வரலாறு காணாத பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. இன்று முதல் பெரும் வேலை நிறுத்தத்தை சந்திக்க வேண்டிய அபாயத்தில் இருக்கிறார்கள் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும்.
முன்பே முடிவு செய்திருந்தபடி இன்று அரசுடன் நடக்கும் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள பெப்ஸி தயாராக இருக்கிறது. ஆனால் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சி யை செல்வமணி தலைமையிலான குழு ஒன்று வற்புறுத்தியது. அதுமட்டுமல்ல, பெப்ஸிக்கு மாற்றாக தனி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியே தீருவது என்பதில் மிக மிக உறுதியாக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்களில் பெரும்பாலோர்.
முதலில் இதற்கு சம்மதிக்காத எஸ்.ஏ.சி யை உள்ளிருப்பு போராட்டம் நடத்தி சம்மதிக்க வைத்தார்களாம். ஒருவழியாக இன்று நடக்கும் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் எஸ்.ஏ.சி. இதையடுத்து இன்று மாலை தனது அவசர பொதுக்குழுவை கூட்டியிருக்கிறது பெப்ஸி அமைப்பு.
இதில் எடுக்கப் போகும் முடிவு? நாளையிலிருந்து எந்த படப்பிடிப்புக்கும் பெப்ஸி அமைப்பு ஒத்துழைக்காது என்பதுதான். காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்படும். இதற்கிடையில் இன்னொரு தகவலும் கோடம்பாக்கத்தில் உலவுகிறது.
மே 1 ந் தேதி முதல் தமிழ் திரைப்பட பணியாளர் சம்மேளனம் என்ற புதிய அமைப்பு உருவாகப் போகிறதென்றும், அதற்கு பாரதிராஜாவே தலைவராக இருப்பார் என்றும் முணுமுணுக்கிறார்கள். ஒருவேளை இப்படி நடந்தால் தயாரிப்பாளர்களை உறிஞ்சிக் கொண்டிருக்கும் அட்டைகள் உதிர்ந்ததாகவே அர்த்தம். நஷ்டம் தாங்க முடியாமல் தெருவுக்கு வரும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும் குறையும்.
கலகம் நடக்கட்டும். நல்ல வழி பிறக்கட்டும்.
No comments:
Post a Comment