Wednesday, October 17, 2012

என்னுடைய நெஞ்சைத்திறந்து பார்த்தால், அதில் வைகோவின் உருவம்தான் தெரியும். நாஞ்சில் சம்பத்


மைக் முன் வந்தார் நாஞ்சில் சம்பத்... ஆரம்பமே பத்திரிகை செய்திகளுக்கான விளக்கமாகத்தான் இருந்தது. ''செயற்கையாகத் திணிக்கப்பட்ட இந்தச் சூழலில், எந்த எதிர்பார்ப்பும் இன்றி கடமை ஆற்று கின்ற கர்மயோகியான என்னைக் குறிவைத்தே சில பத்திரிகைகள் காயப்படுத்துகின்றன. இந்த நேரத்தில், கொஞ்சநாள் பேசாமல் இருப்பதுதான் நல்லது என்று கருதினேன். ஆனால், பேசாமல் இருந்தால்கூட, அது செய்திகளைத் திரித்து வெளியிட ஏதுவாக இருக்குமே என்பதால், பேசிவிடுவதுதான் நல்லது என்று வந்திருக்கிறேன். புண்ணாகிக்கிடந்த நெஞ்சுக்கு நாங்கள் மருந்து 
போடுகிறோம் என்று சொல்லி மிகக்குறுகிய காலத்தில் இந்த மேடையை அமைத்துத் தந்த கண்ணின் மணிகளுக்கு என் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பின், உங்கள் முன் நான் நிறுத்தப்பட்டு இருக்கிறேன். ராமாயணத்தில் பழி சுமக்கும் பாத்திரம் பரதன். ராமன் காட்டுக்குப் போனதற்கு பரதன் காரணம் அல்ல. தசரதன் செத்துப்போனதற்கு பரதன் காரணம் அல்ல. ஆனால், பழி அவன் மீது விழுந்தது. அந்தப் பழிக்காக பரதன் என்றைக்கும் கவலைப்பட்டது இல்லை. தன் தலையில் சூட்டப்பட்ட மகுடத்தைக்கூட தன் அண்ணனுக்குத் தாரைவார்த்துக் கொடுத்து, தனது கடைசிகாலம்வரை ராமனுடன் விசுவாசமாக இருந்த பரதன் சாகவில்லை. வைகோவின் இயக்கத்தில் நாஞ்சில் சம்பத்தின் வடிவத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். என்னுடைய நெஞ்சைத்திறந்து பார்த்தால், அதில் வைகோவின் உருவம்தான் தெரியும். என்னுடைய 18 ஆண்டு கால ம.தி.மு.க-வின் பயணக் காலத்தில் என் மீது இன்றைக்கு ஒரு களங்கம் சுமத்தப்பட்டு இருக்கிறது. நான் இதற்காகக் கவலைப்படவில்லை என்றா லும், கழகத் தோழர்கள் கவலைப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான தோழர்களின் நம்பிக்கையும் கண்ணீரும் ஒற்றுமையும் அவர்களை எல்லாம் இணைத்து வைத்திருக்கிற பந்தபாசமும்தான் இந்த இயக்கத்தின் பலம். அந்த பந்தபாசம் சிதறிப்போவதற்கு நாஞ்சில் சம்பத் எப்போதும் காரணமாக இருக்க மாட்டான்.
ஒரு தராசுத் தட்டில் என் அன்னை, தந்தை, காதல் மனைவி, பிள்ளைச் செல்வங்கள், ரத்த சொந்தங்கள் என எல்லோரையும் வைத்து, மற்றொரு தட்டில் ம.தி.மு.க-வை வைத்து இரண்டில் எது வேண்டும் எனக் கேட்டால், ம.தி.மு.க. இருக்கும் தட்டை அடையாளம் காட்டுபவன் நான். களங்கம் சுமத்துவோர், சேற்றை வாரி வீசுவோர் கவலைப்படும் வகையில் நாளைய நிகழ்வுகள் நடக்கும்.
கல்லில் (கிரானைட்), செல்லில், கரியில் காசு அடித்தவர்களுக்கு மத்தியில், ஸ்டெர்லைட் ஆலைக்காரன் கொடுக்க வந்த 1000 கோடி ரூபாயை வாங்க மறுத்த நேர்மையாளன் எங்கள் வைகோ. சேரன் செங்குட்டுவனைப்போல் சாஞ்சிக்குச் சென்று ராஜபக்ஷேவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர் வைகோ. அந்த நேரத்தில் நான் சீசெல்ஸுக்குப் போயிருந்தேன். அதனால் தீயைப் பற்றவைத்து விட்டனர். அது, ஏற்கெனவே ஒப்புதல் கொடுக்கப்பட்ட பயணம் என்பதால், என்னால் இதில் கலந்துகொள்ள முடியவில்லை. வெகுவிரைவில் தமிழகத்தை வழிநடத்தும் காலமும் மலரும். அதற்காக என் தலைவன் வைகோ போட்டுத்தரும் பாதையில் பயணித்து, புதைந்துபோன தமிழகத்தை மீட்டெடுப்போம்!'' என்றார் உறுதியான குரலில்!

No comments:

Post a Comment