ஆரம்பிச்சேன். நாள் போனதே தெரியலை. பேராசிரியர்கிட்ட கேட்டு வாங்கி நல்ல நூல்களைத் தொடர்ந்து படிக்கப்போறேன். எனக்கு ஆரம்பத்தில் அலர்ஜி பிரச்னை இருந்தது. ஜெயில் சாப்பாட்டால் அந்த பிரச்னை கொஞ்சம் அதிகமாயிடுச்சு. அப்புறம் அதுவே பழக்கப்பட்டுப்போச்சு.''
''உங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் பற்றி?''
''அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்குகள் என்பது ஊருக்கே தெரியும். இப்போது,  என் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் செல்லாது என்று நீதிமன்றமும் அறிவித்து இருக்கிறது. சேலம் போலீஸாரை நீதிமன்றமே கண்டித்து இருக்கிறது. ஒருத்தரைப் பழிவாங்கணும்னு நினைச் சுட்டா எப்படி வேண்டுமானாலும் பொய்யான வழக்கை ஜோடிச்சு ஜெயிலுக்கு அனுப்பிடலாம் என்பதற்கு நானே உதாரணமாகி இருக்கேன். சட்ட வல்லுனர்களுடன் கலந்துபேசி சேலம் போலீஸார் மீது வழக்குத் தொடர்வேன்.. என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த தமிழக அரசைக் கண்டித்து தமிழகம் முழுக்க ஜெயில் நிரப்பும் போராட்டம் நடத்திய என் தலைவர் கலைஞருக்கு நான் எப்படி நன்றி சொல்லப்போறேன்னு தெரியலை. நான் ஜெயில்ல இருந்து வெளியில் வரும்போது தம்பி ஸ்டா லினும், கனிமொழியும் ஜெயில் வாசலுக்கே வந்து வரவேற்றனர். ஜெயிலில் இருந்து வந்ததும் எனக்கு வந்த முதல் போன் அழகிரியிடம் இருந்துதான். இப்படிப்பட்டவர்கள் இருக்கும்போது நான் எதற்காகக் கலங்க வேண்டும்?''
''தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்களே?''
''அதான் சொல்கிறேனே, தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த அத்தனை பேர் மீதும் பொய்வழக்குப் போட்டு பழி தீர்த்துக்கொள்ள ஆளும் அ.தி.மு.க. அரசு நினைக்கிறது. அதற்கு ஒவ் வொருவராகப் பலிகடா ஆக்கப்பட்டு வருகிறோம். தி.மு.க-வினர் மீது அடக்கு முறையை ஏவிவிட்டு, எங்களை முடக்கலாம் என்று ஜெயலலிதா திட்டம் போடுகிறார். இந்த வழக்குகள் மட்டும் அல்ல, இன்னும் எத்தனை வழக்குகள் போட்டாலும் அதைச்சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.''
''நீங்கள் ஜெயிலுக்குள் இருந்த நேரத்தில் தி.மு.க. இளைஞர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமித்து இருப்பதைக் கவனித்தீர்களா?''
''பார்த்தேன். கழகத்தின் பொருளாளர் தம்பி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று நிர்வாகிகளை நேரடியாகத் தேர்வு செய்திருக்கிறார். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல்தான் இப்போது வெளியாகி இருக்கிறது. கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகளைக் கேட்டு, புதிய நிர்வாகிகள் துடிப்போடும், எழுச்சியோடும் செயல்படுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!''

No comments:

Post a Comment