Wednesday, October 17, 2012

சசி ஆவண வேட்டை! பெங்களூரு வழக்கில் விறுவிறு


ஜெயலலிதா மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கில், சத்தமே இல்லாமல் சடுகுடு நடக்கிறது’ என்று, பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட் வட்டாரத்தில் பேச்சு. 
சென்னை, டெல்லி, பெங்களூரு எனப் பல ஊர்களில் 16 ஆண்டுகளாக, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பயணித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூரு கோர்ட்டில் ஆஜராகி 1,384 கேள்விகளுக்குப் பதில் அளித்த ஜெயலலிதா, 'வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களிலும் முதலீடுகளிலும் நான் சைலன்ட் பார்ட்னர் மட்டுமே. அதனால், வங்கிக்கணக்கு வழக்குகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அனைத்தையும் சசிகலாதான் கவனித்து வந்தார்’ என்று எல்லா பாரத்தையும் சசிகலா தலையில் வைத்தார். தொடர்ந்து நடந்த விசாரணையில் ஜெயலலிதாவுடன் பிணக்கு ஏற்பட்டபோதும் 2-வது குற்றவாளியான சசிகலா, 'ஜெயலலிதாவுக்கும் இந்த வழக்குக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை. அரசியல் காழ்ப்புஉணர்ச்சி காரணமாக கருணாநிதிஇந்த வழக்கை புனைந்து இருக்கிறார்’ என்று எல்லாப் பொறுப்புகளையும் தானே ஏற்றுக்கொண்டார். அதனால்,  ஜெ - சசி நட்பு மீண்டும் பூத்தது.
இதுவரை, 599 கேள்விகளுக்குப் பதில்சொல்லி இருக்கும் சசிகலா, சில கேள்விகளுக்கு தவறாகவும், தெரியாது என்றும் பதில் சொன்னார். இப்படியே பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் வசமாக மாட்டிக் கொள்வோம் என அவருடைய வழக்கறிஞர்கள் அஞ்சினர். 'சொத்துக்குவிப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அத்தனையும் வங்கிக்கணக்கு வழக்குகள், புள்ளி விவரங்கள் என்பதால், கொஞ்சம் சொதப்பினால்கூட வழக்கின் தீர்ப்பே மாறிவிடும்’ என மேலிடத்திலும் எடுத்துச் சொல்லியே 'அன்மார்க்டு ஆவணங்களைப் பார்க்க வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்தனர். நீதிமன்றமும் அனுமதி அளித்தது.
இந்த நிலையில்தான், ஆவணங்களைப் பார்வையிடும் பணி தொடங்கியது. இதுகுறித்துப் பேசும் கோர்ட் வட்டாரம், ''சசிகலா தரப்பில் மணிசங்கர், சுதாகரன் தரப்பில்  மூர்த்தி ராவ், இளவரசி சார்பில் அசோகன் ஆகிய வழக்கறிஞர்களும், ஒவ்வொருவருக்கும் தலா ஒரு ஜூனியர் மற்றும் ஆடிட்டர் என மொத்தம் ஒன்பது பேர் ஆவணங்களைப் பார்க்கிறார்கள். இதைக் கண்காணிக்க தற்காலிகப் பதிவாளர் தயானந்த் என்பவரை நீதிபதி சோமராஜு நியமித்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 9-ம் தேதி காலை ஆவணங்களை சரிபார்க்க வந்தனர்.
போயஸ் கார்டன், சுதாகரன், இளவரசி ஆகியோரின் வீடு, அலுவலகம் மற்றும் நிறுவன‌ங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றிய‌ 12 நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்களைக் கொடுத்தோம். பல்வேறு இடங்களில் வைத்திருந்த பேங்க் அக்கவுன்ட் பாஸ் புக், பணம் டெபாசிட் செய்தது, செக் கொடுத்தது, பணம் எடுத்தது உள்ளிட்ட விவரங்களைக் கொடுத்தோம். ஆவணங்களை ஜெராக்ஸ் எடுக்கவோ, வெளியே கொண்டுசெல்லவோ அனுமதிக்காமல் கண்காணிப்புக்கு மேலும் கோர்ட் ஊழியர்களையும் ஈடுபடுத்தி இருந்தோம். நாங்கள் கொடுத்த ஆவணங்களில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை, ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சசி என்டர்பிரைசஸ், ரிவர்வே பிரைவேட் லிமிடெட், அக்ரோ பிரைவேட் லிமிடெட், மெட்டல் கிங் பிரைவேட் ஆகிய நிறுவனங்களின் ஆவணங்களை பலமுறை சல்லடை போட்டு அலசி, குறிப்பு எடுத்துக்கொண்டனர்.  ஒரு கட்டத்தில், 'வேறுசில ஆவணங்களையும் பார்க்க வேண்டும். இந்த ஆவணங்களைப் பார்க்கப் போதுமான கால அவகாசம் கொடுக்கப்படவில்லை’ என்றனர். இந்த வழக்கு சம்பந்தப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் 11 பீரோக்களில் இருக்கின்றன.. இப்போது, நீதிமன்றம் உங்களுக்குக் கொடுக்கச் சொன்ன ஆவணங்களை மட்டுமே தர முடியும்’ எனப் பதிவாளர் கறாராகச் சொல்லிவிட்டார். இதனால், கோபமடைந்த சசிகலாவின் வழக்கறிஞர்கள், 'இவ்வளவு ஆவணங்களை எப்படி 21 நாட்களில் பார்க்க முடியும்? இதில் ஆயுதபூஜை, விஜயதசமி என்று ஒன்பது நாட்கள் விடுமுறை வேறு வருகிறது. எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அவகாசம் போதுமானதாக இல்லை. கூடிய விரைவில், அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்க அனுமதிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் மனுப்போட்டு வந்து அனைத்தையும் பார்க்கப் போகிறோம்’ என்று பேசிக்கொண்டனர். சசிகலா தரப்பினர் ஆவணங்களை சல்லடை போடுவதைப் பார்த்தால், இனிமேல்தான் விவாதம் சூடு பிடிக்கும்போல் தெரிகிறது'' என்கிறது.
''நீதிபதி சோமராஜு மிகவும் கண்டிப் பானவர். எப்பேர்ப்பட்டவழக்காக இருந் தாலும் விசாரித்து ஆறே மாதங் களில் அதிரடித் தீர்ப்பை வழங்கி விடுவார். அவருடைய தீர்ப்புகள் அத் தனையும் வழக்கின் ஆவணங்களை அடிப் படையாகக் கொண்டதாக இருக்கும்'' என்று கிலி கிளப்பும் கோர்ட் வட்டாரம், ''சசிகலா தரப்பில் இதுவரை போடப்பட்ட அத்தனை மனுக்களையும் டிஸ்மிஸ் செய்த நீதிமன்றம், ஆவணங்களை சரிபார்ப்பதற்காக போடப்பட்ட மனுவை மட்டும் ஏற்றுக் கொண்டு இருக் கிறது. தங்களுக்குக் கிடைத் திருக்கும் இந்த ஒரே துருப்புச்சீட்டை நிச்சயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தீவிரத்தில் இருக்கிறார்கள்'' என்று சொல்கிறது.
வங்கிக்கணக்கு வழக்குகள் எல்லாமே சசிகலாவுக்குத் தெரியும் என்பதை நிரூபிக்கும் வகையில் பதில்கள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அத்தனை பேரும் மெனக்கெட்டு ஆவணங்களைப் பார்க் கிறார்களாம்!

No comments:

Post a Comment