Monday, October 8, 2012

ஆன்லைனை அடுத்து ஏர்டெல் மோசடி! தொடரும் ஈரோடு ஏமாற்றங்கள்


குத்தறிவின் பிறப்பிடமாக வர்ணிக்கப்படும் ஈரோடு, இப்போது மோசடிகளின் தலைநகராக மாறிவருகிறது. ஈமுவில் ஆரம்பித்த மோசடி ஆன்லைனில் முடிந்தது என்று நினைத்தால், இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் பேரில் ஒரு புது மோசடி முளைத்திருக்கிறது. 
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த பொழிய பாளையத்தைச் சேர்ந்த பாலகுமார், ''எங்க ஊரைச் சேர்ந்த வெள்ளங்கிரி அவரது மைத்துனர் தேவராஜ் இருவரும் ஓர் ஆண்டுக்கு முன் எங்களைச் சந்தித்து 'நாங்கள் புரோகான் அட்வைஸரி சர்வீஸ் இந்தியா என்ற நிறுவனத்தின் முகவராக இருக்கிறோம். இது ஏர்டெல் நிறுவனத்தின் கிளை நிறுவனம். இதில் ஒரு லட்ச ரூபாய் பணம் போட்டால், மாதம் 3,500 ரூபாய் வட்டியாகக் கிடைக்கும். எப்போது வேண்டுமானாலும் அசலைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். மற்ற நிறுவனங்களைப் போல அதிகமாக வட்டி தருவோம் என்று உங்களை ஏமாற்றவில்லை. வெளியில் நியாயமாக உங்களுக்கு என்ன வட்டி கிடைக்குமோ, அதே அளவுதான் தருகிறோம். அதனால் நீங்கள் பணத்தை நம்பிக்கையோடு கட்டலாம். எங்கள் நிறுவனத்தின் ஒரு பங்குதாரர் உலகக் கோடீஸ்வரரான லட்சுமி மிட்டல்’ என்று கூறினார்.
சரி, நல்ல நிறுவனம்தான் என்று நான் முதலில் ஆறு லட்சம் ரூபாய் போட்டேன். பணம் போட்ட தற்கு ரசீதும் ஒரு பாண்டு பத்திரமும் தந்தனர். அந்தப் பத்திரத்தில் தமிழக அரசின் சார் கருவூலஅலுவலகத்தின் முத்திரை இருந்ததால் எங்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டது. அதனால், பலரும் பணம் போட்டனர். ஒரு வருடம் சரியாக வட்டி வீடு தேடி வந்தது. சிலர் நடுவில் பணத்தைத் திருப்பிக் கேட்டபோதும்... உடனே திருப்பிக் கொடுத்தனர். அதனால், நம்பிக்கை இன்னும் அதிகரித்தது. இரண்டு மாதங்களுக்கு முன், என் காட்டை விற்று, மேலும் 10 லட்ச ரூபாயைப் போட்டேன். அதன் பிறகு, வட்டிப் பணம் வரவில்லை. கேட்டதற்கு ஏதோ பிசினஸ் சிக்கல் என்று காரணம் கூறினர். சரி, அடுத்த மாதம் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால், மூன்று மாதங்கள் ஆகியும் யாருக்கும் பணம் வரவில்லை. கடந்த ஆறு மாதங்களாகப் பணம் கட்டியவர்களுக்குப் பத்திரமோ, ரசீதோ தரவில்லை. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் இருந்து எங்கள் அனைவருக்கும் ஓர் அறிக்கை வந்தது. அதில், 'வெள்ளங்கிரி என்பவர், தான் திவால் ஆகிவிட்டதாக அறிவிக்கக் கோரி மனு செய்து இருப்பதாகவும் அவருக்குப் பணம் கொடுத்த நீங்கள் வரும் 29-ம் தேதி நீதிமன்றம் வந்து தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்’ என்று அதில் கூறப்பட்டு இருந்தது. எங்களுக்கு இடி இறங்கியது போல இருந்தது. இந்த நிறுவனத்தில் எங்கள் ஊரில் மட்டும் சுமார் 400 பேர் எட்டுக் கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருக்கிறார்கள். விவசாயம் பொய்த்துப் போனதால் வாழ வழி இல்லாமல்தான் இப்படி பணத்தை முதலீடு செய்தோம். இப்போது வீதிக்கு வந்து நிற்கிறோம்'' என்று கலங்கினார்.
அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், ''சொந்த ஊர்க்காரர். சின்ன வயதில் இருந்து பார்த்துப் பழகி இருக்கிறோம் என்ற நம்பிக்கையில்தான் பணத்தைப் போட்டோம். நாங்கள் போடும் பணத்தில் 'தங்கம், வெள்ளி, பித்தளை, எண்ணெய் போன்றவற்றில் அந்த நிறுவனம் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாபத்தில் அவர்களுக்கு உண்டான கமிஷனை எடுத்துக்கொண்டு வட்டி தருவதாகக் கூறினார்கள். பிசினஸ் மூலமாகக் கிடைக்கும் பங்கு என்பதால் அதில் ஏமாற்று இருக்காது என்று நம்பி, நான்கு லட்சம் ரூபாய் போட்டேன். ஒரு மாதம் 14,000 ரூபாய் வட்டியாகத் தந்தார்கள். அதன் பிறகு, பணம் வரவில்லை. மஞ்சள் விவ சாயத்தில் லாபம் கிடைக்கவில்லை என் பதால், காட்டை விற்றுப் போட்ட பணம் இப்படிப் பாழாகிவிட்டது'' என்றார் சோகமாக.
கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள இந்த நிறுவனத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால், வெள் ளங்கிரி, தேவராஜ் ஆகியோரைக் கைது செய்த போலீஸார் ஈரோடு எஸ்.பி. அலு வலகத்துக்கு அனுப்பி வைத்தனர். 'தான் திவால் ஆனதாக அறிவிக்கக்கோரி நீதி மன்றத்தில் மனு செய்து உள்ளதால், வழக்கு முடியும் வரை என்னைக் கைதுசெய்யக் கூடாது’ என்று, நீதிமன்றம் வழங்கிய உத்தர வைக் காண்பித்து, அவர்கள் உடனே வெளியே வந்துவிட்டனர்.
இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி. பொன்னி, ''புகார்கள் பெறப்பட்டு வருகிறது. விசாரித்து வருகிறோம். ஆதாரம் கிடைத்த பிறகு யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் கைது செய்யப்படுவார்கள்'' என்றார்.
இந்தநிலையில், சென்னையைச் சேர்ந்த புரோகான் நிறுவனத்தினர், 'வெள்ளங்கிரி தங்கள் நிறுவனத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி இருப்பதாகவும், அவருக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றும் தெரிவித்து உள்ளனர்.
ஏமாந்துபோவதை நம் மக்கள் எப்போதுதான் நிறுத்து வார்களோ?

No comments:

Post a Comment