Saturday, April 21, 2012

எனது இந்தியா! ( சடலங்களால் நிறைந்த மைதானம்! ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....


தனது உத்தரவை மீறி கூட்டம் நடக்கிறதே என்று, டயருக்குக் கோபம் பொங்கியது. இரண்டு நிமிடம்கூட யோசிக்கவில்லை. கூடி இருக்கும் மக்களைச் சுட்டு வீழ்த்தும்படி படை வீரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். மறு நிமிடம், அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிக் குண்டுகள் பாயத் தொடங்கின. மக்கள் சிதறி ஓடினர். அடிவயிற்றை நோக்கி சுடும்படி கட்டளை இட்டார் டயர். மக்களைக் கதறக்கதற வேட்டையாடினார் டயர்.சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பேதமே இல்லாமல் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. சுவரில் ஏறித் தப்ப முயன்று செத்து விழுந்தவர்கள், நெரிசலில் மிதிபட்டுச் செத்தவர்கள், கிணற்றில் விழுந்து உயிர் விட்டவர்கள் என, எண்ணிக்கையற்ற உடல்கள் அந்த மைதானத்தில் சரிந்து கிடந்தன. தனது ஆத்திரம் தீரும் வரை சுட்ட ஜெனரல் டயர், இறந்துபோன உடல்களைக்கூட மறுபடியும் சுடும்படி வீரர்களை வற்புறுத்தினார்.இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. 1000 பேருக்கும் மேலான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலைஉயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர். ஜெனரல் டயரின் வீரர்கள் மாலை 5 மணிக்கு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.

ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர். மாபெரும் யுத்தக் களம் போல மாறி இருந்த அந்த மைதானத்துக்குள் நுழைந்து என்ன நடந்தது என்று பார்ப்பதற்கே மக்களுக்குப் பயமாக இருந்தது.இரவு எழுந்தது. ஒரு சிலர், தங்களது உறவுகளைத் தேடி மைதானத்துக்குள் நுழைந்தனர். மைதானம் எங்கும் இறந்துபோன உடல்கள், காயமுற்று மயங்கி வீழ்ந்த மனிதர்கள், பிய்ந்துகிடக்கும் கை-கால்கள் இருந்தன. போலீஸ்காரர்கள், மைதானத்துக்குள் மருத்துவர்களை அனுமதிக்கவில்லை. அத்தர் கௌர் என்ற இளம்பெண், இறந்துகிடந்த உடல்களைப் புரட்டி தனது கணவனைத் தேடினாள். ரத்த வெள்ளத்தில் கிடந்தது அவளது கணவன் பாக்மால் உடல். அதைக் கண்டதும் கதறித் துடித்தாள். உடலைத் தூக்கிச் செல்ல ஒரு கயிற்றுக் கட்டில் கொண்டு வந்து தருமாறு, தன்னோடு வந்திருந்த இரண்டு இளைஞர்களிடம் கைகூப்பி வேண்டினாள். இதற்கு இடையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகவே, கட்டில் எடுக்கச் சென்றவர்களால் மைதானத்துக்குத் திரும்பி வர முடியவில்லை. இருட்டுக்குள் கிடந்த கணவனின் உடலுக்கு அருகில் உட்கார்ந்தபடியே காத்திருந்தாள் அத்தர் கௌர். குண்டடிபட்டு மயங்கிக்கிடந்த ஷெரிஃப் என்ற சிறுவன் சுயநினைவு வந்து புலம்பினான். அத்தர் கௌர், அருகில் சென்றாள். அவளைத் தனது தாய் என்று நினைத்துக்கொண்டு, அம்மா நான் சாகப்போகிறேன், என்னை விட்டு எங்கேயும் போய்விடாதே என்று, ஷெரிஃப் கதறினான். அவள் கண் முன்னே ஷெரிஃப் உயிர் பிரிந்தது. இருட்டில் ஒரு நாய், இறந்த உடல்களை மோப்பம் பிடித்தபடியே அலைந்தது. கல்லெறிந்து அதை விரட்டினாள். கணவனின் உடலுக்கு அருகிலேயே படுத்துக்கொண்டு உடலை அணைத்துக்கொண்டாள் அத்தர் கௌர். அன்று இரவு வானில் நட்சத்திரங்கள் தோண்றவில்லை. நாய்களின் குரைப்பொலி இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.


வலி தாங்க முடியாமல் அலறும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது. இறந்த உடல்களுக்கு நடுவில் தனது கணவனின் உடலைக் கட்டிக்கொண்டு இரவெல்லாம் விழித்துக் கிடந்தாள் அத்தர் கௌர்.மறுநாள் காலை 6 மணிக்கு அவளது உறவினர்கள் வந்தனர். அப்போது, அத்தர் கௌரும் மயங்கிக் கிடந்தாள். தண்ணீர் தெளித்து எழுப்பியபோது அவளால் ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. உறவினர்களைப் பார்த்தவுடன் வெடித்துக் கதறி அழுதாள். இறந்த அவளது கணவன் உடலை, வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.அந்த இரவில், தான் அனுபவித்தது ஒரு நரக வேதனை. உலகில் எந்தப் பெண்ணும் அதுபோன்ற துயரத்தை அனுபவிக்கக் கூடாது என்று, பின்னாளில் சாட்சியம் அளித்தபோது அத்தர் கௌர் கூறினார்.இப்படி, ஜாலியன் வாலாபாக்கில் இறந்த உடல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு துயரக் கதை இருக்கிறது. 379 பேர் இறந்து போனார்கள், 1,000 பேர் காயம் அடைந்தார்கள் என்று, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000-க்கும் அதிகமாகவே இருக்கும். அதுபோலவே, காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2,000-க்கும் அதிகம் என்பதை, விசாரணைக் குழு கண்டுபிடித்தது.சம்பவம் நடந்த மறுநாள், 1,526 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தனர். இவ்வளவு மோசமான காயங்களை நான் கண்டதே இல்லை என்று, மருத்துவர் ஸ்மித் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். ஜெனரல் டயரின் திட்டமிட்ட இந்தப் படுகொலையை கண்டித்து, நாடே பொங்கி எழுந்தது, ஆனால், டயர் இதற்காகக் கண்டிக்கப்படவில்லை. மாறாக, கௌரவிக்கப்பட்டார். அவர், தனது ராணுவப் பதவியைத் துறந்து இங்கிலாந்துக்கு கிளம்பினார். ஜாலியன் வாலா பாக் படுகொலையைப் பற்றி விசாரிக்க, வில்லியம் ஹன்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் முன் ஆஜரான ஜெனரல் டயர், 'என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது. மேலும், அவரைக் கௌரவிக்கும் விதமாக 26,000 பவுண்ட் நிதி திரட்டி சன்மானம் வழங்கியது. 13 வெள்ளைக்கார சீமாட்டிகள் சேர்ந்து, ஜெனரல் டயருக்கு 'சேவியர் ஆஃப் பஞ்சாப்’ என்ற பட்டம் அளித்துப் புகழாரம் சூட்டினர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற இளைஞன் சபதம் செய்தான். அதற்குள், ஜெனரல் டயர் மற்றும் கவர்னர் ஓ டயர் ஆகிய இருவரும் இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டனர். இவர்களைப் பழிவாங்குவதற்காக இங்கிலாந்துக்குப் புறப்பட்டான் உத்தம்சிங். அதற்காக, வணிகக் கப்பல் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து 1921-ல் தென் ஆப்பிரிக்கா சென்று அங்கிருந்து 1923-ம் ஆண்டு லண்டனுக்குச் சென்றான்.அங்கே, ராம் முகம்மது சிங் ஆசாத் என்று பெயர் மாற்றிக்கொண்டு, ஓர் உணவகத்தில் எச்சில் தட்டு கழுவினான். கூலி வேலை செய்து சேர்த்த பணத்தில் கைத்துப்பாக்கி வாங்கினான். 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினான் உத்தம் சிங். அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும் என்று, வேண்டிக் கேட்டுக்கொண்டான் உத்தம் சிங்.ஆனால், ஜெனரல் டயரின் கதை வேறுவிதமாக முடிந்தது. பட்டம், பெருமை என வசதியாக வாழ்ந்த ஜெனரல் டயருக்கு மனச்சிதைவு நோய் ஏற்பட்டது. கூடவே, பக்கவாதம் தாக்கியது. ஆயிரக்கணக்கானோரின் மரண அலறலுக்கு காரணமாக இருந்த, ஜெனரல் டயரின் குரல்வளை முடங்கியது. பேச முடியாமல் தவித்தார். ஜாலியன் வாலாபாக்கில் கை, கால்கள் முறிக்கப்பட்டு குற்றுயிர் ஆக்கப்பட்ட சிறார்களின் சாபம் போல, அவரது கை, கால்களும் செயலற்றுப் போயின. இயற்கை அவருக்கான தண்டனையை தானே வழங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.தன் இறுதிநாள் வரை, ஜாலியன் வாலா பாக்கில் செய்தது சரியான செயலே என்று விடாப்பிடியாகச் சொல்லி வந்தார் ஜெனரல் டயர். நோய் முற்றி ரத்தநாளம் வெடித்து 1927-ல் இறந்து போனார். ஜெனரல் டயரின் மரணத்தை பஞ்சாப் மக்கள் கொண்டாடினர். இன்றும், ஜாலியன் வாலா பாக் மைதானத்தில் உள்ள சுவர்களில், துப்பாக்கிக்குண்டு துளைத்த சிதறல்களைக் காண முடிகிறது. பிரிட்டிஷ் அதிகாரம் திட்டமிட்டு நிகழ்த்திய அந்தப் படுகொலை, இந்திய வரலாற்றின் பெருந்துயரங்களில் ஒன்று.ஆயிரமாயிரம் உயிர்களைப் பலி கொடுத்துப் பெற்ற இந்திய சுதந்திரத்தை, அதன் அருமை தெரியாமல் இந்தியாவை பிரிட்டிஷ்காரர்களே ஆட்சி செய்திருக்கலாமே என்று நம்மில் ஒரு சாரார் கேலியும் கிண்டலுமாகப் பேசி வருகிறார்கள். அதைத்தான் சகிக்க முடியவில்லை.


விகடன்

No comments:

Post a Comment