Saturday, October 20, 2012

'முத்தம் கொடுக்கலைன்னா... மார்க் காலி!' வக்கிர ஆசிரியர்கள்... கொதித்தெழுந்த மக்கள்


சிரியர் எத்தனை ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை நெத்தியடியாக உணர்த்தியது சமீபத் தில் வெளியான 'சாட்டை’ திரைப்படம். ஆனால், வக்கிரப்புத்தி கொண்ட ஆசிரியர்கள் இன்னும் இருக் கிறார்களே..? 
வேலூர் அருகே உள்ள பெருமுகை கிராமத்தில் அரசினர் ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 16-ம் தேதி, பெருமுகை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு நித்திரன் என்ற ஆசிரியரை சரமாரியாகத் தாக்கினர்.
பெருமுகை கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் நம்மிடம், ''ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளியில் நித்திரன், வில்சன் என்ற இரண்டு ஆசிரியர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள். 12-ம் வகுப்பு உயிரியல் ஆசிரியராக இருக்கிறார் நித்திரன். 10-ம் வகுப்பு சமூக அறிவியல் ஆசிரியராக இருக்கிறார் வில்சன். இருவரும் கூட்டணி சேர்ந்துகொண்டு மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவதும், அசிங்கமாக செய்கை செய்வதுமாக இருந்திருக்கிறார்கள்.
மைதானத்தில் தனியாக இருந்த ஒரு மாணவியிடம், 'நீ ரொம்ப அழகா இருக்க... உன் நடை ரொம்ப அழகா இருக்கு. என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடு!’ என்று வில்சன் அசிங்கமாகக் கூப்பிட்டு இருக்கார். ரெண்டு நாளைக்கு முன்னால வில்சன் தன்னுடைய கிளாஸுக்கு லேட்டாப் போயிருக்கார். அந்த நேரம் பார்த்து இரண்டு மாணவிகள் தண்ணீர் குடிக்கப் போயிட்டு கிளாஸுக்குத் திரும்பி இருக்காங்க. அவங்களை, 'எவனைப் பார்க்கப் போயிருந்தடி... இந்த வயசுல உனக்கு எதுக்குடி காதல் கேட்குது?’னு கேவலமாத் திட்டி இருக்கார். அதோட விடாம, 'என் மச்சான் உன்னை லவ் பண்றான். அவன்கிட்ட போன் பண்ணித் தர்றேன். பேசு’னு சொல்லி இருக்கார். இவரைப்போலவே நித்திரனும் மாணவிகளிடம் தொடர்ந்து வம்பு செய்திருக்கிறார். 'முத்தம் கொடு, இல்லைன்னா உன்னுடைய பிராக் டிக்கல் மார்க் காலி’னு மாணவிகளை மிரட்டி இருக்கார்.
ஸ்கூல்ல மட்டும் இவங்க செக்ஸ் டார்ச்சர் கொடுக் கலைங்க. போன வாரம் இந்த ஸ்கூல்ல படிக்கிற ஒரு பொண்ணு காட்பாடி ஜங்ஷனில் இருந்து வெளியே வந்திருக்கிறது. பின்னாடியே போன வில்சன், 'என்ன பாப்பா என்னைக் கண்டுக்காமப் போற?’னு சொல்லி டார்ச்சர் கொடுத்திருக்கார். அப்புறம் கூட்டத்தைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் மார்பில் கைவைத்து இருக்கிறார். பதறிப்போன அந்தப் பெண் அங்கிருந்து தப்பி ஓடிய தகவலை என்னிடம் சொன்னார். நான் சில மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் டியூசன் எடுக்கிறேன். விஷயத்தை அவர்களிடம் விசாரித்தேன். அதற்குப் பிறகுதான் அனைவரும் தைரியமாக உண்மையைச் சொன்னார்கள். உடனே ஸ்கூல் ஹெட்மாஸ்டரிடம், 'ஏன் இப்படி அநியாயத்தைக் கண்டுக்காம இருக்கீங்க?’னு சத்தம் போட்டேன். பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து நியாயம் கேட்கப் போனோம். நாங்கள் பள்ளிக்குப் போன நேரத்தில் வில்சன் இல்லை. நித்திரன் மட்டும் இருந்தார். ஆத்திரம் அடைந்த சிலர் அவரைத் தாக்கினார்கள். இவ்வளவு நடந்த பிறகும் பள்ளியில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. '' என்று உணர்ச்சிவசப்பட்டார்.
பாதிக்கப்பட்ட மாணவி களை சந்தித்தோம். ''அண்ணா... அவங்க தொட்டுத் தொட்டுத்தான் பேசுவாங்க. அப்புறம் கன்னத்தைக் கிள்ளுவாங்க. இடுப்பில் கை வைப்பாங்க!'' என்று சொல் லும்போதே கண்ணீர் சிந்தினர்.
பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெஸ்ஸி அருணிடம் பேசினோம். ''இதுவரை இரண்டு ஆசிரியர்கள் மீதும் என்னிடம் புகார் வரவில்லை. நான் மாணவிகளிடம் நன்றாகப் பேசுவேன். அவர்கள் யாரும் என்னிடம் புகார் சொன்னதும் இல்லை. அந்த ஆசிரியர்கள் இருவரும் கொஞ்சம் கடுமையாகத் திட்டுவார்கள் என்பது தெரியும். விசாரித்து நடவடிக்கை எடுப்போம்'' என்று சொன்னார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நித்திரன், விவகாரம் வில்லங்கமானதை அடுத்து தலைமறைவாகி விட்டார். வில்சனையும் தொடர்பு கொள்ள இயலவில்லை என்பதால் அவர்கள் கருத்துக்களை அறிய இயலவில்லை.
இந்தப்புகார் குறித்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செங் குட்டுவனிடம் பேசினோம். ''பள்ளி மாணவிகளிடம் இருந்து புகார் வந்ததுமே, பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தேன். ஆதி திராவிடர் பள்ளி என்பதால் எங்களது கட்டுப்பாட்டில் இது வரவில்லை. ஆனாலும், புகார்களை பள்ளியின் நேரடிப்பொறுப்பான மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்துக்கு அனுப்பி உள்ளோம்'' என்றார்.
மாவட்ட உதவி ஆதி திராவிட கல்வி அலுவலர் மணிமேகலையிடம் பேசினோம். ''எங்கள் தலைமை அலுவலகத்துக்குப் புகார் அனுப்பி உள்ளோம். தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
மாணவிகளின் வாழ்க்கையோடு விளையாடிய ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்!

No comments:

Post a Comment