தங்கக் கடைகள் மீண்டும் தகதகக்க ஆரம்பித்து விட்டன!
இந்தியா முழுக்க நடந்துவந்த, நீடித்த கடை அடைப்புப் போராட்டத்துக்கு ஒருவழியாக முற்றுப் புள்ளி வைத்து இருக்கிறார்கள் நகை வியாபாரிகள். ''தொடர்ந்து 21 நாட்களாக நடந்த போராட்டத்தால், இந்தத் தொழிலில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு. இதில் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்பு மட்டும் 1,200 கோடி ரூபாய்Ó என்கிறார் அகில இந்திய நகை வியாபாரிகள் சம்மேளனத் தலைவர் பச்ராஜ் பமல்வா.
என்ன பிரச்னை?
நடப்பு (2012-13) நிதிஆண்டுக்கான மத்திய பட் ஜெட்டில், தங்க நகைகளுக்குப் புதிய வரி விதிப்பும், வரி உயர்வும் அறிவிக்கப்பட்டது. 'வர்த்தகப் பெயர்' (பிராண்டட்) இல்லாத தங்க நகைகளுக்கு 1 சதவிகிதம் உற்பத்தி வரி, இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு 2 சதவிகிதமாக இருந்த சுங்கவரி 4 சதவிகிதமாக அதிகரிப்பு, இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் தங்கம் மற்றும் வைர நகை வாங்குவோர், பான் கார்டு எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் என்பதுடன், தங்கம் வாங்குபவர் 1 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனால், ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் 1,000 ரூபாய் அதிகரிக்கும் நிலை உருவானது. மேலும், பான் கார்டு எண் குறிப்பிட வேண்டும் என்பதால், பெரிய விற்பனை எல்லாம் கணக்கில் வந்துவிடும், வரிப்பிரச்னை வரலாம் என்பதாலும், நாடு முழுவதும் தங்க நகை வியாபாரிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாள், அதாவது மார்ச் 17 முதல், நாடு தழுவிய கடை அடைப்புப் போராட்டத்தில் இறங்கினர். ஆரம்பத்தில் பாராமுகம் காட்டிய அரசு, அதன் பிறகு, இறங்கி வந்துள்ளது.
சோனியா காந்தி மற்றும் மத்திய நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசியதை, சென்னையைச் சேர்ந்த தங்கம் மற்றும் வைர வியா பாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி நம்மிடம் விளக்கினார்.
''சோனியா காந்தியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினோம். வரி விதிப்பு மற்றும் புதிய நிபந்தனைகளால் விலை உயர்வதோடு, பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துச் சொன்னோம். நகையை அதிகம் வாங்கும் சாதாரணப் பொதுமக்கள் மற்றும் கிராம மக்களுக்கு பான்கார்டு பற்றி எதுவும் தெரியாது என்பதை எடுத்துச் சொன்னோம். எங்கள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
அதன்பிறகு, நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி யுடன் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. உற்பத்தி வரி விதிப்பால் தங்கத்தின் விலை உயரும். மேலும், இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்கும்போது பான் எண் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் நடைமுறைச்சிக்கல்களையும் விளக்கிச் சொன்னோம். வர்த்தகப் பெயர் இல்லாத தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்ட உற்பத்திவரி ரத்து செய்யப்படும் என்று, பிரணாப் முகர்ஜி உறுதி அளித்தார். அதே நேரத்தில், பட்ஜெட் தொடர்பான நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உடனே எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதைச் சொன்னார். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி முடிவு எடுக்கப்படும் வரை, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் வரிதான் இருக்கும் என்பதால் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள் என்று பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டார்.
இந்த தங்க வரிவிதிப்பு தொடர்பான மசோதா மே மாதம் தொடக்கத்தில்தான் விவாதத்துக்கு வரும் என்பதால், மே 10 வரை எங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தோம்Ó என்றார்.
இந்தக் கடை அடைப்புப் போராட்டம், தமிழகத்தில் சில தினங்கள் மட்டும் தீவிரமாக நடந்தது. அதன்பிறகு கண்டுகொள்ளாமல், கடைகளைத் திறந்து வியாபாரம் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால், வடநாட்டில் முழுமையாக 21 நாட்கள் நடந்த காரணத்தால்தான், அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளது.
கறுப்புப் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தத்தான் பான்கார்டு அவசியமாக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது. நகைக் கடைக்காரர்கள் போராட்டத்துக்குப் பயந்து, அரசு இந்த அறிவிப்பை வாபஸ் வாங்குமா அல்லது தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருக்குமா என்பது விரைவில் தெரிந்து விடும்.
'விரைவில் அட்சயத் திருதியை’ வருவதால்தான், நகைக் கடைக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அவசர அவசரமாக விலக்கிக்கொண்டார்கள் என்றும் சிலர் முணுமுணுக்கிறார்கள்.
No comments:
Post a Comment