Tuesday, April 3, 2012

இனி உங்கள் பொறுப்பு! - ஓ பக்கங்கள் , ஞாநி

அன்புள்ள அணு உலை ஆதரிப்பாளர்களான பொதுமக்களுக்கு,


வணக்கம். உங்கள் அனைவருக்கும் ஏப்ரல் 1 வாழ்த்துகள். முட்டாள்கள் தின வாழ்த்து என்று தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அன்றைய தினம் நம்மை யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என்று காலையிலிருந்தே நாம் விழிப்பாக இருப்பதால் ஏப்ரல் 1 ஐ நான் சுமார் 20 வருடங்களாக விழிப்புணர்வு தினமாகவே கொண்டாடி வருகிறேன்.அன்றைய ஒரு நாள் காலை மட்டுமல்ல, 365 நாட்களும் 24 X 7, நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவோர்தான் கூடங்குளம் அணு உலையைக் கடுமையாக எதிர்த்து வந்தோம்.இப்போது அணு உலையை இயக்குவதற்கான பணிகள் படுவேகமாக நடக்கின்றன. அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நசுக்கப்பட்டுவிட்டது. மின்சாரம்தான் முக்கியம், அதற்காக கூடங்கூளம் அணு உலை தேவை என்று நம்பிய உங்களில் பலரும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடும். மகிழ்ச்சியடைய உங்களுக்கு எதுவும் இல்லை. வருத்தப்படவும் எங்களுக்கு எதுவும் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

இருநூறு நாட்களுக்கும் மேலாக துளி வன்முறை இல்லாமல் அமைதியாகப் போராடிய கூடங்குளம் இடிந்தகரை மக்களை போலீஸ், ராணுவம், கடற்படைகளைக் கொண்டு முற்றுகை நடத்தி, சோறு, தண்ணீர், பால்,மருந்து எதுவும் போக விடாமல் தடுத்து அரசுகள் செய்த நடவடிக்கை உங்களுக்கு மெய்யாகவே மகிழ்ச்சிதானா? நாளை தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் எந்த மக்களும் எந்தக் கோரிக்கைக்காகவும், அமைதியாக வன்முறை இல்லாமல் அகிம்சை வழியில் போராடினால், இதே நடவடிக்கையை அரசுகள் எடுத்தால் சம்மதிப்பீர்களா? அந்த நம்பிக்கை இனியும் உங்களுக்கு இருக்க முடியுமா?போராட்டக் குழுவில் சிலரை முதலில் போலீஸ் கைது செய்த தகவல் கேட்டதும் கூட்டப்புளி என்ற கிராம மக்கள் தங்கள் கிராம சாலைக்கு வந்து சாலையில் அமர்ந்து மறியல் செய்தார்கள். அதில் 178 பேரைக் கைது செய்த போலீஸ் என்னென்ன குற்றச்சாட்டு களைப் பதிவு செய்தார்கள் தெரியுமா? இ.பி.கோ 143, 188, 353, 294-ஆ, 506(2), 7 1(அ) ஆகியவை. கோர்ட்டில் போலீஸ் சொன்னது இதுதான். 178 பேரும், அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பது (பிரிவு 121), அதற்காக சதி செய்வது (பிரிவு 121-அ), ரகசியமாக மறைந்திருப்பது (பிரிவு -123)" ஆகிய குற்றங்களில் ஈடுபட்டிருப்பதால், ஜாமீனே தரக்கூடாது என்றார்கள். இ.பி.கோ 121 க்கான அதிகபட்ச தண்டனை தூக்கு. இ.பி.கோ 121அ, 123 க்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை தரலாம். இதெல்லாம் யார் மீது? 30 சிறுவர்கள், 42 பெண்கள்,106 பேர் ஆண்கள் மீது!இதற்காக நீங்கள் மகிழ்ச்சியடைவீர்களா? இந்தப் போராட்டத்தில் அம்பலமானது அரசு மட்டுமல்ல; நமது ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஒவ்வொரு தூணும்தான். அரசு இடிந்தகரைப் பந்தலுக்கு எல்லா கிராமங்களிலிருந்தும் மக்கள் திரண்டு வந்து அறப்போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தடுக்கவும் உணவுப் பொருள் வழங்கலை வெட்டவும் 144 தடை உத்தரவு போட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது நீதிபதிகள் விசித்திரமான காரணம் சொல்லி தடை உத்தரவுக்குத் தடை கொடுக்க மறுத்தார்கள். அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட விரும்பவில்லையாம். அப்படியானால், அரசின் நிர்வாக முடிவான அண்ணா நூலக இட மாற்றத்துக்கு மட்டும் தடை விதித்தது எப்படி?அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள், ஊடகங்கள் என்று மூன்று முக்கிய பிரிவினரும் மேலும் மேலும் பொய்களை உங்களிடம் அள்ளி அள்ளி வீசினார்கள். ஒரு பொய் அம்பலமானதும் அடுத்த பொய்யை வீசுவார்கள். உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவுக்குத் தொண்டு நிறுவனம் வழியே வெளிநாட்டு உதவி என்ற பொய்யை ஓயாமல் டி.வி.யில் சொன்ன நாராயணசாமி, நாடாளுமன்றத்தில் அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்று ஒப்புக் கொண்டார். சாதாரண ஜெர்மன் சுற்றுச்சூழல் ஆர்வலரை ஒரு குற்றமும் சாட்டாமல் வழக்கும் போடாமல் நாடு கடத்தினார்கள். இவையெல்லாம் அம்பலமானதும் நக்சல் தொடர்பு என்று ஆரம்பித்தார்கள். இடிந்தகரை பந்தலிலே நக்சல்கள் உட்கார்ந்திருப்பதாக சொன்னார்கள். நந்திகிராம் விவசாயிகள் போராட்டம் போல இதிலும் நக்சல்கள் என்றார்கள். நந்திகிராமில் ஆரம்பம் முதல் போராட்டம் முத்தரப்பினரின் வன்முறை மோதலாக இருந்தது. கூடங்குளத்தில் துளி வன்முறையும் இல்லை. ஆயுதம் வைத் திருந்தது போலீஸ் மட்டும்தான்.

சில தினசரிகளும் டி.வி. சேனல்களும் சொன்ன பொய்கள் படுமோசமானவை. அயோக்கியத்தனமானவை. அரசின் அராஜகம், அறிஞர்களின் மழுப்பல், ஊடகங்களின் பொய்கள் பற்றியெல்லாம் இப்போது ஏன் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன் தெரியுமா? அணு உலையைத் திறக்கக்கூடாது என்று போராடிய எங்களுக்கு எதிராக மட்டும் நடந்தவை அல்ல இவை. மின்சாரத்துக்காக அணு உலை வேண்டும் என்று விரும்புகிற உங்களுக்கு எதிராகவும் இவை இனி தொடரப் போகின்றன என்பதனால்தான்.எங்களைப் பொறுத்தவரையில் இந்தப் போராட்டம் தோல்வியே அல்ல. அறவழியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களில் ஒருவர் கூட அரசின் தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் ரத்தம் சிந்த விடாமல் காப்பாற்றியது உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினரின் மிகப் பெரிய வெற்றி. போராட்டக் குழுவினருக்கு மனிதக் கேடயமாக இருந்த மக்கள், முள்ளிவாக் கால் நிலையை அடையவிடாமல் காப்பாற்றியது சாதாரண சாதனை அல்ல.எல்லாவற்றையும்விட மிகப் பெரிய வெற்றி, கடந்த 50 வருடமாக அணுசக்தித் துறையிடம் என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டோம் என்ற மமதையுடன் அஃபிஷியல் சீக்ரெட்ஸ் ஆக்டின் கீழ் அராஜகம் செய்து வந்த அணுசக்தித் தலைமை முதல் முறையாக தன்னிலை விளக்க அறிக்கைகளையும் விளம்பரங்களையும் தரும் நிலைக்கு இறக்கப்பட்டிருக்கிறது. மக்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் அலட்சியப்படுத்திவிட்டு இனி ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியவர்கள் கூடங்குளம் மக்கள்.உண்ணாவிரதம் இருக்கும் உதயகுமார் தினமும் சுடு சோறு சாப்பிடுகிறார். கூடு விட்டுக் கூடு பாவது போல தினமும் ஒரு இடத்தில் படுக்க பயந்து வீடு வீடாக ஓடுகிறார். போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு குறைந்து விட்டது. பல கிராம மக்கள் வருவதில்லை. இப்படி வரிசையாகப் பொய்கள். உலை வரக்கூடாது என்று நாங்கள் சொன்னோம். போலீஸ், ராணுவ உதவியுடன் எங்கள் மீது உலையைத் திணித்திருக்கிறது அரசாங்கம். உலை வேண்டும் என்று சொன்னவர்கள் நீங்கள். எனவே இனி அதன் பாதுகாப்புப் பற்றி எங்களைவிட அதிக அக்கறையும் எச்சரிக்கையும் உங்களுக்குத்தான் தேவை. ஏனென்றால் நாங்கள் அதைப் பற்றி முன்பே எச்சரித்து விட்டோம். எல்லாம் முறையாக நடக்கும் என்று நம்பியவர்கள் நீங்கள். முறையாக நடக்கிறதா என்று இனி கவனிக்க வேண்டியதும் நீங்கள்தான். இப்போது அணு உலையில் ஆபத்தான யுரேனியம் எரிபொருள் கோல்களை பொருத்தத் தயார் நிலை வந்துவிட்டது என்று சொல்கிறது அரசு. அப்படிப் பொருத்தும் முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்று தெளிவான விதிகளை (அரசு சார்பான) அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரி யமும், சர்வதேச அணுசக்தி முகமையும் நிர்ணயித்திருக்கின்றன. அந்த விதியில் மிக முக்கியமான விதியைப் பின்பற்றாமலே யுரேனியம் கோல்களைப் பொருத்தினால், விளைவுகளுக்கு அரசு மட்டுமல்ல; நண்பர்களே, அணு உலை ஆதரவாளர்களான நீங்களும்தான் பொறுப்பு.

அணு உலையைச் சுற்றிலும் 30 கிலோ மீட்டர் பகுதியில் உள்ள மக்களுடன் பாதுகாப்பு ஒத்திகைகள், பேரிடர் ஏற்பட்டால் அவர்களை அகற்றுவதற்கான பயிற்சிகள் இவற்றை மேற்கொள்ளாமல், யுரேனியம் எரிபொருளை உலையில் ஏற்றக்கூடாது எனபது முக்கியமான விதி. அந்த விதியைப் பின்பற்றச் செய்வது உங்கள் பொறுப்பு. முப்பது கிலோ மீட்டர் சுற்றளவில் 15 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இதுவே விதிக்கு முரணானது. இவ்வளவு மக்கள் நெருக்கம் இருக்கும் இடத்தில் உலை இருக்கக்கூடாது என்பது விதி. நீங்கள் மின்சாரம் வேண்டும் என்று கூச்சலிட்டதால் இந்த விதியை மீறி உலையை எங்கள் மீது திணித்திருக்கிறது அரசு. பேரிடர் ஒத்திகை எப்போது நடக்கும்? 15 லட்சம் மக்களை ஆபத்தென்றால் இன்னோர் இடத்துக்கு விரைந்து அழைத்துச் செல்வதற்கான ஒத்திகை எப்போது? எப்படி?அடுத்து மூன்றாவது உலை கட்டுவதற்கான விண்ணப்பத்துக்கு அமைச்சர் ஜெயராம் ரமேஷின் தலைமையில் இயங்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்திருக்கிறது. காரணம் கடலோரக் கட்டுப்பாட்டு விதியை அது மீறுவதுதான். முதல் இரு உலைகளுமே அந்த விதியை மீறியவை தான்.பேரிடர் தயார் நிலை ஒத்திகை இருக்கட்டும். விபத்து நடந்தால் இழப்பீடு பற்றிய விதி என்ன என்று அரசிடம் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்திய அரசின் இழப்பீடு சட்டம் செல்லாது என்கிறது ரஷ்யா. தானும் இந்திய அரசும் 2008ல் போட்ட ஒப்பந்தப்படிதான் இழப்பீட்டுப் பொறுப்பு என்கிறது. அந்த ஒப்பந்த விவரம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி முழுப் பொறுப்பும் இந்திய அரசுடையதுதான் என்கிறார்கள். ஒப்பந்தத்தை வெளியிட்டால்தான் உண்மை தெரியும். முழு பாதுகாப்பு உள்ள உலை என்று மார்க்ஸ், லெனின், கோர்பசேவ் மீதெல்லாம் சத்தியம் செய்யும் ரஷ்யா ஏன் இழப்பீட்டுக்கு பயப்படுகிறது என்று நீங்கள்தான் இனி விசாரிக்க வேண்டும். இதையெல்லாம் இனி இந்த முகவரிகளுக்குக் கடிதம் எழுதி நீங்கள் கேட்டுத் தெரிந்துகொண்டு எங்களுக்கும் சொன்னால் மகிழ்ச்சியடைவேன். 1. The Chairman Atomic Energy Regulatory Board, Niyamak Bhavan, Anushaktinagar, Mumbai 400 094, 2. International Atomic Energy Agency,Vienna International Centre, P.O. Box 100 A& 1400 Vienna Austria Email : Official.Mail@iaea.org 3.The Head, Safety Research Institute, IGCAR Campus, Kalpakkam 603 102, Tamil Nadu Email: ycm@igcar.gov.in, ksm@igcar.gov.in. இது தவிர அப்துல் கலாம், மன்மோகன் சிங், ஜெயலலிதா மின்னஞ்சல் முகவரிகளெல்லாம் ஏற்கெனவே உங்களிடம் இருக்கும்தானே.

அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் இந்தச் சுற்று முடிவில் கூடங்குளம் உலையை மூடச் செய்ய எங்களால் முடியாமல் போய் இருக்கலாம். ஆனால் மக்கள் வாயை இனி மூட முடியாது என்ற நிலையை கூடங்குளம் போராளிகள் அரசுகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள். நமக்கு மின்சாரம் தேவை. அதற்கு அணு உலை தேவையில்லை என்றோம் நாங்கள். நீங்களோ அணு உலை வந்தால்தான் மின்சாரம் கிடைக்கும் என்று அரசு செய்த பிரசாரத்தை நம்பினீர்கள். உங்கள் கருத்தை உருவாக்கிய அரசுகள் போலீஸ் துணையுடன் உங்கள் விருப்பப்படி உலையை இயக்கப் போகிறார்கள். இனி அந்த உலை பாதுகாப்பாக நடக்கிறது, விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதையெல்லாம் உறுதி செய்யும் பொறுப்பு எங்களுடையதல்ல. உங்களுடையதுதான். இதுவரை நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள். இனி நாங்கள் வேடிக்கை பார்க்கட்டுமா?

No comments:

Post a Comment