படு விவகாரமான சர்ச்சையில் சிக்கி இருக் கிறார், வி.கே.சிங். 'டெல்லியை நோக்கி ராணுவம் நகர்ந்தது’ என்று வெளியான செய்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி எடுத்துள்ளது.
இந்திய ராணுவத்தில் என்ன நடக்கிறது?
தனது பிறந்த தேதி குழப்பத்தில், ஓர் ஆண்டு பதவி நீட்டிப்பைப் பெறுவதற்கு ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் முயற்சித்தார். அது தொடர்பான மனு ஒன்றை கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவை பிப்ரவரி 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இடைப்பட்ட இந்த நாட்களில் ஏதோ ஓர் அச்சுறுத்தலை மத்திய அரசாங்கத்துக்குத் தர வி.கே.சிங் முயற்சித்தார் என்பதுதான் இப்போது டெல்லியில் கிளம்பி இருக்கும் பூதம்!
'ராணுவத் தளபதி வி.கே.சிங், தனது பிறந்த தேதி குறித்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அதே ஜனவரி 16-ம் தேதி இரவு நேரத்தில், ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள பீரங்கிகளுடனான காலாட்படை அணி, டெல்லிக் குள் நுழைந்தது. அதேநேரத்தில், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்தும் ஒரு ராணுவ அணி டெல்லியை நோக்கி வந்தது. டெல்லி நோக்கி வருவ தற்கு இந்த இரண்டு அணிகளுக்கும் யார் உத்தரவு போட்டார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், மத்திய அரசாங்கத்துக்குத் தெரியாமல் இந்த நகர்வு நடந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் வழக்கத்துக்கு மாறாக நடந்துள்ளன. இவை, அங்கீகரிக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையாகத்தெரியவில்லை’ என்று கடந்த 3-ம் தேதி ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திதான் அத்தனை பூகம்பத்துக்கும் காரணம்.
'தனக்கு விருப்பமான காரியத்தைச் செய்துகொடுக்க மறுக்கும் மத்திய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு வி.கே.சிங் முடிவு எடுத்துவிட்டார். புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தார்’ என்று சிலர் வியாக்கியானங்கள் செய்தனர். 'இந்தச் செய்தியே முட்டாள்தனமானது’ என்று உடனடியாக வி.கே.சிங் ரியாக்ஷன் செய்தாலும், ஏதோ ஒன்று டெல்லியில் நடந்துள்ளது என்பது மட்டும் நிச்சயம்.
''கடந்த சில மாதங்களாகவே அசாதாரணமான நடவடிக்கைகளில் வி.கே.சிங் ஈடுபட்டு வந்தார். அவரது குற்றச்சாட்டுக்கள் ராணுவ மந்திரிக்கும் ராணுவத் தளபதிக்குமான மோதலாகவே முதலில் இருந்தன. மார்ச் 5-ம் தேதி ராணுவ ஊழல் ஒன்றை வெளிச்சப்படுத்தினார். 'ராணுவத்துக்குத் தேவையான ட்ரக்குகளை குறிப்பிட்ட நிறுவனத்தில் தான் வாங்கவேண்டும் என்று என்னை ராணுவ அதிகாரி ஒருவர் கட்டாயப்படுத்தினார். அதற்குப் பிரதிபலனாக 14 கோடி ரூபாய் தரத் தயாராக இருந்தார். இந்தத் தகவலை ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியிடம் நான் சொன்னேன். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று பகிரங்க மாகக் குற்றம் சாட்டினார். வி.கே.சிங் பேட்டி வெளியானதும் சி.பி.ஐ. விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவு போட்டது. ஊழலுக்கு எதிரான இவரது நடவடிக்கையாக அது பார்க்கப்பட்டது.
ஆனால், அடுத்த அஸ்திரம்தான் வி.கே.சிங் ஆபத்தானவர் என்பதைக் காட்டியது. இந்திய ராணுவத்தின் பலவீனங்களைப் பட்டியல் போடும் கடிதம் ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதினார். அந்தக் கடிதம் அப்படியே பத்திரிகையில் வெளியானது. இதனை, வி.கே.சிங்தான் வெளியிட்டு இருக்க முடியும் என்று அனைவரும் பலமாக நம்புகிறார்கள். மார்ச் 12-ம் தேதி எழுதப்பட்ட கடிதம், மார்ச் 27-ம் தேதி வெளிவந்தது. அதுவும் மிகவும் முக்கியமான ஒரு நாளில் அந்தக் கடிதம் லீக் செய்யப்பட்டது.
டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு கூட்டப்பட்ட நேரம் அது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். சீனஅதிபர் ஹூ ஜின் டாவ் அப்போது டெல்லியில்தான் இருந்தார். பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் டெல்லியில் மையம் கொண்ட வேளையில், 'இந்திய ராணுவத்தின் உள்கட்டமைப்பு மிக மோசமானது. இதை வைத்துக்கொண்டு எந்த நாட்டையும் எதிர் கொள்ள முடியாது. இதன் தொழில்நுட்பம் 97 சதவிகிதம் பழமையானது’ என்று சொல்லக்கூடிய கடிதம், மீடியாக்களில் லீக் ஆனது மிகப்பெரிய சதி நடவடிக்கைகளில் ஒன்றாகவே மத்திய உளவுத் துறையால் பார்க்கப்பட்டது.
இந்த நேரத்தில், 'டெல்லியை நோக்கி ராணுவ டாங்கிகள் விரைந்தன’ என்ற தகவல் இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கே சவாலாக அமைந்து விட்டது. ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் இதை மறுத்து விட்டார். 'ராணுவப் புரட்சி நடக்க இருந்தது என்ற செய்தி, பீதியைக் கிளப்புவதற்காக வெளியிடப்பட்டு உள்ளது. அதை அப்படியே நம்பத் தேவையில்லை’ என்று சொன்னார்.
'ராணுவப் புரட்சி நடத்த முயற்சி என்ற செய்தி ஆதாரமற்றது. நமது ராணுவத்தின் தேசப்பற்று குறித்து எனக்கு நம்பிக்கை உள்ளது’ என்று ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார். பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 'பனி மூட்டக் காலங்களில் ராணுவத் தளவாடங்களும் படைகளும் எவ்வாறு முன்னேறும் என்ற பயிற்சிக்காக அவ்வாறு அணிவகுப்பு நடத்துவது வழக்கமானதுதான்’ என்று சொன்னது. ஆனால், டெல்லி நோக்கி படைகள் நகர்ந்ததை யாருமே மறுக்கவில்லை. அதனால், ஏதோ பெரியசதித் திட்டம் நடந்தது உண்மை'' என்று அதிர்ச்சியுடன் சொல்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.
ஆனால், வி.கே.சிங் மீது தவறு இல்லை, அவரை பதவி நீக்கம் செய்வதற்காக இப்படி செய்தி கிளப்புகிறார்கள் என்று சொல்கிறார்கள் சிலர். ''ஹிசார் காலாட் படை அதி சக்தி வாய்ந்த ரஷ்ய பீரங்கிகளைக் கொண்டது. இதே மாதிரி ஆக்ராவில் உள்ள படைகள் விமானத்தில் ஏற்றப்பட்டு டெல் லிக்கு அருகே உள்ள விமானத்தளங்கள் வழியாக வர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த விஷயம் மத்திய அரசுக்குப் போகவே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. உடனே, லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சௌத்ரி இந்தப் படைகளை டெல்லிக்கு அருகேயே நிறுத்தி விட்டார்.
இந்த விவகாரம் குறித்து, பிரதமருக்குத் மறுநாள் தகவல் கொடுக்கப்பட்டது. ராணுவத் துறைச் செய லாளர் சசிகாந்த் சர்மா மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டு இருந்தார். அவர், அவசரமாக திரும்ப அழைக்கப்பட்டார். அவரிடம் விளக்கம் கேட்டது மத்திய அரசு. ராணுவ ஜெனரல் சௌத்ரி, 'இது சாதாரணமான நகர்வு. குளிர்காலத்தில் அதுவும் பனிபொழிவு சமயங்களில் ராணுவம் தன்னுடைய சரியான செயல்பாடுகளைக் காட்டுவதற்கான நகர்வு’ என்று விளக்கம் கூறியிருக்கிறார். ஆனால் மத்திய அரசு, 'பிரதமர் மற்றும் ராணுவ அமைச்சருக்குத் தெரியாமல் ராணுவ மூவ்மென்ட்டுகளை டெல்லி அருகே செய்தது ஏன்?’ என்று டென்ஷன் ஆனது.
உண்மையில் இது சாதாரண நிகழ்வுதான். இது பத்திரிகையில் வேண்டுமென்றே பரபரப்பாக வெளியிடப்பட்டு, சிங் மீது களங்கம் சுமத்தப்பட்டது. இந்தச் செய்தி வெளியான மறுநாளே இண்டியன் கார்டியன் என்கிற பத்திரிகை இது தொடர்பாக ஒரு செய்தியை வெளியிட்டது. அதில், 'மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர்தான் இந்தச் செய்திக்கு பின்னணியாக இருக்கிறார். அந்த அமைச்சரின் மகன் ராணுவத்துக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இடைத்தரகராக இருக்கிறார். இவர்கள், வெளிநாடுகளில் சந்தித்து ஆயுதப் பேரங்கள் நடத்தினார்கள். இந்தப் பேரங்களுக்கு ஜெனரல் வி.கே. சிங் தடையாக இருந்தார். அதனால்தான் இந்த அமைச்சர், ராணுவத் தளபதிக்கு எதிரான சதியில் ஈடுபட்டு இந்தச் செய்தியை பரபரப்பு ஆக்கிவிட்டார்’ என்று, இந்தப் பத்திரிகை குற்றம் சாட்டுகிறது.
ஜெனரல் வி.கே.சிங் குற்றம் சாட்டிய தேஜிந்தர் சிங்குடன், இந்த அமைச்சரின் மகனுக்கும் தொடர்பு இருக்கிறது. மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான டாட்ரா வேட்ரா நிறுவனத்தோடும் அமைச்சரின் மகன் தொடர்பில் இருக்கிறார். இதில், வி.கே.சிங் தலையிட்டுக் குறுக்கே நின்றதால், அவரை ஓரங்கட்ட நினைத்தார்கள். அதற் காகவே இந்த 'செய்திச்சதி யுத்தம்’ நடந்துள்ளது.
'ராணுவத் தளபதி ஆயுதப் புரட்சி செய்ய இருந் தார்’ என்று கேவலப்படுத்தி செய்தி வெளியானால் பயந்து தானாகவே பதவியை விட்டுப் போய்விடுவார் என்று கருதியே செய்தி வெளியிட வைத்தார்கள்'' என்று, திடுக்கிடும் தகவலை ராணுவத் தரப்பில் இருந்தே சொல்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் ஆறுதலான விஷயம், ''இந்தச் செய்தி பீதியைக் கிளப்பும் நோக்கில் வெளியிடப் பட்டுள்ளது. இதன்மூலம் ராணுவத் தளபதியின் பதவிக்கு எந்த வகையிலும் இழுக்கு ஏற்படாது'' என்று, மன்மோகன் சிங் உடனடியாகச் சொல்லி பிரச்னையை முடித்து வைத்ததுதான். மேலும், எதிர்க்கட்சியான பி.ஜே.பி-யும் இந்த விவகாரத்தில் அரசு பக்கத்தில் நிற்கிறது.
இது, ஊழல்வாதிகளின் கைங்கர்யமா அல்லது ராணுவத்தின் மிரட்டலா என்பதை அரசு தீர ஆராய்ந்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லையென்றால், இந்தியாவின் மானம் பறிபோய் விடும்...பாதுகாப்பும்தான்!
No comments:
Post a Comment