Monday, April 9, 2012

உன்னால் முடியும்!

அமெரிக்காவில் ஒரு பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு மாணவரும் தினமும் இரண்டு செயல்களைச் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள். முதலில் மாணவன் தனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும். பிறகு சுயநலம் இல்லாத கருணை மிகுந்த ஒரு செயலைச் செய்ய வேண்டும். இது கேட்பதற்கு மிகவும் சுலபமாக இருந்தது. ஆனால் செயல்படுத்துவதற்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது. முதல் செயலை யோசிக்கவே தேவை உண்டாகவில்லை. ஏனென்றால் எதைச் செய்யப் பிடிக்கும் என்று யோசித்தால் பல விஷயங்கள் நினைவுக்கு வந்துவிடும். இரண்டாவது வகை செயல்களுக்குத்தான் நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. அதுவும் ஒவ்வொரு நாள் ஒரு புதிய செயலைச் செய்ய வேண்டுமே! ஒரு மாணவன் தனக்கு மிகவும் பிடித்த பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டான். அடுத்ததாக அருகில் இருந்த ஐந்து ஏழைச் சிறுவர்களுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தந்தான். ஒரு மாணவி தன் தோழிகளுடன் சினிமாவுக்குச் சென்றாள். அதைத் தொடர்ந்து ஒருவருக்கு ரத்த தானம் செய்தாள். இத்தனைக்கும் ஊசி என்றாலே அவளுக்குப் பயம். இப்படி ஒவ்வொரு மாணவ, மாணவியும் தனக்குப் ஒரு பிடித்த ஒரு காரியத்தையும், சுயநலம் இல்லாத ஒரு காரியத்தையும் செய்தார்கள். இப்படிச் சில நாள்கள் செய்த பிறகு அத்தனை பேரும் தங்கள் ஆசிரியரிடம் கூறிய விஷயம் இதுதான். ‘நாங்கள் செய்த இரண்டு செயல்களில் முதல் செயலைவிட இரண்டாவது செயல்தான் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது‘.

மேலோட்டமாக யோசித்தால் இது கொஞ்சம் வியப்பாக இருக்கும். நமக்குப் பிடித்த செயல்களைச் செய்யும்போதுதானே அதிக மகிழ்ச்சி இருக்கும்? அப்படி இருக்க இரண்டாவது செயல் எப்படி அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளித்திருக்க முடியும்?இதற்கு விடை தெரிந்துகொள்ள வேண்டுமானால் மிகவும் சுலபமான வழி ஒன்று இருக்கிறது. அந்தச் செயல்களை நீங்களே செய்து பாருங்களேன். உங்களுக்குப் பிடித்த ஒரு காரியத்தை நீங்கள் செய்யும்போது அன்றே வேறு ஒரு சுயநலமில்லாத ஒரு செயலைச் செய்யுங்கள். இரண்டாவது வகை செயல்களுக்கு எவ்வளவோ உதாரணங்கள் உள்ளன. உங்கள் பழைய துணிகளை ஏழை மக்களுக்கு அளிக்கலாம். உங்கள் உறவினர்களிடம் உள்ள பழைய துணிகளை அவர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு அளிக்கலாம். பேருந்துக் கட்டணம் கொடுக்கக் கூட காசு இல்லாததால் நடந்து வரும் குடும்பத்துக்கு கட்டணத் தொகையை கொடுக்கலாம். சாலையில் சுமையைச் சுமந்து கொண்டு தள்ளாடி நடக்கும் முதியோர்களுக்கு அந்தச் சுமையைச் சுமந்து உதவி செய்யலாம்! பேருந்தில் செல்லும்போது குழந்தையோடு நின்று கொண்டிருக்கும் யாருக்காவது உங்கள் இடத்தைத் தரலாம். காரில் செல்லும் போது ஏழைகள், முதியவர்களை அதில் ஏற்றிச் சென்று வழியில் விடலாம். இதெல்லாம் மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தும் என்றுதான் நீங்கள் முதலில் நினைப்பீர்கள். ஆனால் பிறகு புரிந்துகொள்வீர்கள், இதுபோன்ற செயல்களெல்லாம் உங்களுக்குத்தான் அதிக சந்தோஷம் கொடுக்கும் என்பதை!

No comments:

Post a Comment