இந்தக் காலத்தில் சிலபேரைப் பற்றிக் கேள்விப்படுகிறோம் - பண விஷயத்தில் ரொம்பவும் ந்யாயமாயிருப்பவர், கணக்குகளில் ரொம்பவும் கறார் என்று. ஆனாலும் இப்படிப்பட்டவர்களுடைய ஆல்-ரௌண்ட் காரக்டரை (எல்லா அம்சங்களிலும் அவர்களுடைய நடவடிக்கைகளை)ப் பார்த்தால் அவற்றில் சிலதில் த்ருப்தி இல்லாமலும் பலபேருடையது இருக்கிறது. ஒன்று இருந்தால் ஒன்று இல்லாமலிருக்கிறது. படிப்பு, வயஸு, கார்யத்திறமை எல்லாம் சேர்ந்து, நடத்தையிலும் எல்லா அம்சங்களிலும் சுத்தமாக இருக்கிறார்களா என்று பார்த்தால், எங்கேயாவது இடறுகிறது. நாமும் ‘பரவா யில்லை; அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாட்டா பாதக மில்லை’ என்று இவர்களிடம் நாட்டு நிர்வாஹத்தை ஒப்பு விக்கிறோம். ஆனால், ‘ஹ்யூமன் நேச்சர்’ (மநுஷ்ய இயற்கை) போகிற போக்கில், இப்படிக் கலந்தாங்கட்டிகளாக இருக்கிறவர்களுக்கு ஒரு பதவி, ஸ்தானம் என்பது கிடைத்த பிறகு, ஐந்துக்கு இரண்டு என்பது ஒன்று, அரை, கால், ஸைஃபர் என்று சரிந்துகொண்டே போகிறது. இதனால்தான், அர்த்த சுத்தத்தை மட்டும் சொல்லாமல், ஆனாலும் அதுதான் பொது நிர்வாஹத்தில் மிகவும் முக்யமான விஷயமாதலால், அதைப் பிரித்து முதலிடம் கொடுத்துச் சொல்லி, அதோடுகூட ‘ஆத்மசுத்தம்’ என்பதாக ஒருவனுடைய ஆல்- ரௌண்ட் காரக்டரும் பழுதில்லாமல் பூர்ணமாயிருக்க வேண்டுமென்று விதியில் சேர்த்திருக்கிறார்கள்.அந்தக் காலத்தில் ஆஸ்திக்யம், சாஸ்திராபிமானமும், தெய்வத்திடம் பயபக்தி, அடக்கம், கட்டுப்பாடு முதலிய எல்லாமே பொதுவாக ஜன ஸமூஹத்தில் ஆழமாகப் பரவியிருந்ததால் மக்களின் காரக்டர் - லெவல் மிகவும் உயர்வாயிருந்தது. இன்றுபோல் தப்பு வழிகளில் இழுக்கிற அநேகக் கவர்ச்சிகளும் அப்போது கிடையாது. எனவே, சல்லடை போட்டுத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டுமென்றில்லாமல் அங்கேயும் ஒரு சிலர் பூர்ணமாக ஆத்ம சுத்தமுடையவர்கள் என்னும்படியாக இருந்துகொண்டிருந்தார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் பொது நிர்வாஹத்துக்கு வரலாம், வர முடியும் என்று ஐந்தாவது clause (ஷரத்து) நிர்ணயித்து விடுகிறது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment