Thursday, October 18, 2012

அரிசி ஆலைக்காக ஆக்கிரமித்தார்! நேருவின் மீது தொடரும் அதிரட


அரிசி ஆலைக்காக ஆக்கிரமித்தார்!    நேருவின் மீது தொடரும் அதிரட

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது சட்டத்தைத் தனக்கு சாதகமாக வளைப்பவர்கள், அதிகாரத்தையும் ஆட்சியையும் இழக்கும்போது, அதே சட்டத்தால் வளைக்கப்படுவது உண்டு. அப்படி ஒரு நிகழ்வு, கடந்த 14-ம் தேதி திருச்சியில் நடந்தது.

லால்குடி அருகே உள்ள பூவாளூரில் நாள் ஒன்றுக்கு 200 டன் நெல்லை அரைக்கக்கூடிய அதிநவீன அரிசி ஆலை 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. 'எஸ்.என்.ஆர். மாடர்ன் ரைஸ் மில்’ என்ற பெயர்கொண்ட இந்த ஆலையை முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி மணிவண்ணன் கவனித்துக்கொண்டார். இந்த ஆலையின் முன், பங்குனி வாய்க்கால் என்ற பாசன வாய்க்கால் ஓடுகிறது. ஆலையின் முன்புறத் தோற் றத்தைப் பாதிக்கும் விதமாக இந்த வாய்க்கால் அமைந்திருப்பதாகக் கருதிய நேரு தம்பியின் தரப்பினர், வாய்க்காலின் ரூட்டையே மாற்றியதாக அப்போதே புகார் எழுந்தது.

வாய்க்காலின் 1,200 சதுர மீட்டர் இடத்தை எடுத்துக்கொண்டு அதற்கு பதிலாக வாய்க்காலின் தெற்குப் பகுதியில் 1,200 சதுர மீட்டர் இடத்தை வழங்கி நிலப்பரிவர்த்தனை செய்து ஒப்பந்தம் போட்டு உள்ளனர். நீர்நிலைப் புறம்போக்கு நிலத்தை பரிவர்த்தனை செய்து கொண்டதால் அதை நில சீர்திருத்தத் துறைக்கு ஒப்புதல் பெற அனுப்பி உள்ளனர். அங்கே ஒப்புதல் கிடைப்பதற்குள் தேர்தல் வந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.

நேரு அமைச்சராக இருந்தபோது உள்ளூர் பிரமுகர் ஒருவர், மனைவிக்கு வேலை கேட்டு அணுகினாராம். வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி அவர் ஏமாற்றப்பட்டாராம். அவர்தான், சமயம் பார்த்து இந்த விஷயத்தை அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்தாராம். உடனே, நிலச்சீர்திருத்தத் துறையில் இத்தனை நாட்களும் தூங்கிக்கொண்டிருந்த ஃபைல் தூசி தட்டி எடுக்கப்பட்டது. மூன்று நாட்களாக வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்திய கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு நேரம் குறித்தார். நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றுவிட அவகாசம் தரக்கூடாது என்ற எண்ணத்தில்தான் விடுமுறை தினத்தைத் தேர்வு செய்தனர்.

அக்டோபர் 14-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறையினர் அந்த ரைஸ் மில்லை முற்றுகை இட்டனர். நிலஅளவைப் பிரிவு ஊழியர்கள், நிலஅமைவு வரைபடத்தை வைத்து அளந்து ஆக்கி ரமிக்கப்பட்ட பகுதியை 'மார்க்’ செய்ததும், ஜே.சி.பி இயந்திரங்களைக்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்களை இடிக்க ஆரம்பித்தனர்.

''இந்த ஆலை மறுபடியும் செயல்படுவதற்கு பல மாதங்கள் ஆகலாம். தவிடு, குருணை, அரிசி விற்பனை மூலம் நாளன்றுக்கு ஐந்து லட்ச ரூபாய் லாபம் சம்பாதித்துக் கொடுத்த இந்த ஆலை முடக்கப்பட்டதால், நேருவுக்கு பொருளாதார ரீதியாக நஷ்டம்'' என்கின்றனர் விஷயம் தெரிந் தவர்கள்.

ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தொடங்கியபோது, தி.மு.க-வினர் சிலர் கூச்சல் போட்டனர். சாலை மறியல் செய்யவும் தயார் ஆனார்கள். ஆனால், நேரு தடுத்து விட்டார். கொலை செய்யப்பட்ட நேருவின் தம்பி ராமஜெயம்தான், இந்த ஆலையைப் பார்த்துபார்த்து நுணுக்கமாகக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தாராம். ஆனால், அவர் மறைந்த பிறகு இந்த ஆலையை இடிக்க ராமஜெயம் என்ற பெயரில் அமைந்த ஒரு நிறுவனத்தின் கிரேன், பொக்லைன்கள் பயன்படுத்தப்பட்டன. இடிப்புப் பணி ஜெனரேட்டர் உதவியுடன் இரவிலும் தொடர்ந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியிடம் பேசினோம். ''நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டடம் கட்டியதால், அதை அப்புறப்படுத்துகிறோம். நீர்நிலை, நீர்நிலைப் புறம்போக்கு ஆகியவற்றைப் பரிவர்த்தனை செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் சுப்ரீம் கோர்ட் வகுத்த விதிமுறைகளின்படி அது செல்லாது'' என்றார் சுருக்கமாக.

நேருவின் வழக்கறிஞர் ஓம்பிரகாஷிடம் பேசினோம். ''இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருச்சி மாவட்ட கலெக்டர் அனுமதியுடன் நிலப் பரிவர்த்தனை செய்து 1,200 ச.மீ இடம் வாங்கப் பட்டது. இந்தப் பரிவர்த்தனை தொடர்பான ஆவ ணங்கள் ஒப்புதல் பெறுவதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில், அதிகாரிகள் திடீரென வந்து 'ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம்’ என்று ஆலையை இடித்து சேதப்படுத்துகிறார்கள். இது, முழுக்க முழுக்க நேரு குடும்பத்தினர் மீது எடுக் கப்படும் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை. இதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்'' என்றார் ஆவேசமாக.

திங்கள்கிழமை காலையில் முழுமையாக இடித்து முடித்து விட்ட நிலையில், அன்றைய தினம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த நடவடிக்கைக்குத் தடை விதித்தது. மேல்விசாரணைக்காக தாசில்தாரை ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

எந்த வழக்குக்காக என்று தெரியாமலேயே ஓட ஆரம்பித்து இருக்கிறார் நேரு!

No comments:

Post a Comment