இத்தனை நாட்களாகக் கனவு கண்ட இந்தியாவைக் கண்டுவிட்ட சந்தோஷத்தில் குதித்தார் வாஸ்கோடகாமா. அது, கண்ணனூர் என்னும் காலிகட் துறைமுகம் அருகில் இருக்கிறது என்று அறிந்துகொண்டார். காலிகட் மன்னர் சாமோரினை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு பாவ்லோவையும் கறுப்பு மூர் ஒருவனையும் அனுப்பிவைத்தார். அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்ட மன்னர், அவர்கள் அரபு உளவாளிகள் என்று சந்தேகித்தார். வாஸ்கோடகாமாவே அரண்மனைக்குச் சென்றார். அவரை யாரும் வரவேற்கவில்லை. போர்த்துக்கீசிய மன்னரிடம் இருந்து கடிதம் கொண்டுவந்து இருப்பதாகச் சொன்னார் வாஸ்கோடகாமா. அதன்பிறகுதான், மன்னரைச் சந்திக்க ஏற்பாடு ஆனது. மன்னருக்கு முன் தலைகுனிந்து நிற்க வேண்டும். ஆசனத்தில் உட்காரக் கூடாது. கை நீட்டிப் பேசக் கூடாது என்ற நிபந்தனைகளுடன், அரண்மனைக்குள் அனுமதிக்கப்பட்டார் வாஸ்கோடகாமா.சாமோரின் மன்னர், வாஸ்கோடகாமாவை வரவேற்று போர்ச்சுக்கல் மன்னரின் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். அரண்மனையின் அறை ஒன்றில் தங்கி இருக்க வாஸ்கோடகாமாவுக்கு உத்தரவு இட்டார் மன்னர். இதற்கிடையில், போர்த்துக்கீசியர்கள் மன்னருக்கு எதிராக சதி செய்ய வந்தவர்கள் என்று மன்னரை நம்பவைத்து, வாஸ்கோடகாமாவைக் கைது செய்ய ரகசிய ஏற்பாடு நடந்தது. எதிர்பாராமல் வாஸ்கோடகாமா கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கப்பல்கள் சிறைப்பிடிக்கப்பட்டன.
தாங்கள் உளவாளிகள் இல்லை என்று நிரூபிக்க வாஸ்கோடகாமா போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. முடிவில், மூன்று கப்பல்களும் உடனே கிளம்பிச் செல்ல வேண்டும் என்ற எச்சரிக்கையோடு விடுதலை செய்யப்பட்டார் வாஸ்கோடகாமா. அந்த அவமானம் அவருக்குள் ஆறாத வடு போல் உறைந்தது.அந்தக் கடல் பயணத்தில்தான் அவர்கள் கோவாவை அடைந்தனர். அங்கே, உள்நாட்டுப் பிரச்னை தலைதூக்கி இருப்பதை அறிந்து, அதை தாங்கள் தலையிட்டு முடிப்பதாக நுழைந்த வாஸ்கோடகாமா, கோவாவைத் தன் வசமாக்கிக்கொண்டார். இந்தியாவில் போர்த்துக்கீசியர்களுக்கான அடித்தளமாக கோவா உருவாக்கப்பட்டது. நாடு திரும்பலாம் என்று முடிவு செய்த வாஸ்கோடகாமா, நிறையப் பொன்னும் வெள்ளியும் வாசனைத் திரவியங்களும் கப்பலில் ஏற்றிக்கொண்டு போர்ச்சுக்கல் கிளம்பினார். நோயுற்ற வாஸ்கோடகாமாவின் சகோதரன் பாவ்லோ நடுக்கடலில் இறந்துபோனான்.1499-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி வாஸ்கோடகாமாவின் கப்பல், லிஸ்பன் நகரை அடைந்தது. வெற்றிகரமாகத் திரும்பி வந்த கப்பல்களை அரசரே முன்னின்று வரவேற்றார். அவரோடு துணைக்குச் சென்ற 150 பேரில் 50-க்கும் குறைவானவர்களே நாடு திரும்பினர். மற்றவர்கள், வழியிலேயே இறந்துபோய் கடலில் வீசி எறியப்பட்டு இருந்தனர். வாஸ்கோடகாமாவுக்கு 'டான்’ பட்டம் அளிக்கப்பட்டதோடு, பணமும் பதவியும் அவரது தலைமுறைக்குத் தரப்பட வேண்டிய கௌவரமும் அளிக்கப்பட்டது. இந்தியாவுக்கான கடல் வழி பற்றிய வரைபடத்தைப் பார்த்த மேனுவல் மன்னர், உலகமே இனி தன் கையில் என்று துள்ளிக் குதித்தார். அடுத்த கடல் பயணத்துக்கு உத்தரவிட்டார்.1501-ல் புறப்பட்ட இந்தப் பயணத்தில் வாஸ்கோடகாமா செல்லவில்லை. அந்தக் கப்பலுக்குக் கேப்டனாக பெத்ரோ அல்வாரஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். 1502-ல் தனது இரண்டாவது கடல் பயணத்தைத் தொடங்கினார் வாஸ்கோடகாமா. இந்த முறை 13 கப்பல்கள், 5 துணைக் கப்பல்கள், நிறைய ஆயுதங்கள், போர் வீரர்கள் என்று யுத்தக் களத்துக்குச் செல்வது போல சென்றார். கடலில் எதிர்ப்பட்ட வணிகக் கப்பல்களைச் சூறையாடிப் பொருட்களைக் கொள்ளை அடித்தார். இந்தக் கடற்பயணம் பழிதீர்க்கும் யாத்திரை போலவே இருந்தது. தன்னை அவமதித்த சாமோரின் அரசனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக, பீரங்கி மூலம் காலிகட் நகரைத் தரைமட்டமாக்கி ஊரையே கொள்ளை அடித்தார் வாஸ்கோடகாமா. காலிகட் நகரம் இயங்கும் என்று உத்தரவிட்ட வாஸ்கோடகாமா, மன்னரின் செல்வங்கள் மற்றும் முக்கிய வணிகர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டார்.
கோவாவில் தனது பிரதிநிதிகளை நியமித்து விட்டு, பெரும் செல்வத்துடன் லிஸ்பன் திரும்பினார் வாஸ்கோடகாமா. இரண்டாவது கடற்பயணத்தில் அவர் ஒரு கடற்கொள்ளையனைப் போல நடந்துகொண்டார். போர்த்துக்கீசியர்களின் கையில் இந்தியாவின் வணிகம் ஏகபோகம் ஆகத் தொடங்கியது. வாஸ்கோடகாமா, கடல் வாழ்வில் இருந்து ஒதுங்கி வசதியான பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு பிரபு போல செல்வாக்கோடு வாழத் தொடங்கினார். ஆறு பிள்ளைகள் பிறந்தனர்.இந்தியாவின் வைஸ்ராயாக வாஸ்கோடகாமா நியமிக்கப்பட்டார். புதிய கௌரவத்துடன் 1524-ம் ஆண்டு தனது 56-வது வயதில் 14 பெரிய கப்பல்களில் 3,000 போர் வீரர்களுடன் தனது மூன்றாவது கடல் பயணத்தைத் தொடங்கினார் வாஸ்கோடகாமா. இந்த முறை, அவரது இரண்டாவது பிள்ளை எஸ்தவான், மூன்றாவது மகன் பவுலோ இருவரும் உடன் சென்றனர். கோவாவுக்கு வந்து, பதவி ஏற்றுக்கொண்ட வாஸ்கோடகாமா 1524-ம் ஆண்டு செப்டம்பரில் கொச்சிக்கு வந்தார். தன்னை அவமதித்த ராஜ்ஜியத்தை அடக்கி ஒடுக்கிய சந்தோஷத்துடன், தன்னால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பொறுப்புக்களைப் பகிர்ந்து கொடுத்தார். மறைமுகமாக அவரை எதிர்த்த எதிரிகளை ஒழித்துக் கட்டியதோடு, வாசனைத் திரவியங்களின் மொத்த வணிகமும் தங்கள் வசமே இருக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடுடன் செயல்படத் தொடங்கினார். ஆனால், எதிர்பாராமல் கழுத்தைச் சுற்றிக் கொப்பளங்கள் உண்டாகி தலையை அசைக்க முடியாமல் அவதிப்பட்டார். படுக்கையில் வீழ்ந்த வாஸ்கோடகாமா 1524-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி கொச்சியில் மரணம் அடைந்தார். எந்த இந்தியாவைக் காண வேண்டும் எனத் துடிப்புடன் கடல்பயணம் செய்தாரோ, அதே இந்தியாவில் அவர் இறந்துபோனார். அவரது உடல் உரிய கௌரவத்துடன் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த உடலின் மிச்சம், 1880-ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஜாதிய ஒடுக்குமுறை, அதிகாரத் துஷ்பிரேயோகம், மதச் சண்டை ஆகியவற்றால் இந்தியா பிளவுபட்டு இருப்பதை, வாஸ்கோடகாமா சரியாக உணர்ந்து கொண்டார். அந்தப் பிரச்னைகளைத் தனக்குச் சாதமாக்கிக்கொண்டு இந்தியாவை தனது பிடிக்குள் எளிதாகக் கொண்டு வர அவரால் முடிந்தது.மிளகு மற்றும் சந்தனம் உள்ளிட்ட பொருட் களுக்காகத் தொடங்கிய கடல் பயணம், நாடு பிடிக்கும் சண்டையாக மாறியதே வரலாறு. இதில், அதிக இழப்புகளையும் பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்தது இந்தியாதான்.கடந்த 300 ஆண்டுகளுக்குள் போர்த்துக்கீசியரும் பிரெஞ்சு, டச்சுக்காரர்களும், கிழக்கிந்தியக் கம்பெனியும் இந்தியாவின் இயற்கை வளங்களையும், தங்கம், வெள்ளி, வைரங்களையும் கொள்ளையிட்டு, கப்பல் கப்பலாகக் கொண்டுசென்றனர். இந்தியா திட்டமிட்டு வறுமை நாடாக உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் இன்று நடந்துவரும் பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளை வணிகம். இந்தியாவின் வளம் எப்போதும் அன்னியர்கள் அனுபவிப்பதற்கே கொள்ளை போய்க்கொண்டு இருக்கிறது என்பதுதான் காலத்தால் மாறாத உண்மை. ஏதேதோ பெரும் கனவுகளுடன் வந்த வாஸ்கோடகாமா இந்தியாவின் வைஸ்ராயாக ஆட்சி செய்தது எவ்வளவு காலம் தெரியுமா? மூன்றே மாதங்கள்தான். அலை போல எழுவதும் வீழ்வதுமான இந்த வாழ்க்கை நிலையற்றது என்பதை, வாஸ்கோடகாமாவுக்கு கடல் நிச்சயம் உணர்த்தி இருக்கும்.
விகடன்
No comments:
Post a Comment