Monday, April 2, 2012

மியான்மர் தேர்தலில் ஆங் சாங் சூச்சி அபார வெற்றி. எதிர்க்கட்சி தலைவராக வாய்ப்பு.

Aung San Suu Kyi wins seat in parliament

மியான்மர் நாட்டில் நடந்த பார்லிமென்ட் இடைத்தேர்தலில், ஜனநாயக கட்சி தலைவர் அவுங் சாங் சூச்சி வெற்றி பெற்றுள்ளார்.

மியான்மர் நாட்டில், தொடர்ந்து ராணுவ ஆட்சி நடக்கிறது. கடந்த 90ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் அவுங் சாங் சூச்சி,66, அமோக வெற்றி பெற்றார். ஆனால், அவரை ஆட்சியில் அமரவிடாதபடி, ராணுவ அரசு வீட்டுக் காவலில் அடைத்தது. கடந்த 20 ஆண்டுகளில், அவர் பெரும்பாலும் வீட்டுச் சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தார். ஏழாண்டுகள் தொடர்ச்சியாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2010ம் ஆண்டு, பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின் போது, அவர் விடுதலை செய்யப்பட்டாலும், அவர் மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவரை தேர்தலில் போட்டியிடாதவாறு ராணுவ ஆட்சி சதி செய்தது. நோபல் பரிசு பெற்ற அவுங் சாங் சூச்சி, ராணுவ ஆட்சியின் ஆதிக்கத்தில் நடந்த பொதுத்தேர்தலை புறக்கணித்தார். ராணுவத்தின் ஆதரவுடன், தற்போது யூனியன் சாலிடாரிட்டி மற்றும் மேம்பாட்டு கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சி, தற்போது ஜனநாயக ரீதியாக, சில சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. மியான்மர் பார்லிமென்டில், கீழ் சபையில் 440 இடங்களும், மேல் சபையில் 224 இடங்களும் உள்ளன. இதற்கிடையே, நேற்று, பார்லிமென்டின் கீழ் சபைக்கான, 37 தொகுதிகளுக்கும், மேல் சபையின் ஆறு தொகுதிகளுக்கும் மற்றும் இரண்டு சட்டசபைத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடந்தது. 17 கட்சிகளைச் சேர்ந்த, 176 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.


சூச்சி வெற்றி: சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி, 44 இடங்களில் போட்டியிட்டது. யாங்கூன் அருகே உள்ள காவ்மு மாவட்டத்தில் சூச்சி போட்டியிட்டார். இவரை எதிர்த்து, ஆளும் கட்சி சார்பில், ராணுவ டாக்டர் ஒருவர் போட்டியிட்டார். நேற்றைய தேர்தலில் சூச்சி வெற்றி பெற்றுள்ளதால், அவர் முதன் முதலாக, பார்லிமென்டுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சூச்சி பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவரானால், மியான்மர் மீது விதிக்கப்பட்ட அமெரிக்க பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. அத்துடன், சூச்சி பார்லிமென்டில் நுழைவதால், அங்கு ஜனநாயக நடைமுறைகள் ஏற்பட வழி ஏற்படும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மியான்மருக்கு, சற்று பிரகாசமான எதிர்காலம் ஏற்பட, இந்த ஜனநாயகக் குரல் உதவும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. "ராணுவ ஆட்சியினர் இந்த தேர்தலை நடத்துவதால், இடைத்தேர்தலும் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை' என, சூச்சி முன்னதாக கூறியிருந்தார்.


தீவிர தேர்தல் பிரசாரத்தினால், கடந்த சில நாட்களாக, அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனினும், நேற்று அவர் காவ்மு தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிக்கு வந்து ஓட்டளித்தார். இந்த தேர்தலை, சர்வதேச பார்வையாளர்களும் கண்காணித்தனர். தேர்தலின் போது, வழக்கமாக நடக்கக்கூடிய சில தில்லுமுல்லுகளும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை என்ற புகார்களும் எழுந்தன. சூச்சி வெற்றி பெற்றதை கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள், யாங்கூன் உள்ளிட்ட நகரங்களில், ஆடிப்பாடி மகிழ்ச்சியை தெரிவித்தனர். மியான்மரின் ஆளுங்கட்சியை ஒப்பிடுகையில், சூச்சிக்கு 10 சதவீத உறுப்பினர்கள் கூட கிடையாது. எனவே, பார்லிமென்டில், இவர் குரல் எழுப்பினாலும் எடுபடுமா என்பது சந்தேகம் தான்.

No comments:

Post a Comment