Monday, October 1, 2012

'இல்லைன்னா நடக்கிறதே வேற'' மிரட்டினாரா கே.என்.நேரு? பாய்ந்தது 11-வது வழக்கு!


விடாது கறுப்பு போல, தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது மீண்டும் ஒரு நில அபகரிப்பு வழக்கு! 
அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த சதுகவேல் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளது. நம்மிடம் பேசினார் சதுகவேல். ''எனக்கு முடிகொண்டான் கிராமத்தில் 17 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதை, 2005-ம் ஆண்டு 50 லட்ச ரூபாய்க்கு வாங்குவதாக, நேருவின் உறவுக்காரரான கீழபழுவூரைச் சேர்ந்த செல்வராஜ் ஒப்பந்தம் போட்டார். ஆனால், ஒப்பந்த காலத்துக்குள் அவரால் பணம் கொடுக்க முடியவில்லை. நிச்சயம் நிலத்தை வாங்கிக்கொள்வதாகச் சொல்லி அடுத்தடுத்து இரண்டு முறை ஒப்பந்தம் போட்டார். ஆனாலும், அவரால் பணம் கொடுத்து நிலத்தை வாங்க முடியவில்லை. 2008-ம் ஆண்டு, அப்போதைய நில மதிப்புப்படி ஐந்து கோடி ரூபாய்க்கு என் நிலத்தை வெளியில் விற்க ஏற்பாடு செய்தேன். இதைத் தெரிந்துகொண்ட செல்வராஜ், முன்பு பேசியபடி 50 லட்சம் ரூபாய்க்கு நிலத்தை எழுதிக் கொடுக்க என்னைக் கட்டாயப்படுத்தினார். அதற்கு நான், 'இப்போதைய நில மதிப்புப்படி ஐந்து கோடி ரூபாய். அதைக் கொடுத்தால் நிலத்தைக் கொடுக்கிறேன்’ என்று சொன்னேன்.
அதன்பிறகு, சில நாட்களில் செல்வராஜின் செல்போனில் இருந்து என்னிடம் பேசிய முன்​னாள் அமைச்சர் நேரு, 'ஒழுங்கா 50 லட்ச ரூபாய் வாங்கிட்டு நிலத்தை எழுதிக் கொடுத்துடு. இல்லைன்னா, உன்னையும் உன் குடும்பத்தையும் இருக்கிற இடம் தெரியாமப் பண்ணிடுவேன்’என்று மிரட்டினார். 'அண்ணா... எது பேசினாலும் கோர்ட்ல பேசிக்கங்க’ன்னு சொல்லி நான் போனை வைத்து​விட்டேன். ஒரு நாள் இரவு சில ரவுடிகள் என் வீட்டுக்கு வந்து, 'நாங்க சொல்ற நாளில் நிலத்தை எழுதிக் கொடுக்கணும். இல்லைன்னா நடக்கிறதே வேற’னு கடுமையா மிரட்டினாங்க. அவங்களோட மிரட்டலுக்குப் பயந்து 2008 ஜூன் மாசம் 8-ம் தேதி செல்வராஜின் மனைவி விஜயலெட்சுமி பேருக்கு 50 லட்சம் ரூபாய்க்கு நிலத்தை எழுதிக் கொடுத்தேன். அதில் ஏற்பட்ட மனஉளைச்சலால், உடல்நிலை பாதிக்கப்பட்டு மூன்று வருடங்களாக பெரம்பலூரில் இருக்கும் என் தங்கச்சி வீட்டிலேயே தங்கி விட்டேன்.
உடல்நிலை தேறி ஐந்து மாதங்களுக்கு முன்புதான் ஊருக்கு வந்தேன். ஜூலை முதல் வாரத்தில் அரி யலூர் எஸ்.பி-யிடம் எனக்கு நியாயம் கேட்டு மனு கொடுத்தேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தேன். என் மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி-க்கு கடந்த 21-ம் தேதி உத்தர​விட்டார். அதன்படி செல்வராஜ், அவரது மனைவி விஜயலட்சுமி, முன்னாள் அமைச்சர் நேரு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது காவல் துறை. இப்போதுதான், எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை வந்​திருக்​கிறது'' என்றார் தெம்பாக.  
இதுகுறித்து கருத்து அறிய நேருவையும், அவருடைய உறவினர் கீழபழுவூர் செல்வராஜையும் செல்​போனில் தொ​டர்பு​கொண்டோம். தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருந்தனர்.
நேருவின் வழக்கறிஞர் பாஸ்கரனைத் தொடர்பு கொண்டோம். ''கோர்ட்டில் எஃப்.ஐ.ஆர். நகல் பெறுவதற்கு விண்ணப்பித்து இருக்கிறோம். அது இன்னும் கிடைக்கவில்லை. அதனால், வழக்கின் தன்மை குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. எதையும் சட்டப்படி சந்திப்போம்'' என்றார்.
''தம்பி ராமஜெயத்தின் மறைவுக்குப் பிறகு அமைதியாக இருந்த கே.என்.நேரு சமீபத்தில் மீண்டும் வீறுகொண்டு எழுந்தார். கடந்த வாரத்தில் திருவெறும்பூரில் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டி முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். கடந்த 21-ம் தேதியன்று உடன்பிறப்புக்களை உசுப்பிவிட்டு மாவட்ட நிர்வாகத்தின் குளறுபடிகளைக் கண்டித்தும், தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை உடனே செயல்படுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். 22-ம் தேதி ராமஜெயத்தின் பிறந்த நாள் தி.மு.க. தொண்டர்களால் திருச்சியில் இருக்கும் கலைஞர் அறிவாலயத்தில் கொண்டாடப்பட்டது. 25-ம் தேதி கட்சியின் முக்கியப் பிரமுகர்களை கட்சியின் புதிய அலுவலகத்துக்கு வரவழைத்த நேரு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சியைக் கைப் பற்றுவதற்கான வியூகங்கள் பற்றியும் பேசி இருக்கிறார். இவை எல்லாம் ஆட்சி மேலிடத்துக்குப் போகவே... நேருவின் வேகத்தைக் கட்டுப்படுத்த இந்தப் புதிய வழக்கைப் பாய்ச்சி உள்ளனர்'' என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரத்தினர்.
நேரு மீது ஏற்கெனவே 10 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இது அவருக்கு 11-வது வழக்கு. நேரு கைது செய்யப்பட்டால், வீரபாண்டி ஆறுமுகத்தின் மேல் போடப்பட்டதைப் போலவே குண்டர் சட்டம் பாயும். அதனால், நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை அவரால் வெளியே வர முடியாது என்றும் ஒரு தகவல் காவல்துறை வட்டாரத்தில் உலா வருகிறது!

No comments:

Post a Comment