Monday, April 30, 2012

எனது இந்தியா! ('தமிழ்நாடு’ தியாகி!) - எஸ். ராமகிருஷ்ணன்....



கைதிகள் மோசமாக நடத்தப்படுவதை எதிர்த்து, 1933-ம் ஆண்டு மே 12-ம் தேதி, கைதிகள் உண்ணா​விரதப் போராட்டத்தைத் தொடங்கினர். அதை ஒடுக்குவதற்காக, முரட்டுக் கைதிகள் மூலம் உண்ணாவிரதம் இருப்பவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக உணவைத் திணிக்க முயன்றனர் சிறை அதிகாரிகள். இந்த வன்செயலில் மகாபீர் சிங், மொகித் மித்ரா மோகன், கிஷோர் நாம்தாஸ் ஆகிய மூவரும் பரிதாபமாக இறந்தனர். அதன் பிறகு, கைதிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்டன. இதுபோலவே, 1937-ல் இரண்டாவது முறையாக, மாபெரும் உண்ணாவிரதம் அந்தமான் சிறையில் நடத்தப்பட்டது. இதை ஆதரித்து தாகூர், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் நேரு ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். 36 நாட்கள் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் அரசியல் கைதிகள் அங்கே இருந்து விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.சுதந்திரப் போராட்டக் காலத்தில் நடந்த உண்ணாவிரதங்களின் நோக்கம் ஒரு விதம் என்றால், சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த உண்ணாவிரதங்களின் நோக்கம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தன.

1952-ம் ஆண்டு, சென்னையை ஆந்திராவின் தலைநகராக அறிவிக்கக் கோரி, பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் தொடங்கினார். காந்தியவாதியான பொட்டி ஸ்ரீராமுலு, சென்னையில் பிறந்தவர். தனது 20 வயது வரை சென்னையில் படித்த இவர், பிறகு மும்பையில் உள்ள விக்டோரியா ஜுபிலி டெக்னிகல் இன்ஸ்டிடியூட்டில் படித்தார். படிப்பு முடித்த பிறகு, கிரேட் இந்தியன் பெனிசுலார் ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்தார். நான்கு ஆண்டு காலம் அங்கு பணியாற்றிய ஸ்ரீராமுலு, தனது 26-வது வயதில் மனைவியை இழந்தார். அதில் மனம் வெறுத்துப்போய் வேலையை உதறிவிட்டு, காந்தி நடத்தி வந்த சபர்மதி ஆசிரமத்தில் சேர்ந்தார். காந்திய வழியில் சுதந்திரப் போரில் தீவிரமாகப் பங்கு கொண்டு உப்பு சத்யாக்கிரகத்திலும், தனிநபர் சத்யாக்கிரகத்திலும் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். 1946 முதல் 48 வரையிலான காலகட்டத்தில், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்குள் ஹரிஜனங்​களை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, மூன்று முறை பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து இருக்கிறார்.அப்போதைய சென்னை மாகாணத்தில் தமிழ்​நாட்டு​டன் கர்நாடகா, கேரளாவின் ஒரு பகுதி, ஆந்திராவின் முக்கியப் பகுதிகள் இருந்தன. சென்னை மாகாணத்தில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்களின் நலன்களைக் காப்பதற்காகவும், தெலுங்கு மக்களின் உரிமைகளை அரசாங்கம் கேட்க வேண்டும் என்றும், தனி ஆந்திர மாநிலத்தைப் பிரிக்க  வேண்டும் என்றும் பொட்டி ஸ்ரீராமுலு வலியுறுத்தினார். தனது கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்.1952-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி சென்னை மகரிஷி புலுசு சாம்பமூர்த்தியின் இல்லத்தில் உண்ணாவிரதம் தொடங்கப்பட்டது. இதில் முக்கிய அம்சம் சென்னை மாநகரம் புதிதாக அமைய உள்ள ஆந்திராவின் தலைநகரமாக அமைய வேண்டும் என்பதே. சென்னை இல்லாத ஆந்திர மாநிலம் என்பது தலையில்லாத முண்டம் என்று அறிவித்தார் ஸ்ரீராமுலு.


ஆனால், மத்திய அரசு அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. 1952-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி நள்ளிரவு பொட்டி ஸ்ரீராமுலு இறந்து போனார். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட அவரது இறுதி ஊர்வலம், மவுன்ட் ரோட்டை அடைந்தபோது, கலவரம் ஏற்பட்டது. பொதுச் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. விஜயநகரம், தெனாலி, ஓங்கோல் விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமகேந்திரபுரம், எல்லூரு, குண்டூர், நெல்லூர் ஆகிய இடங்களுக்கும் கலவரம் பரவியது.அனகாப்பள்ளி என்ற ஊரிலும், விஜயவாடாவிலும் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் இறந்தனர். இந்தக் கலவரம் ஐந்து நாட்களுக்கு நீடித்தது. 1952-ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி, பிரதமர் நேரு சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா எனும் புதிய மாநிலம் பிரிக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்துதான், கலவரங்கள் அடங்கின. 1953-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி கர்நூலைத் தலைநகராகக்கொண்டு ஆந்திர மாநிலம்  உருவானது. எனினும், ஹைதராபாத் சமஸ்தானத்துக்கு உட்பட்ட தெலுங்கானா பகுதிகள் 1956-ம் ஆண்டு வரை ஹைதராபாத் உடனேயே இருந்து வந்தது. 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி, தெலுங்கானா பகுதிகள் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்துக்கு ஹைதராபாத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.இந்தத் தியாகத்தின் காரணமாக, பொட்டி ஸ்ரீராமுலுவை 'அமரஜீவி’ என்று, தெலுங்கு மக்கள் அழைக்கத் தொடங்கினர். ஆந்திர மாநிலம் உருவாக ஒரு பொட்டி ஸ்ரீராமுலு காரணமாக இருந்தது போல, மதராஸ் ராஜதானிக்கு 'தமிழ்நாடு’ என்று பெயர் வைக்க வேண்டும் என்று கோரி, விருதுநகரில் சங்கரலிங்க நாடார் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து கோரிக்கை நிறைவேறாமலேயே இறந்துபோனார். அவரது உயிர்த் தியாகம் தமிழ் மக்களால் நினைவுகொள்ளப்படாமல் இன்றும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதுதான் தாங்கிக்கொள்ள முடியாத துயரம்.தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் கொண்டுவரும்​போது ஏற்பட்ட நெருக்கடிகள் பற்றி, தமிழ் அறிஞர் மலர்​மன்னன் தனது கட்டுரை ஒன்றில் மிக விளக்கமாகத் தெரிவித்து இருக்கிறார். மதராஸ் ராஜதானி எனப்படும் மெட்ராஸ் ஸ்டேட்டுக்கு 'தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரும் தனிநபர் தீர்மானத்தை மாநிலங்கள் அவையில் கொண்டுவந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் குப்தா. இவர், மேற்கு வங்கத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர். இந்தத் தீர்மானம் 1963-ல் கொண்டுவரப்பட்டது. பூபேஷ் குப்தா அவையில் வைத்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய அண்ணா, 'கம்யூனிஸ்ட்டான எனது நண்பர் பூபேஷ் குப்தாவுடன் நான் எப்போதும் ஒத்துப்போவது இல்லை. ஆனால் இன்று, அவரை முழு மனதுடன் வரவேற்று ஆதரிக்கிறேன். இது, நான் கொண்டுவந்திருக்க வேண்டிய தீர்மானம். என்னை முந்திக்கொண்டு அவர் கொண்டுவந்துவிட்டதில்தான் எனக்கு ஆட்சேபம்’ என்று அண்ணா பேசியபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.

மெட்ராஸ் மாநிலத்துக்குத் 'தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற தீர்மானம் 1961-லேயே மதராஸ் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக, அன்று காமராஜர் தலைமையில் இயங்கிய அரசு, அரசின் முக்கிய ஆவணங்கள் தமிழில் அளிக்கப்படும்போது 'தமிழ்நாடு அரசாங்கம்’ என்று குறிப்பிடப்படும் என்றும், ஆங்கில மொழியில் பயன்படுத்தும்போது 'மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரே தொடர்ந்து கையாளப்படும் என்றும் இரட்டை நிலையை அறிவித்தது.அதுவே தொடர்ந்து நடைமுறையிலும் இருந்தது. இந்த நிலையில்தான், சங்கரலிங்க நாடார் 'தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டக் கோரி விருதுநகரில் உண்ணா​விரதம் தொடங்கினார்.'இப்படியான பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை. மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிடுகிற சமாசாரம் இது’ என்று, காமராஜர் கூறினார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக உடல் நலிந்து சங்கர​லிங்க நாடார் பரிதாபமாக இறந்துபோனார். அதை, அன்றைய காங்கிரஸ்காரர்கள் கேலி செய்து எழுதினார்கள்.இது மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கு பெயர் மாற்றம் கொண்டுவரும் தீர்மானம் ராஜ்ய சபாவில் கொண்டுவரப்பட்டபோது, ஒரு தமிழ் உறுப்பினர் எழுந்து, தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் என்ன ஆதாயம் என்று கோபத்துடன் கேட்டு இருக்​கிறார்.''பாராளுமன்றத்தை ஏன் லோக்சபா என்கிறோம். அதில் நமக்கு என்ன ஆதாயம் கிடைத்து​விட்டது. பிரசிடென்டை, ராஷ்டிரபதி என்று அழைக்கிறோமே... அதில் என்ன ஆதாயம் கிடைத்து இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாடு என்று பெயர் வைப்பது அதன் அடையாளத்தை குறிக்கும் செயல். பெயர் மாற்றத்தின் மூலம் உணர்வுபூர்வமான மனநிறைவு கிட்டும் என்பதுதான் உண்மையான ஆதாயம். ஒரு தொன்மையான பெயர் மீட்டு எடுக்கப்பட்டு, மக்கள் மனதில் பதியவைக்கப்படுவதுதான் ஆதாயம். பெயர் மாற்றம் என்ற ஒரு சிறிய சிரமத்தை மேற்கொள்வதற்கு இவ்வளவு சரியீடு போதாதா?'' என்று, பதில் அளித்த அண்ணா, தமிழ்நாட்டுக்கு 'சென்னை மாநிலம்’ என்ற பெயர்தான் இருக்கும் என்றால், கேரளத்துக்கு திருவனந்தபுரம், ஆந்திரத்துக்கு ஹைதராபாத், குஜராத்துக்கு ஆமதாபாத் என்றெல்லாம் பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்று சொன்னபோதும், அவையில் பலத்த சிரிப்பலை ஏற்பட்டது. இறுதியில் அந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் தோற்​கடித்தார்கள்.சென்னை மாகானத்துக்கு 1967-ம் ஆண்டு அண்ணா முதல்அமைச்சர் ஆன பிறகே, ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலுமே ’தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்பட்டது. ஆனால், தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் காரணமாக இருந்த சங்கரலிங்க நாடாரின் உயிர்த் தியாகம் இன்றுவரை முறையாக கௌரவிக்கப்படவே இல்லை.


சமகால இந்திய வரலாற்றில் தனது தொடர் உண்ணாவிரதம் மூலம் மகத்தான போராளியாக திகழ்கிறார் ஐரோம் ஷர்மிளா. கடந்த 10 ஆண்டு​களாக இவர், மணிப்பூரில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்திய ராணுவம், மணிப்பூரில் நடத்திய கொடுமைகளை எதிர்த்து அவர் போராடுகிறார். ஆனால், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம், ஊழலுக்கு எதிராக அண்ணா ஹஜாரே  எழுச்சிமிக்க உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். அதற்குப் பெரும் திரளான இளைஞர்கள் ஆதரவு தருகிறார்கள்.இன்று, உண்ணாவிரதம் என்பது வெறும் கவன ஈர்ப்பு நடவடிக்கையாக மட்டும் அல்ல... அதன் பின்னால், அரசியலும் ஒளிந்து இருக்கிறது. இந்தியா எதை தனது அற உணர்வின் வடிவமாக கைக்கொண்டதோ அதை இன்று எளிய தந்திரம் ஆக்கி​விட்டோம் என்பதுதான் வருந்தத்தக்க உண்மை.  

விகடன்

No comments:

Post a Comment