Thursday, October 18, 2012

தமிழர்களை புறக்கணித்துவிட்டு, வடமாநிலத்தவர்களை ஆதரிக்கும் இடுக்கி தேயிலை தோட்ட உரிமையாளர்கள்.



இடுக்கி மாவட்டத்தில் உள்ள பீர்மேடு, தேவி குளம் தாலுக்காக்களை தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்பது அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழர்களின் நீண்ட கால கோரிக்கை. அதை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது, அந்தப் பகுதிகளில் உள்ள தேயிலை எஸ்டேட்களில், வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை இறக்குமதி செய்து வேலைகள் வழங்கப்படவே, கூலி வேலை செய்யும் தமிழர்கள் 'மைனாரிட்டி’ பயத்தில் நடுங்குகிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இடுக்கி மாவட்டச் செயலாளர் ஜெயபால், ''இடுக்கி மாவட்டத்தில் உள்ள உடும்பன்சோலை, பீர்மேடு, தேவிகுளம் தாலுக்காக்களில் உள்ள 60 சதவிகித எஸ் டேட்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவை. இங்கு பல தலைமுறைகளாக 90 சதவிகிதத் தமிழர்கள் எஸ்டேட்டில் தங்கி வேலை பார்க்கிறார்கள். முல்லை பெரியாறு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தவுடன் முதலில் பாதிக் கப்பட்டவர்கள் இங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள்தான். அதனால்தான், 'தமிழகத்தோடு இடுக்கி மாவட்டத்தைச் சேர்த்திடு’ என்று தன்னெழுச்சியாக சாலைக்கு வந்து போராடினர்.



உடனே, இந்த விவகாரத்தில் களம் இறங்கிய உளவுத் துறை, 'இடுக்கி மாவட் டத்தில் உள்ள எஸ்டேட் தொழிலாளர் களான தமிழர்களைப் படிப்படியாகக் குறைத்தால் மட்டுமே, இந்தக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்ய முடியும்’ என்று அறிக்கை தாக்கல் செய்தது. அதைத்தொடர்ந்துதான், தொழிற்சங்கத்தினர் மூலம் எஸ்டேட் குடியிருப்பில் தங்கி பணிபுரியும் ஆயிரக்கணக்கான தமிழர்களை வேலையில் இருந்து விரட்டிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக வட மாநிலத்தவரை அதிகஅளவில் பணியில் சேர்க் கிறார்கள்'' என்றார் வேதனையுடன்.

எஸ்டேட் உரிமையாளர்கள் சிலரிடம் பேசிய போது, ''தமிழகத்தில் இருந்து கூலி ஆட்களை தினமும் ஜீப்பில் அழைத்து வருவதோடு ஒரு நாளைக்கு 340 ரூபாய் சம்பளம் தர வேண்டும். தமிழர்கள் ஆறு மணி நேரம்தான் வேலை செய்வார்கள். ஆனால், வட மாநிலத்தவர்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வரை உழைக்கிறார்கள். அவர்களுக்குச் சாப்பாடு போட்டு 140 ரூபாய் சம்பளம் கொடுத்தாலே போதும். சம்பளம் ஒரு பக்கம் இருந்தாலும், கேரளத்தைப் பொறுத்தவரை தொழிற்சங்கங்களை மீறி எதையும் செய்ய முடியாது. அவர்கள் உத்தரவுப்படிதான் வட மாநிலத்தவர்களை வேலைக்குக் கொண்டு வந்துள்ளோம்'' என்றனர்.

உடுமன்சோலை எம்.எல்.ஏ. ஜெயச்சந்திரனிடம் (சி.பி.எம்.) பேசியபோது, ''தொழிலாளர் பற்றாக் குறையால் வடமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறோம். அதை வைத்து இங்கு உள்ள தமிழர்களை நாங்கள் வெளியேற்றத் திட்டம் போடுகிறோம் என்று சொல்லக் கூடாது'' என்றார் சுருக்கமாக.

ஆனால், தினம் தினம் வடமாநிலத் தவர்கள் வந்து இறங்கிக்கொண்டே இருக்கிறார்கள் இன்னும் இன்னும் அதிகமாக!

No comments:

Post a Comment