பள்ளிப் படிப்பு முடித்ததும், ஹைதராபாத் நல்சார் பல்கலைக்கழகத்துக்கும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துக்கும் விண்ணப்பித்தார். ஹைதராபாத்திலிருந்து சட்டம், மருத்துவம் இரண்டிலுமிருந்தே இடம் தருவதாகக் கடிதம் வந்துவிட்டது. அடுத்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் சட்டம் பயில இடம் அளிப்பதாக ஒப்புதல் கடிதம் அனுப்பியது.இளைஞர் கிருஷ்ணாவுக்கு மறு பெயர் உற்சாக ஊற்று. 8ஆவது முதல் 12ஆவது வரை சென்னை வித்யா மந்திர் பள்ளியில் படித்து, 2003ல் பள்ளியிலேயே இரண்டாவதாக வந்தார். அவர் அப்போது எடுத்துக் கொண்டது பயாலஜி குரூப்.கிருஷ்ணா, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தார். ஏன்? அதற்கு ஒரு தனிக் காரணம் இருக்கிறது. சிங்கப்பூர் கென்ட் ரிட்ஜ் பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் கிருஷ்ணா. தேர்ந்தெடுத்த படிப்பு, பி.எஸ்.சி. ஹானர்ஸ் இன் லைஃப் சயன்ஸ். நான்கு வருடப் பயிற்சிக் காலத்தில், இறுதி ஆண்டு ரிசர்ச் பிராஜக்ட் (ஆராய்ச்சிப் பணி) ஒன்று செய்தாக வேண்டும்.நான் இம்யுனாலஜி எனப்படும் துறையைத் தேர்ந்தெடுத்தேன். இம்யுனாலஜி என்றால், உடலில் அன்னியப் பொருள்களுக்கு உண்டாகிற எதிர்ப்பு குறித்த சிகிச்சைப் பிரிவு" என்கிற கிருஷ்ணா, இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. அந்தப் பிரிவில் ஆய்வு மேற்கொள்ளவும் நிறைய வாய்ப்புகள் கிருஷ்ணாவைத் தேடி வந்தன.
அதற்கு முன் கிருஷ்ணாவின் பள்ளிக் கால ஃப்ளாஷ்பேக்...
ஒரு நாள் பள்ளிக்குக் கிளம்பும் முன் ஷூக்களைப் போட முயன்றபோது, பாதங்கள் வீங்கியிருந்ததைப் பார்த்தார் கிருஷ்ணா.அம்மா, ஷூவைப் போட முடியவில்லை. கால் புஸ்ஸென்னு வீங்கியிருக்கு" என்றார். குடும்ப டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போனார்கள். அவர் பி.பி. அளவைப் பார்த்தார். அதிகமாக இருந்தது. காலில் நீர் வீக்கம் குறைய லாசிக்ஸ் மாத்திரை கொடுத்தார். கிருஷ்ணாவின் தந்தை டி.வி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததால், சுந்தரம் மெடிகல் ஃபவுண்டேஷனில் சிறுநீரகப் பிரிவில் இருந்த டாக்டர் திலீப்பிடம் மகனை அழைத்துச் சென்றார்.இது ஆட்டோ இம்யூன் கண்டிஷன் என்றும், நோய்க்குப் பெயர் க்ளோமான்லோ நெஃப்ரைடிஸ் என்றும் தெரிவித்தார் டாக்டர் திலீப். சுருக்கமாகச் சொன்னால், சிறுநீரகம் வேலை செய்யாது! அப்போது கிருஷ்ணாவுக்கு வயது பதிமூன்றுதான்!சிறுநீரகத்தின் வடிகட்டிகள் பணிபுரியாது. உடலில் இருக்கிற அத்தனை சத்துக்களும், அல்புமின் உட்பட, எல்லாமே வெளியே போகத் தொடங்கிவிடும் என்பதோடு, வடிகட்டியே பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும். மாணவர் கிருஷ்ணா மனம் தளர்ந்து போய்விடவில்லை!நான் 2003ல் வித்யா மந்திரில் படிப்பு முடித்து வெளியே வந்தேன். மேல் படிப்புக்கு சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுக்க என் சிறுநீரகப் பாதிப்புதான் காரணம். ஏனென்றால் அங்கே கல்லூரி வளாகத்திலேயே மருத்துவமனை இருந்தது. அங்கே டயாலிசிஸ் செய்துகொள்ளும் வசதியும் இருந்தது. விடுமுறையில் சென்னை வந்தபோது, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் முறைகளையும் முயன்று பார்த்தேன். எதுவும் பலன் தரவில்லை. இந்தச் சிறு வயதிலேயே எதற்கு டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செது கொண்டால் டயாலிசிஸை நிறுத்தி விடலாமே என்று முடிவெடுத்தோம். என் அம்மா தமது சிறுநீரகம் ஒன்றை தானம் செய்ய முன் வந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக, மூன்றே மாதங்களில் அந்தச் சிறுநீரகத்தை என் உடல் ஏற்காமல் நிராகரித்து விட்டது! பெற்றோரின் ஆதரவுடன் சிங்கப்பூரில் டயாலிசிஸ் செய்துகொண்டே கல்வியைத் தொடர்ந்தேன். கடைசி வருடம், அம்மா என் கூடவே இருந்தாள். ஐந்து செமஸ்டர்களிலும் நான்தான் கல்லூரியில் டாப்பர். இங்கே வந்த பிறகு மீண்டும் அப்போலோ மருத்துவமனையில் வாரம் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்து கொள்கிறேன்!" என்றார் இளைஞர் கிருஷ்ணா, அவருடைய உற்சாகம், உறுதி எல்லாமே அவர் முகத்தில் பளீரெனத் தெரிகிறது.
அதன் பிறகு, சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள ஸ்கூல் அஃப் எக்சலன்ட்ஸ் இன் லா-வில் சட்டம் படித்துத் தேறினார் கிருஷ்ணா. பி.எல். ஆனர்ஸ் பட்டம் கிடைக்க இருக்கிறது.இப்போது அமெரிக்க வாஷிங்டனில் நடைபெறவிருக்கும் ‘மூட் கோர்ட்’ என்னும் மாதிரி கோர்ட் தேர்வில் பங்கு கொள்ள, தம் கல்லூரி சார்பாகக் கலந்துகொள்ளப் போகிறார் கிருஷ்ணா! அவர் தான் குழுவின் தலைவர். கூடவே பிரகாஷ் என்ற சக மாணவர், மற்றும் ஆவுக் குழு மாணவியர். இந்தியாவிலிருந்தே மூன்று டாப் கல்லூரிகளிலிருந்து மட்டுமே இந்தப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பெங்களூர், ராபூர் மற்றும் தில்லி சட்டக் கல்லூரி.வாஷிங்டன் நகரிலுள்ள கேப்பிடல் ஹில் ஹோட்டலில் இந்த கோர்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. போட்டியில் தான் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற தன்னம்பிக்கை கிருஷ்ணாவுக்கு நிறையவே இருக்கிறது. ஆனால் அங்கும் ஒரு சிக்கல்.அங்கே தங்கியிருக்க வேண்டிய பத்து நாட்களில், நான்கு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும். அங்கே டயாலிசிஸ் செய்துகொள்வது என்றால், பல மடங்கு டாலர் செலவாகும். என்ன செய்வது?அப்போலோவில் தமக்கு டயாலிசிஸ் மருத்துவம் செய்துவரும் டாக்டர் ராஜா மகேஷ், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து விட்டாராம். அந்த நான்கு டயாலிசிஸ் சிகிச்சைக்கு ஆகும் செலவை யாராவது ஏற்க வேண்டுமே என்ற கவலை கிருஷ்ணாவுக்கு இருந்தது. அதற்கும் ஸ்பான்சர்களை ஏற்பாடு செய்துவிட்டார் கிருஷ்ணா.
சவாலாகத் தோன்றவில்லையா, கிருஷ்ணா?
சவால்தான். ஆனால் அதை வெற்றிகொள்வதில் தான் வாழ்க்கையின் சுவாரசியமே இருக்கிறது. நான் சென்ற முறை ஹாங்காங் நகருக்கு இதேபோல் ஆர்பிட்ரேஷன் மூட் கோர்ட் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளப் போயிருந்தேன். அங்கேயும் டயாலிசிஸ் செய்து கொண்டே தான் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். கடைசியாக, லண்டனில் மூன்று வார இன்டர்ன்ஷிப் எனப் படும் பயிற்சிக்காக ஒரு சட்ட நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கேயும் மருத்துவமனையை ஏற்பாடு செதபின், டயாலிசிஸ் செய்து கொண்டே தான் பயிற்சிக் காலத்தை முடித்தேன்."
உங்கள் எதிர்காலம்?
இப்போதே ஜாப் ஆஃபர்ஸ் - வேலைக்கான வாப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. முறையாகத் தகுதி பெற்றதும் ஒரு நல்ல பதவியை ஏற்றுக்கொள்வேன். மீண்டும் ஒரு முறை மாற்று சிறுநீரகச் சிகிச்சை செய்துகொண்டு இயல்பு வாழ்க்கை வாழலாம். அது வெற்றியடைந்தால், மேற்கொண்டு டயாலிசிஸ் தேவைப்படாது அல்லவா?" என்கிற கிருஷ்ணா,சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பதிவு செய்து வைத்திருக்கிறார். முறைப்படி பொருத்தமான சிறுநீரகம் அவருக்குக் கிடைக்கும்போது இரண்டாம் அறுவைச் சிகிச்சை. இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது, கிருஷ்ணா வாஷிங்டன் மூட் கோர்ட்டில் வெற்றிகரமாக விசாரணையை முடித்து பரிசைத் தட்டிக் கொண்டு வந்திருப்பார்!
கல்கி
No comments:
Post a Comment