Saturday, April 21, 2012

ஜகம் நீ... அகம் நீ..! - 5


சிகாகோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான மில்டன் சிங்கர் என்பவரும் மகாபெரியவாளை தரிசித்துள்ளார். அந்தச் சந்திப்பு குறித்து சிகாகோ பல்கலைக்கழக வெளியீடான, 'ஒரு மிகப்பெரிய பாரம்பரியம் நவீனமயமாகும்போது, இந்திய நாகரிகத்தின் அணுகுமுறையில் ஒரு வரலாற்று ஆய்வு’ (When a Great Tradition Modernizes: An Anthropological Approach to Indian Civilization, University of Chicago) என்ற தொகுப்பிலும் குறிப்பிட்டுள்ளார் மில்டன். இந்தத் தகவலை சங்கர பக்தஜன சபா செயலர் வைத்தியநாதன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

மில்டன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

நான் சென்னைக்கு 1954-55 வாக்கில் வந்தபோது, பலரும் சங்கராச்சார்யர் சுவாமிகளைப் பற்றி நிறையத் தகவல்கள் தந்தனர். அதில் அவரை விமர்சித்தவர்களும் உண்டு. ஆனால், இரு சாராருமே அவர் அசாதாரண இடத்தை வகிப்பவர் என்றே கூறினர். என்னைப் பொறுத்தவரையிலும் அவரைச் சந்தித்ததும் உரையாடியதும் என் மனத்தில் நீங்கா இடம்பெற்றுவிட்டன.ஓர் அமெரிக்கனான எனக்கு, ஓர் ஆசிரமத்தின் மரத்தடியில் அமர்ந்திருக்கும் சந்நியாசி ஒருவருடன் தரையில் அமர்ந்து பேசுவதில் ஓர் ஈர்ப்பு இருப்பதாகப்பட்டது. என்னுடன் வந்தவர்கள் தரையில் விழுந்து அவரை வணங்கினார்கள்.சனாதன ஹிந்து தர்மம் குறித்து இரண்டு வருடங்கள் நான் படித்துத் தெரிந்துகொண்டதைவிட, அவருடனான உரையாடலில் இருந்து நிறைய தெரிந்து கொண்டேன். அவர், அமெரிக்க இந்தியர்களின் பழக்கவழக்கங்கள், உணவுமுறை, சரித்திரம் எல்லாவற்றையும் என்னிடம் கேட்டார். அவருடைய மனம் வெகு தெளிவாக இருந்தது. அவரிடம் நடத்திய பேட்டியை விடவும், அவரே சுவாரஸ்யமாகத் தெரிந்தார். ஹிந்து மதக் கோட்பாடுகள் தனித்துத் தெரிவதற்கு அதன் கொள்கைகளோ, அதன் அடிப்படைகளோ அல்லது ஆசாரங்களோ காரணம் அல்ல என்றார்.சமீபகாலமாக இந்தக் கொள்கைகள் எல்லாம் நீர்த்துப் போயிருப்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டினாலும், ஆன்மிகப் பற்றுக்கொண்ட பிராமணர் அல்லாதவர்கள், பிராமணர்களுடன் கைகோத்துக் கொண்டு செயல்படுவதைப் பார்க்கையில், ஹிந்து மதத்துக்கு நல்ல எதிர்காலம் இருப்பது தமக்கு புலப்படுவதாகக் கூறினார்.

ஹிந்து மதத்தின் எதிர்காலம் குறித்து சுவாமிகள் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தாலும், புத்துணர்ச்சிமிக்க அவரது உரையாடலும், மெலிதான நகைச்சுவையும், அவரது பற்றற்ற துறவு வாழ்க்கையும் வித்தியாசமாக இருந்தன. அவரை எல்லோரும் மடத்தில் வந்து பார்க்கவேண்டும் எனும் கட்டாயம் உண்டா எனக் கேட்டேன். சங்கர மடத்தைப் பொறுத்தவரை அப்படி கடுமையான நெறிமுறை எதுவும் இல்லை என்றார். ஒரு கட்டத்தில் திராவிட இயக்கம் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, 'தென்னிந்தியக் கலாசாரம் பற்றி நீங்கள் நடத்த விரும்பும் ஆய்வு, அந்த இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரையாவது பார்த்துப் பேசாவிட்டால், முழுமை ஆகாது!’ என்று ஆலோசனை கூறினார்.இந்தியாவுக்கு வருமுன், பண்டைய ஞானிகளின் ஆன்மிகத் தாக்கம் பற்றிப் படித்திருந்தாலும், அது பழங்கதை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், இங்கே வந்து சங்கராச்சார்யரைப் பார்த்த பின், அது இன்றைக்கும் இந்து மதத்தின் ஆதார சக்தியாக இருப்பதை உணர்ந்துகொண்டேன்.1954-ல் நான் சென்னைக்கு வந்தபோது, பல துறைகளைச் சேர்ந்தவர்களும் சங்கராச்சார்யர் சுவாமிகளைக் குறித்து பாராட்டுதலான செய்திகளையே தெரிவித்தார்கள். அப்போது சென்னைப் பல்கலைக்கழக சம்ஸ்கிருத பேராசிரியர் டாக்டர். வே.ராகவன் அவர்களிடம், பெரியவாளுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யமுடியுமா என்று கேட்டுக்கொண்டேன். அவர்தான் ஆசிரமத்தில் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். சுவாமிகளின் அறிவாற்றலும், இந்தியாவின் வறுமைப் பிரச்னை பற்றிய சிந்தனைகளும், தொழில் மேம்பாட்டு முயற்சிகளில் இந்து தர்மத்தின் தாக்கம் பற்றிய கருத்துக்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. ஆசிரமத்தின் மரத்தடியில் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தோம்.அவரது சீடர்களும் எங்களுடன் அமர்ந்திருந்தார்கள்.

இந்தியாவின் வறுமையை ஒழிக்க, நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் தானமாகக் கொடுக்கலாம் என்றார். சமூக நலன் சார்ந்த செயல்கள்,
ஐந்தாண்டுத் திட்டங்கள் எல்லாம் மேலும் உதவும் என்றார். அவை தவிர, இது வெறும் பொருளாதாரப் பிரச்னை மட்டும் அல்ல, ஆன்மிகம் சார்ந்த பிரச்னை என்றார். பிராமணர்களும் தொழிலாளர் வர்க்கமும் ஆடம்பர வாழ்க்கைக்கும் அயல்நாட்டுப் பொருள்களுக்கும் ஆசைப்படுவதை விட்டுவிட்டு, பாரம்பரியமான குடும்ப நடைமுறைக்கேற்ற எளிமையான வாழ்க்கை வாழ முடியுமானால், இடைப்பட்ட இரண்டு வர்க்கத்தினரால் நமது நாகரிகத்தை வளமாக்கி சிறப்பாக நிர்வாகம் செய்ய இயலும் என்றார்.
சாதி, சடங்குகள் மற்றும் ஏனைய லௌகீக விஷயங்கள் குறித்த விமா¢சனங்கள்... சரித்திர ரீதியாகக் கூறப்படுவதெல்லாம் சரியானதாக இருக்க முடியாது என்றார். ஏனெனில் இந்தியர்கள் சுறுசுறுப்பானவர்கள்; எத்தனையோ போர்களைச் சந்தித்தவர்கள்; யதார்த்த மானவர்கள்; பல கலைகளை அறிந்தவர் கள்; உலகம் அநித்தியமானது என்பது தத்துவ ரீதியான ஒரு கருத்து என்பதை அறிந்தே இருக்கிறோம். அதற்காக நாம் செய்ய வேண்டிய செயல்களில் ஈடுபடாமல் இருந்துவிடுவதில்லை. உணவை உட்கொண்டால்தான் உயிர்வாழ முடியும் என்பதை நம்புகிறோம். அதனால்தான் உணவு உட்கொள்வதை நாம் நிறுத்திவிடவில்லை. ஹிந்து தர்மத்தின் எதிர்காலம் இனி இம்மாதிரி பழம் சிந்தனைகளை நம்பி இல்லை. ஹிந்து தர்மம் அதன் சமூக அஸ்திவாரத் தில்தான் நிலைத்து நிற்கும். எப்படித் தெரியுமா? பிராமணர் அல்லாதவரும்கூட தமது பாரம்பரியக் குடும்பப் பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் போதும். அந்த அஸ்திவாரம் நிலைத்து நிற்கும். அப்படித் தொடர்ந்து செய்யப்படுமானால், ஒரு தொழிலதிபர்கூட சிறந்த ஹிந்துவாக இருக்க முடியும் என்றார்.

மகாசுவாமிகளுடைய சொந்த வாழ்க்கையைப் பொறுத்தமட்டில், அவர் எளிமையான உணவே உட்கொள்கிறார். அதிலேயே அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். அவர் நூறாண்டுகள் வாழ்வதைக் கொண்டாடும் சமயத்தில், யார்தான் இதைச் சந்தேகிக்க முடியும்?!

- என்கிறது மில்டன் சிங்கரின் அந்தக் கட்டுரைக் குறிப்பு!

No comments:

Post a Comment